
நடிப்பு: அஸ்வின் குமார், அர்ச்சனா ரவிச்சந்திரன், சித்து குமரேசன், வினோத் கிஷன், கலைவானி பாஸ்கர்
இயக்கம்: ஜெயச்சந்திர ஹாஷ்மி
தயாரிப்பு: சினிமம் – லிஷா பி. சந்திரன், ஆதித்யா ஜே. ராஜு
இசை: தீபன் சக்கரவர்த்தி
ஒளிப்பதிவு: கண்ணா ஆர்
படத்தொகுப்பு: ராம் பாண்டியன்
கலை இயக்கம்: சரவண அபிராமன்
தனித்தனி வீடுகளில் வசித்தாலும், ஒரே குடும்பத்தைப் போல அன்புடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து வருகின்றனர் ஒரு குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த மக்கள்.
அந்தக் குடியிருப்பில் தனது பெற்றோருடன் வசிக்கும் அர்ச்சனா, ரேடியோ ஜாக்கியாகப் பணியாற்றி வருகிறார். அவரது எதிர் வீட்டில் அஸ்வின் குமார், சித்து குமரேசன் தம்பதி புதிதாகக் குடியேறுகின்றனர்.
குடியிருப்பில் உள்ள அனைவரிடமும் அன்பாகப் பழகும் சித்துவை, அங்கிருப்பவர்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே பார்க்கின்றனர். ஆனால், தினமும் மது அருந்திவிட்டு மனைவியைத் துன்புறுத்தும் அஸ்வினை யாருக்கும் பிடிக்கவில்லை.
இதற்கிடையே, அஸ்வினுக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறியும் அர்ச்சனா, அந்தத் தகவலை சித்துவிடம் தெரிவிக்கிறார். அன்றிரவு கணவன், மனைவி இடையே மிகப்பெரிய சண்டை ஏற்படுகிறது. சித்துவின் அலறல் சத்தத்தைக் கேட்டு குடியிருப்புவாசிகள் பதறுகின்றனர்.
மறுநாள் சித்துவைக் காணவில்லை. ஆனால், அஸ்வின் எந்தவித பதற்றமும் இல்லாமல் தனது அன்றாட வேலைகளைத் தொடர்கிறார்.
சித்துவை அஸ்வின் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் குடியிருப்புவாசிகள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர். போலீஸ் விசாரணையில், தனக்குத் திருமணமே ஆகவில்லை என அஸ்வின் கூறுவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.
அப்படியானால் சித்து யார்? அவர் எங்கே சென்றார்? அஸ்வின் ஏன் அப்படிக் கூறுகிறார்? இதற்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன? என்பதே ஆக்டோபஸ் தொடரின் மீதிக்கதை.

தொடரின் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள அஸ்வின் குமார், தனது இயல்பான நடிப்பால் அசத்தியிருக்கிறார். குறிப்பாக, மது அருந்திவிட்டு குடியிருப்பில் ரகளையில் ஈடுபடும் காட்சிகளில் அவரது நடிப்பு தத்ரூபமாக அமைந்துள்ளது.
அன்பு, பயம், வலி எனப் பல்வேறு உணர்வுகளைத் தனது கண்களாலேயே வெளிப்படுத்தியிருக்கிறார் சித்து குமரேசன். குறைவான வசனங்களிலும் தனது கதாபாத்திரத்தின் தாக்கத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்துகிறார்.
மறுபுறம், துடிப்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார் அர்ச்சனா ரவிச்சந்திரன். கதையின் முக்கிய நகர்வுகளுக்கு அவரது கதாபாத்திரம் பெரும் பலமாக அமைந்துள்ளது.
வினோத் கிஷன் மற்றும் கலைவானி பாஸ்கர் இருவரின் கல்லூரிக் காதல் காட்சிகள் ஆரம்பத்தில் பிரதான கதையுடன் தொடர்பில்லாதது போலத் தோன்றுகின்றன. ஆனால், இறுதியில் அந்தக் கதையின் முக்கியத்துவம் புரியும்போது இயக்குநரின் திரைக்கதை உத்தி வியக்க வைக்கிறது.
