
இயக்கம்: பிரவீன் கே
நடிகர்கள்: விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்ரி, சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ்
தயாரிப்பு – விஷ்ணு விஷால் (விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்)
ஒளிப்பதிவு – ஹரீஷ் கண்ணன்
எடிட்டர் – ஷான் லோகேஷ்
இசை – ஜிப்ரான்
ஸ்டண்ட் – ஸ்டண்ட் சில்வா, பிசி ஸ்டண்ட்ஸ் பிரபு
கதைப்படி,
ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒரு தனியார் டிவி சேனலில் நேரலையில் பிரபலங்களை பேட்டி எடுக்கும் பத்திரிகையாளர். இவரின் இந்த ஷோ’விற்கு தமிழகத்தில் ரசிகர்கள் பலர்.
அப்படியாக, ஒருநாள் தமிழ் சினிமாவின் இளம் நடிகர் ஒருவரை பேட்டி எடுக்கும் நேரத்தில், அறையில் ரசிகர்கள் கூட்டத்தில் இருந்த செல்வராகவன் அந்த நடிகருக்கு எதிராக தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருந்த நேரத்தில் இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து, அந்த நடிகரின் காலில் சுடுகிறார்.

இதனால், அந்த அரங்கமே அதிர்ச்சியில் கூச்சலிட, அந்த அரங்கை விட்டு வெளியே செல்லாதவாறு அனைத்து கதவுகளையும் அடைத்துவிடுகிறார் செல்வராகவன்.
தொடர்ந்து, இன்னும் ஒரு மணி நேரத்தில் இங்கு ஒரு கொலை நடக்கப் போவதாகவும் கூறுகிறார். போலீஸார் தொலைக்காட்சி நிறுவனத்தை கையில் எடுக்கின்றனர்.
வரும் ஐந்து நாட்களில் தொடர்ச்சியாக ஒருவர் வீதம், ஐந்து பேரை தான் கொலை செய்யப் போகிறேன் என்றும் கூறுகிறார். ஆனால், நான் இப்போது தற்கொலை செய்கிறேன் என்று கூறி, கையில் இருந்த துப்பாக்கியை வைத்து தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொள்கிறார் செல்வராகவன்.
இது என்ன மாதிரியான நிலை என்று போலீஸார் திணறுகிறார்கள். இந்த வழக்கை விசாரிக்க திறமையான போலீஸ் அதிகாரியாக வரும் டிஎஸ்பி விஷ்ணு விஷாலை போலீஸ் உயரதிகாரிகள் வரவழைக்கின்றனர்.

வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார் விஷ்ணு விஷால். செல்வராகவன் கூறியபடியே அடுத்த நாள் மாலை 6 மணியளவில் வீடியோ ஒன்றில் தோன்றி இறக்கப் போவரின் பெயரைக் கூறி, இன்னும் சரியாக ஒரு மணி நேரத்தில் அவரை கொலை செய்து விடுவேன் என்றும் கூறுகிறார்.
சரியாக ஒரு மணி நேரத்தில், டெலிபோன் பூத் ஒன்றில் போன் பேசிக் கொண்டிருந்த நபர் பாம் வெடித்து இறக்கிறார்.
அதிரடியாக களத்தில் இறங்கி தனது விசாரணையைத் தீவிரப்படுகிறார் விஷ்ணு விஷால். விசாரணையில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.
தொடர்ந்து, அடுத்தடுத்த கொலைகள் அரங்கேற இறுதியில் செல்வராகவன் இறந்தும் இந்த கொலைகள் எப்படி நடக்கின்றன.? எதற்காக அவர் இந்த கொலைகளை செய்கிறார்.?? அவர்களுக்கும் செல்வராகவனுக்கும் என்ன சம்மந்தம்.??? உள்ளிட்ட கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் விடை வைத்திருக்கிறார் இயக்குனர் பிரவீன் கே.
வழக்கம் போல், தனது கதைத் தேர்வில் மிக கவனமாக இருந்திருக்கிறார் விஷ்ணு விஷால். இவரது படம் என்றாலே நம்பி போகலாம் என்ற ரசிகர்களின் மனநிலையை இந்த படத்திலும் அதனை நிரூபணம் செய்திருக்கிறார்.
ராட்சசன் படத்திற்குப் பிறகு போலீஸ் கதாபாத்திரத்தில், மிகவும் மிடுக்காகவும் தனது நடிப்பினை படத்திற்கு படம் மெருகேற்றியும் கொண்டு சென்றிருக்கிறார் விஷ்ணு விஷால். தனது இன்வஸ்டிகேஷன் தேடலின் வேட்கையை நன்றாகவே படத்தின் கதாபாத்திரம் மூலம் வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.

