ராதா மோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ் மற்றும் சமுத்திரக்கனி நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது “60 வயது மாநிறம்”
தன்னையே யார் என்று தெரியாத அளவிற்கு ஞாபக மறதியான பிரகாஷ்ராஜ்ஜிற்கு விக்ரம் பிரபு மகன். வெளியூரில் வேலை பார்க்கும் நிலையால் தன் அப்பாவை ஒரு ஹோமில் சேர்த்து விடுகிறார்.
தன் அப்பாவை ஹோமிலிருந்து வெளியே அழைத்துச் செல்லும் விக்ரம் பிரபு, கவனக்குறைவால் ஹோமின் வாசலிலே விட்டுவிட்டுச் செல்கிறார். இந்நிலையில் பிரகாஷ்ராஜ் மிஸ் ஆகி விடுகிறார்.
தொலைந்து போன தனது அப்பாவைத் தேடி விக்ரம் பிரபுவும் ஹோமின் டாக்டரான இந்துஜாவும் அலைகின்றனர்.
இந்நிலையில்தான், ஒரு நபரை கொலை செய்துவிட்டு வரும் சமுத்திரக்கனியின் வாகனத்தில் பிரகாஷ்ராஜ் தெரியாமல் சிக்கிக் கொள்கிறார். கொலை பற்றி தெரிந்து கொண்ட பிரகாஷ்ராஜ்ஜை கொன்று விடு என சமுத்திரக்கனியின் பாஸிடம் இருந்து கட்டளை வர, சமுத்திரக்கனி பிரகாஷ்ராஜ்ஜை கொன்றாரா..?? தொலைந்து போன தனது அப்பாவை விக்ரம் பிரபு கண்டுபிடித்தாரா ..?? என்பதே படத்தின் மீதிக் கதை…
பல வருடங்களுக்குப் பிறகு விக்ரம் பிரபுவின் நடிப்புக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்திருக்கிறது இப்படம். அப்பாவை காணாமல் தேடி அலையும் சமயத்தில் அவரின் தவிப்பு கண்களில் ஈரத்தை வர வைத்து விடுகிறது.
பிரகாஷ்ராஜ் நடிக்காமல் வாழ்ந்து காட்டிருக்கிறார். தன்னையே யார் என்று தெரியாத நிலையிலும் தன் மகன் பெயர் சிவா என நினைவில் வைத்திருந்து மகன் மீது வைத்த பாசம் வெளிக்காட்டுகிறது. நடிப்பு ஒவ்வொன்றையும் தன் கண்களில் வைத்து மிரட்டியிருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
தான் யார் என்று தெரிந்து கொள்ள தனக்கு ஒரு வீடியோ பதிவு செய்து வைத்து பேசும் பிரகாஷ்ராஜ், தனது கண்களும், கன்னமும் துடிக்க பேசும் வசனங்கள் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள்
சமுத்திரக்கனி கொலை செய்யும் நபராக வந்தாலும், அவருக்குள்ளும் ஒரு ஈரத்தை விதைத்து விடுகிறார் பிரகாஷ் ராஜ். கடைசியாக சமுத்திரக்கனி பிரகாஷ்ராஜ்ஜின் காலில் சமுத்திரக்கனி விழும் காட்சிகளில் திரைரங்கம் முழுவதும் நிசப்தம். சமுத்திரக்கனி வழக்கம்போல் தனது நடிப்பை கச்சிதமாக பூர்த்தி செய்திருக்கிறார்.
விஜியின் வசனம் படத்திற்கு பக்க பலம். ஆங்காங்கே ஒலித்த குமரவேல் காமெடி. படத்திற்கு அதிக பக்க பலம் என்று கூறினால் இசைஞானி தான்.
படத்தின் உயிருக்கு ஒரு ஓட்டத்தை பின்னனி இசை மூலம் கொடுத்து வாழ வைத்திருக்கிறார் இளையராஜா.
முதல் பாதியில் இருந்து ஒரு ஈர்ப்பு, இரண்டாம் பாதியில் குறைந்தது படத்தினை கொஞ்சம் சருக்க வைத்திருக்கிறது.
“60 வயது மாநிறம்” – 60-க்கு மேலும் ஒரு உலகம் இருப்பதை தெளிவாக காட்டியதற்காகவே நிச்சயம் பார்க்கலாம்…