
அறிமுக இயக்குனர் பிரசாத் முருகன் இயக்கத்தில் பரத், ஷான், அபிராமி, தலைவாசல் விஜய், பி ஜி எஸ், ராஜாஜி, அஞ்சலி நாயர், பவித்ரா லக்ஷமி, சையத், கல்கி, சினி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த ”Once Upon a Time in Madras”.
இசையமைத்திருக்கிறார் ஜோஸ் ஃப்ராங்க்ளின். மேலும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள் காளிதாஸ் மற்றும் கண்ணன்.
ஃப்ரைடே ஃபிலிம் பேக்டரி நிறுவனம் சார்பாக கேப்டன் டிவி ஆனந்த் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
கதைக்குள் பயணித்துவிடலாம்…
சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு உண்மை சம்பவம்… இராணுவ வீரர்கள் வசிக்கும் இடத்திற்குள் சென்று சிறுவன் ஒருவன் பழம் பறித்ததாக கூறி அச்சிறுவன் சுடப்பட்டு இறந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது.
இந்த சம்பவத்திலிருந்து கதை ஆரம்பிக்கிறது. அவ்வாறு சுடப்பட்ட கைத்துப்பாக்கியை தூக்கி வீசி விடுகிறார் அந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர். அப்படி எறியப்பட்ட கைத்துப்பாக்கியானது நால்வரின் கைகளுக்கு சிக்குகிறது. துப்பாக்கி கைக்கு வந்ததும் அவர்களின் வாழ்க்கை என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதை.
நான்கு நபர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக துப்பாக்கி கிடைக்கிறது. அதன்பிறகு அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்..
முதலாவதாக, தலைவாசல் விஜய்யின் மகளாக வருகிறார் பவித்ரா. தனது ஜாதிதான் எப்போதும் உயர்ந்தது, ஜாதிக்காக எந்த எல்லை வரையிலும் செல்வேன் என்ற மனப்போக்கில் இருப்பவர் தலைவாசல் விஜய். தனது மகள் பவித்ரா வேறு ஒரு ஜாதியை சேர்ந்தவரை காதலிப்பதாக அறிந்த தலைவாசல் விஜய், பவித்ராவை அழைத்து கண்டிக்கிறார். ஆனால், அதை பொருட்படுத்தாமல், கரம் பிடித்தால் தனது காதலனை மட்டுமே கரம் பிடிப்பேன் என்று திட்டவட்டமாக இருக்கிறார் பவித்ரா.
ஒருகட்டத்தில் தனது காதலனை ரிஜிஸ்டர் திருமணம் செய்ய திட்டமிடுகிறார் பவித்ரா. இதனையறிந்த தலைவாசல் விஜய், கோபமாக செல்ல அப்போது அவர் கையில் துப்பாக்கி சிக்குகிறது. அதன்பிறகு என்ன நடந்தது என்பதே இந்த எபிசோடின் மீதிக் கதை..
இரண்டாவதாக, துப்புரவு தொழில் செய்யும் வேலை பார்த்து வருகிறார் அபிராமி. இவரது மகன் கார்த்தி. திருநங்கையாக மாறிவிடுகிறார். அதனை ஏற்றுக் கொள்கிறார் அபிராமி. தொடர்ந்து தனது மகனை டாக்டராக்க வேண்டும் என்று கடன் வாங்கி அவரை படிக்க வைக்கிறார். வட்டிக்கு கடன் கொடுத்தவன் அபிராமியை குடைச்சல் செய்ய, இந்த சமயத்தில் அபிராமியின் கையில் துப்பாக்கி சிக்குகிறது. அதன்பிறகு என்ன நடந்தது என்பதே இந்த எபிசோடின் மீதிக் கதை.
