Spotlightசினிமா

புத்தர் உருவாக்கிய பண்பாட்டின் நீட்சி தான் ’மார்கழியில் மக்களிசை’- பா. இரஞ்சித்!!

புத்தர் உருவாக்கிய பண்பாட்டின் நீட்சி தான் ’மார்கழியில் மக்களிசை’- பா. இரஞ்சித்

மார்கழி மாதங்களில் நடத்தப்படும் பஜனை என்பதே பௌத்தப் பண்பாடு தான். புத்தர் உருவாக்கிய பண்பாட்டின் நீட்சி தான் இந்த ’மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சி என்று இயக்குனர் பா. இரஞ்சித் தெரிவித்துள்ளார்.

“தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்”, “ வானம்” போன்ற பண்பாட்டு மீட்பு இசை நிகழ்ச்சிகளை ஒவ்வொரு வருடமும் இயக்குநர் பா.ரஞ்சித் ஒருங்கிணைத்து வருகிறார். அந்த வரிசையில் இந்த வருடம் “நீலம் பண்பாட்டு மையம்” சார்பில் ”மார்கழியில் மக்களிசை 2020” எனும் மாபெரும் இசைத்திருவிழா நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியினை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குனர் பா. இரஞ்சித் உள்ளிட்டோர் தொடங்கிவைத்தனர். தொடர்ந்து 8 நாட்கள் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியின் முதல் நாள் நாட்டுபுறக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மதிப்புறு முனைவர் மதிச்சியம் பாலா, சுகந்தி, வி.எம். மஹாலிங்கம் ஆகியோர் பல்வேறு பாடல்களை பாடினர். சேலம் ஆதிமேலம் இசைக்குழுவின் இசைநிகழ்ச்சியும், வேலு ஆசான் குழுவினரின் பறை இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

முன்னதாக இந்த நிகழ்ச்சியை தொடங்கிவைத்து இயக்குனர் பா. இரஞ்சித் பேசியதாவது, ”மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. நான் கருப்பினத்தவர்களின் கலை அரசியலை தொடர்ச்சியாக பின்பற்றி வருகிறேன். அது போன்று இங்கே இருக்கின்ற மக்களை கலை, பண்பாட்டு ரீதியாக அரசியல் படுத்த வேண்டும் எனும் நோக்கத்தோடு தான் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏன் என்றால், இந்த நிகழ்ச்சி மக்களிடையே ஓர் எதிர்ப்புரட்சியை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன். அதுமட்டுமல்லாமல் தற்போது திரையிசையில், பறையிசை என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாக இருக்கிறது. இந்த இசையை நாம் மேடை ஏற்றி, அதன் மூலம் மக்களை அரசியல் படுத்த வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாகவே இருந்தது. அதன் பிரதிபலிப்பு தான் இந்த நிகழ்ச்சி. மார்கழி மாதங்களில் நடத்தப்படும் பஜனை என்பதே பௌத்தப் பண்பாடு தான். புத்தர் உருவாக்கிய பண்பாட்டின் நீட்சி தான் இந்த ’மார்கழியில் மக்களிசை’” என்று கூறினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியதாவது, ”இந்த நிகழ்ச்சியை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. சமீபத்தில் நாட்டுபுறம், கானா, பறையிசை குறித்து ஆராய்ந்த போது, நம் இசை மிகவும் பன்மையானதாக இருந்தது. இப்படிப்பட்ட இசைக்கென்று ஒரு மேடை அமைத்துக் கொடுத்த இயக்குனர் பா. இரஞ்சித் அவர்களுக்கு நன்றி. இரஞ்சித் தான் முதன் முதலில் எனது கானா கண்களை திறந்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது கானாவுக்கு என்று தனியாக ஒரு ஆல்பம் தயார் செய்துகொண்டிருக்கிறேன், விரைவில் அது வெளிவரவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இசைக்கலைஞர்களுக்கு வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் உங்களுடன் இணைந்து பணியாற்றுவேன்” என்று கூறினார்.

Facebook Comments

Related Articles

Back to top button