
இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய், ரோஷ்ணி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின், ரிதா, யோகன் சாக்கோ, சண்முகராஜா, அருள்தாஸ், தருண் மாஸ்டர், தயா செந்தில் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் படம் தான் வணங்கான்.
குருதேவ் ஒளிப்பதிவில் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் சாம்சியஸ் பின்னணி இசை அமைக்க உருவாகி இருக்கிறது இப்படம்.
வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
கதைக்குள் செல்வதற்கு முன்பு பாலா இதற்கு முன் எடுத்த படங்கள் அனைத்தும் எப்படி இருக்கும் என்பதை மனதில் வைத்துக் கொண்டே படத்திற்குள் நாம் பயணப்படலாம்….
காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியாக வருபவர் தான் நடிகர் அருண் விஜய். இவரது வளர்ப்பு சகோதரியாக வருபவர் ரிதா.
இருவரும் தங்களது பெற்றோர்களை சுனாமிக்கு பலி கொடுத்தவர்கள். ரிதா வளர்ப்பு சகோதரி என்பது தெரியாமல் அவர் மீது பாசத்தை கொட்டி வளர்த்து வருகிறார் அருண்விஜய். ரிதாவும் தனது அண்ணனா அருண் விஜய் மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருக்கிறார்.
தனது மனதிற்கு தப்பென்று பட்டால் உடனே தட்டி கேட்கும் பழக்கம் அருண் விஜய்க்கு உண்டு. இதனால், அவரது தங்கையான ரிதா, அருண் விஜயை மாற்றுத்திறனாளிகளின் ஹோம் ஒன்றில் செக்யூரிட்டி பணிக்கு சேர்த்து விடுகிறார்.
அங்கு, மாற்றுத்திறனாளிகள் பெண்கள் குளிப்பதை மூன்று கயவர்கள் மறைந்திருந்து பார்க்கின்றனர். இதை உணர்ந்து கொண்ட அப்பெண்கள், அருண் விஜய்யிடம் கூற, மூவரில் இருவரை மிக கொடூரமான முறையில் கொன்று விடுகிறார் அருண் விஜய்.

போலீஸ் இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறது. அதன்பிறகு அருண் விஜய் வாழ்க்கை என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் அருண் விஜய், கோட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட, அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். படத்தின் ஆரம்பத்தில் பெரியாரையும் பிள்ளையாரையும் இரு கையால் தூக்கி வரும் அருண் விஜய்யின் கதாபாத்திரம் என்னவென்பதை நாம் அதிலேயே அறிந்து கொள்ளலாம்
அநியாயத்தை தட்டிக் கேட்கும் இளைஞனாக கோபத்தை கொப்பளிக்கும் வீரனாக தனது கேரக்டருக்கு வலு சேர்த்து நடித்திருக்கிறார். மூன்று சண்டைக் காட்சியிலும் அருண் விஜய்யின் அயராத உழைப்பு கண்முன்னே நன்றாகவே தெரிகிறது. தனது தங்கையிடம் உட்கார்ந்து அழும் காட்சியாக இருக்கட்டும், க்ளைமாக்ஸ் காட்சியில் கதறி அழும் காட்சியாக இருக்கட்டும் இரண்டு காட்சிகளிலேயும் நம் கண்களில் ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்துவிட்டார்.
நாயகி ரோஷ்ணி பிரகாஷும் தனது கேரக்டரை மிக அழகாக செய்து முடித்திருக்கிறார். குறிப்பாக, கலெக்டரிடம் பேசும் போதாக இருக்கட்டும், பேருந்தில் அருண் விஜய்யுடனான உரையாடலாக இருக்கட்டும் இரண்டிலும் தனது நடிப்பின் திறனை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், கதையின் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் ரிதாவின் நடிப்பையும் நாம் வெகுவாக பாராட்டலாம். தனது அண்ணனை நினைத்து ஏங்கி ஏங்கி அழும் காட்சியில் நம்மையும் அவரோடு சேர்ந்து பயணிக்க வைத்து விட்டார் ரிதா.
சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் அனைத்தும் அக்கதாபாத்திரத்தின் வலுவை புரிந்து கொண்டு நடித்திருக்கிறார்கள்.
ஜிவி பிரகாஷ்குமார் ஒரு பாடல் கேட்கும்படியாக இருந்தாலும், மற்ற பாடல்களிலும் சற்று கவனம் செலுத்தியிருந்திருக்கலாம். பின்னணி இசையில் சாம் சி எஸ் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.
குருதேவின் ஒளிப்பதிவு படத்தினை வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்று விட்டது.
பாலாவின் படம் என்றால் தமிழ் சினிமாவில் ஒரு மார்க் உண்டு, அந்த மார்க் இப்படத்திலும் இருக்கிறது. அவரது சினிமா இப்படிதான் இருக்கும் என்றறிந்தவர்கள் மட்டும் இப்படத்தை வந்து பார்க்கலாம்.
மாற்றுத் திறனாளிகளின் வலி என்பது அனைவருக்கும் புரிந்துவிடாது என்பதை வெளிச்சமாக காட்டியிருக்கிறார் இயக்குனர். ஆனால், இவ்வளவு வெளிச்சம் தேவையா என்ற கேள்வியும் நம்மில் எழாமல் இல்லை.
மொத்தத்தில்,
வணங்கான் – ரணமான வலி..