மூன்றாவதாக, கூலிப்படையாக இருந்த பரத், தனது காதல் மனைவியை திருமணம் செய்த பிறகு மனம் திருந்தி வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், மனைவி மருத்துவமனையில் உடல்நிலை மோசமாகி படுத்த படுக்கையாகிவிட, ஆப்ரேசனுக்கு பல லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது. இந்த சூழலில் மீண்டும் கையில் துப்பாக்கியை தூக்குகிறார் பரத். அதன்பிறகு என்ன நடந்தது என்பதே இந்த எபிசோடின் மீதிக் கதை.
நான்காவது, அப்பா கூறிய வார்த்தைக்காக ஒரு பெரிய இடத்திற்கு மருமகளாக செல்கிறார் அஞ்சலி. அங்கு அவரை பாசமாக கவனித்துக் கொள்கின்றனர். முதலிரவு முடிந்த பிறகு, அதற்கு அடுத்தநாள் முதல் கணவன் அஞ்சலியோடு இல்லற வாழ்க்கையில் ஈடுபட மறுக்கிறார். அதன்பிறகு தான் அஞ்சலிக்கு தெரியவருகிறது இங்கு ஒரு அசம்பாவித சூழல் ஒன்று சுழல்கிறது என்று. அதற்கு தீர்வு காண நினைக்கிறார். இந்த சூழ்நிலையில், அவரது கையில் துப்பாக்கி ஒன்று சிக்குகிறது. அதன்பிறகு என்ன நடந்தது என்பதே இந்த எபிசோடின் மீதிக் கதை.

இந்த நான்கு கதைகளுக்குள்ளும் துப்பாக்கி நுழைகிறது. அந்த துப்பாக்கி அவர்களது வாழ்க்கையை எப்படி மாற்றியது என்பதே இப்படத்தின் மீதிக் கதை.
மிகவும் யதார்த்தமான நடிகர், நடிகைகளை படத்தில் இணைத்தது படத்திற்கு பெரும் பலமாக பார்க்கலாம்.. எப்போதும் தனது படத்தின் கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர் நடிகர் பரத். அப்படியாக, இப்படத்திலும் தனது கேரக்டரின் வலுவை புரிந்து அக்கதாபாத்திரமாகவே மாறி அதற்கு உயிர் கொடுத்திருக்கிறார் பரத்.
அழகிலும் நடிப்பிலும் மிளிர்கிறார் அஞ்சலி. இவரது மாமியாராக நடித்தவர், மாமனாராக நடித்தவர் இருவரும் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்கள்.
இப்படியொரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்காக நடிகை அபிராமியை வெகுவாகவே பாராட்டலாம். தனது திருநங்கை மகளுக்கு ஏற்பட்ட அநீதியை நினைத்து அழும் இடத்தில் கண்கலங்க வைத்துவிடுகிறார் அபிராமி.
தான் ஒரு சீனியர் என்பதை தனது நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார் தலைவாசல் விஜய்.
காதலும் ஜாதியும் குறித்த பார்வையை சமூகத்தின் பார்வையாக பேசும் காட்சிகளில் கைதட்டல் பெறுகிறார் நடிகர் ஷான்.
ஏனைய நடிகர், நடிகைகளும் நடிப்பில் ஜொலித்திருக்கிறார்கள். சமூகத்தில் தொடர்ச்சியாக நடக்கும் ஒரு சில சம்பவங்களை மிகவும் தைரியமாக எடுத்து கூறியிருக்கிறார் இயக்குனர். திரைக்கதையின் ஓட்டத்தில் இன்னும் சற்று மெனக்கெட்டிருக்கலாம் என்று தோன்றியது.
பின்னணி இசைமற்றும் பாடல்கள் இரண்டிலுமே தனது முழு உழைப்பைக் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர். ரசிக்கும்படியாகவும் இருந்தது.
கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
இப்படியான படங்களில் வசனங்கள் பெரிதும் கவனிக்கும்படியாக இருக்க வேண்டும். அப்படியாக, ஜெகன் கவிராஜின் வசனம் கைதட்டல் கொடுக்கப்படியாக எழுதியிருக்கிறார்.
Once Upon a Time in Madras – சமூக பொறுப்பு…





