
இயக்கம்: ஆர் ஜே பாலாஜி
நடிகர்கள்: சூர்யா, த்ரிஷா, ஆர் ஜே பாலாஜி, இந்திரன்ஸ், நட்டி, சுவாசிகா, அனகா மாயரவி,
தயாரிப்பு: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்
இசை: சாய் அபயங்கர்
ஒளிப்பதிவு: ஜி கே விஷ்ணு
எட்டிங் – கலைவாணன்
கதைப்படி,
தனது மகளின் ஆபரேஷனுக்காக கேரளாவில் இருந்து சென்னைக்கு வருகிறார் இந்திரன்ஸ். ரயிலில் இருந்து இறங்கிய நேரத்தில் இரண்டு திருடர்கள் அவரது கையில் வைத்திருந்த நகைப்பையை கொள்ளையடித்துச் சென்று விடுகின்றனர். தனது மகளின் மருத்துவ செலவிற்காக கொண்டு வந்த அந்த நகை திருடு போனதை நினைத்து மிகவும் வருந்துகிறார் இந்திரன்ஸ். காவல்துறையில் புகார் அளிக்கிறார். அந்த நகையை காவல்துறை கண்டுபிடித்து ஒப்படைக்கிறது. அதிலும் சிறிதை திருடியவர்களை எடுத்துக் கொண்டதாகவும் கூறி விடுகின்றனர் போலீஸார்.
நகையை இந்திரன்ஸ் கையில் கொடுக்காமல் நீதிமன்றத்தில் சென்று வாங்கிக் கொள்ளவும் அறிவுறுத்துகின்றனர் போலீஸார். அதற்காக ஒரு வக்கீலை காவல் நிலையத்தில் இருக்கும் போலீஸ் சொல்லி அனுப்புகிறார். நீதிமன்றத்திற்குச் செல்கிறார் இந்திரன்ஸ். அந்த ஏரியாவின் நீதிமன்றத்தை தனி ஒரு ஆளாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் வக்கீலாக வரும் ஆர்.ஜே பாலாஜி.
அவர் எந்த வழக்குச் சென்றாலும், நீதிபதிக்கு பணம் கொடுத்து தனக்கானதாக மாற்றி அநீதிக்கு துணை போய்விடுவார் ஆர் ஜே பாலாஜி. மீறி யாராவது பேசினால், ஏரியாவில் அவரால் வளர்க்கப்பட்ட குண்டர்கள் அவர்களை அடித்து துவைத்துவிடுவார்கள்.
அவரிடம் இந்த வழக்கு கொண்டு செல்ல அந்த நகையில் எவ்வளவு கொள்ளை அடிக்கலாம் என்ற திட்டத்தில் வழக்கை எடுத்து நடத்தி காலம் தாழ்த்தி கொண்டு செல்கிறார். அதுவரையிலும் ஆர் ஜே பாலாஜிக்கும் அவரது அசிஸ்டன்ட் என்று சொல்லிக் கொள்ளும் குண்டர்களுக்கும் பணத்தை செலவழித்து வருகிறார் இந்திரன்ஸ்.
பல மாதங்களாக நகையை மீட்டுத் தரமால் இழுத்துக் கொண்டிருக்கிறார் ஆர் ஜே பாலாஜி. ஒரு கட்டத்திற்கு மேல் தனது நகை கிடைக்கவில்லை என்ற வெறுப்பில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கருப்பு கோவிலுக்கு சென்று தனது ஆதங்கத்தை கொட்டித் இருக்கிறார் இந்திரன்ஸ். இந்த சமயத்தில் அவரின் வேதனையை துடைக்க வருகிறார் கருப்பசாமி. சூர்யா உருவத்தில் கருப்பசாமி களமிறங்க ஆர் ஜே பாலாஜிக்கும் அவருக்கும் மோதல் ஆரம்பிக்கிறது. எந்த காரியம் எடுத்தாலும் பணம் மட்டுமே நீதிமன்றத்தில் வேலை செய்யும் என்ற எண்ணத்தில் இருக்கும் ஆர் ஜே பாலாஜியை கருப்பனாக வந்த சூர்யா என்ன செய்தார் என்பதே படத்தின் மீதி கதை…
படத்தின் ஆரம்பத்தில் அரை மணி நேரம் சூர்யாஇல்லாமல் கதை நகர்கிறது. ஆனால்,அந்த அரை மணி நேரத்தையும் பரபரப்பாக கொண்டு சென்று நம்மை ரசிக்க வைத்துவிட்டார் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி. சூர்யா வந்ததற்குப் பிறகு, ஒரு இடத்தில் கூட கதை தொய்வடையவிடாமல், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே படத்தின் கதையை நகர்த்திக் கொண்டு சென்று ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்.
சூர்யா ரசிகர்களுக்கு எந்த இடத்திலும் எனர்ஜி குறையாதபடி பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி. அவரது ஆக்ரோஷமான எண்ட்ரீயில் இருந்து க்ளைமாக்ஸின் இறுதி ஆட்டம் வரையிலும் தனது ரசிகர்களுக்கு தேவையான அனைத்தையும் கொடுத்திருக்கிறார் சூர்யா.
படத்தின் வில்லனாக ஆர் ஜே பாலாஜி நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரத்தை சரியாக கொடுத்திருந்தாலும் கூட, இன்னமும் வெயிட்டான ஒரு வில்லனை கொடுத்திருக்கலாமோ என்றும் நினைக்க வைத்துவிட்டார்கள்.
ஜி கே விஷ்ணுவின் ஒளிப்பதிவில் அதிரி புதிரியாக தனது ஒளிப்பதிவைக் கொடுத்திருக்கிறார். நுணுக்கமான காட்சிகள் பலவற்றைக் கொடுத்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் ஜி கே விஷ்ணு.
சாய் அபயங்கரின் இசையில், கருப்பு பாடல் புல்லரிக்க வைத்துள்ளது. திரையரங்கில் ரசிகர்கள் சாமி ஆட்டம் வந்தால் கூட ஆச்சர்யப்படுவதிற்கில்லை.
திரிஷா, இந்திரன்ஸ், நட்டி, சுவாசிகா என படத்தில் தோன்றிய அனைவருமே தங்களுக்கானதை அளவாக கொடுத்து ரசிக்க வைத்திருந்தனர்.
ஆர் ஜே பாலாஜி நடித்த படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் தோன்றுவது போல் இருந்தாலும், சூர்யாவிற்கான காட்சிகளை திறம்பட கொடுத்திருக்கிறார் இயக்குனரான ஆர் ஜே பாலாஜி.
தென் தமிழகத்தின் ரசிகர்களுக்கு இந்த படம் புல்லரிக்க வைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பத்து வருடங்களாக தோல்வியில் இருந்து மீளாத சூர்யாவிற்கு இந்த படம் ஒரு ஆறுதல் என்றே கூறலாம்.
பல தோல்வி கண்ட சூர்யாவிற்கு திரையில் மீண்டும் மிளிர ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் ஆர் ஜே பாலாஜி.