மேலும், நடைப்பயிற்சி செல்லும் நபர் முதல் வயதான பாட்டி வரை குடியிருப்புவாசிகளாக நடித்துள்ள அனைவரும் இயல்பான நடிப்பை வழங்கியுள்ளனர்.
ஆரம்பத்தில் ஒரு தொலைக்காட்சித் தொடர் போன்ற உணர்வை ஏற்படுத்தும் ஆக்டோபஸ், அடுத்தடுத்த அத்தியாயங்களில் முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை வழங்குகிறது.
சாதாரண குடியிருப்பு வாழ்க்கைக்குள் ஒரு மர்மத்தை உருவாக்கி, அதிலிருந்து பல எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டுவருகிறார் இயக்குநர் ஜெயச்சந்திர ஹாஷ்மி.
வெறும் மர்மத் தொடராக மட்டும் இல்லாமல், ஆணவக் கொலை மற்றும் சாதிய மனப்பான்மை போன்ற சமூகப் பிரச்சினைகளையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.
நாகரிகமான வாழ்க்கை முறைக்கு மத்தியிலும் சாதிய எண்ணங்கள் எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளன என்பதைத் தொடர் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. குறிப்பாக, அர்ச்சனாவின் தந்தை பேசும் வசனங்கள் சமூகத்தின் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கின்றன. அதற்கான பதிலடியும் தரமான சம்பவம் தான்..
இரண்டு வெவ்வேறு கதைக்களங்களை ஒரே புள்ளியில் இணைக்கும் கிளைமாக்ஸ் காட்சி தொடரின் மிகப்பெரிய பலம்.
கண்ணா ஆரின் ஒளிப்பதிவு, நமது வீட்டிற்கு அருகிலேயே சம்பவங்கள் நடைபெறுவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
தீபன் சக்கரவர்த்தியின் பின்னணி இசை மர்மமான காட்சிகளின் பதற்றத்தை மேலும் அதிகரிக்கிறது. ஒளிப்பதிவும் இசையும் தொடரின் இரண்டு முக்கியத் தூண்களாக அமைந்துள்ளன.
கல்லூரிக் காதல் மற்றும் குடியிருப்பு வாழ்க்கை என இரண்டு கதைகளையும் சமமாக நகர்த்தி, இறுதியில் நேர்த்தியாக இணைத்திருக்கும் ராம் பாண்டியனின் படத்தொகுப்பு பாராட்டுக்குரியது.
பிளஸ்
அஸ்வின் குமார், அர்ச்சனா மற்றும் சித்து குமரேசனின் நடிப்பு.
எதிர்பாராத திரைக்கதைத் திருப்பங்கள்.
சமூக அக்கறையுடன் கூடிய கதைக்களம்.
இயல்பான கதாபாத்திரத் தேர்வு.
ஒளிப்பதிவு, பின்னணி இசை மற்றும் படத்தொகுப்பு.
அனைத்து மர்மங்களுக்கும் விடையளிக்கும் கிளைமாக்ஸ்.
மைனஸ்
ஆரம்ப அத்தியாயங்களில் தொலைக்காட்சித் தொடர் போன்ற உணர்வு.
கல்லூரிக் காதல் காட்சிகள் ஆரம்பத்தில் கதையின் வேகத்தைக் குறைப்பது போன்ற தோற்றம்.
ஒரு சாதாரண குடும்பக் கதையாகத் தொடங்கி, மர்மம், சஸ்பென்ஸ், சமூக அவலம் எனப் பல்வேறு தளங்களில் பயணிக்கும் ஆக்டோபஸ், இறுதியில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
நேர்த்தியான கதையும், எதிர்பாராத திருப்பங்களும், யதார்த்தமான நடிப்பும் இணைந்து ரசிகர்களைச் சீட்டின் நுனியில் அமர வைக்கின்றன.
ஆக்டோபஸ் – மர்மத்தின் பின்னால் மறைந்திருக்கும் சமூகத்தின் கோர முகம்!