ஹார்பரில் நடக்கும் சண்டைக் காட்சிகளிலும் தனது அதிரடியான ஆக்ஷன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த சண்டைக் காட்சியை கம்போஸ் செய்த விதமும் க்ளாஸ்.
தனது காக்கிச் சட்டை மீது வைத்திருந்த காதலால் காதல் மனைவி மானசா செளத்ரியுடனான பிரிவு என நடிப்பில் நன்றாகவே மிளிர்ந்திருக்கிறார் விஷ்ணு விஷால்.
மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், தனது கதாபாத்திரத்தை அளவாக செய்து முடித்திருக்கிறார். காட்சிகளில் அழகு தேவதையாக வந்து காட்சியளித்து சென்றிருக்கிறார் மானசா செளத்ரி.
பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து மிரட்டியிருந்த செல்வராகவன், இப்படத்திலும் தனது அழகர் (எ) நாராயணன் கதாபாத்திரத்தை மிரட்டலாக செய்து முடித்திருக்கிறார். இவரின் நடிப்பாலே கதையின் வலு இன்னும் அதிகரித்திருக்கிறது. க்ளைமாக்ஸில் இவர் பேசும் வசனங்கள் கலங்க வைத்திருக்கிறது.
படத்தில் தோன்றிய மற்ற நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களை தெளிவாக நடித்து முடித்திருந்தனர்.

தனது முதல் படத்திலேயே முத்திரை பதிக்கும்படியான ஒரு படைப்பைக் கொடுத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர் பிரவீன். படம் துவங்கிய பத்தாவது நிமிடத்திலேயே இறந்தவர் எப்படி கொலை செய்வார் அது எப்படி முடியும் என்ற கேள்வியை நமக்குள் எழுப்பிய இயக்குனர், அதனை படம் இறுதிவரையிலும் கொண்டு சென்று விட்டார்.
அடுத்த கொலை எப்படி நடக்கும்.? அடுத்த கொலை எப்படி நடக்கும் என்ற ஒரு தூண்டலை நமக்குள் கடத்திக் கொண்டே படத்தினை நகர்த்தியிருந்தார் இயக்குனர். இவர்களை ஏன் கொலை செய்ய வேண்டும் என்று நாம் எண்ண வேண்டிய தருணத்தில் சட்டென நம்மை நாமே கேள்வி கேட்க வைத்துவிட்டார்.
“ஓ… ஆமால்ல இவ்ளோ நாளா நாமலும் அப்படி தானே இருந்திருக்கோம்” என்று படம் பார்க்கும் ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் கேள்வியை எழ வைத்துவிட்டார் இயக்குனர் பிரவீன்.
பரபரவென்று செல்லும் ஒரு இன்வஸ்டிகேஷன் த்ரில்லர் படமாக மட்டுமல்லாமல், சமூகத்திற்கு ஒரு மேசேஜையும் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார் இயக்குனர்.
ஜிப்ரானின் இசையில் பின்னணி இசையானது அதிரடிக கொண்டு செல்லாமல், கதையோடு நம்மையும் சேர்ந்து பயணிக்கும் வண்ணம் அழகான ஒரு இசையைக் கொடுத்திருக்கிறார்.
ஹரீஷ் கண்ணனின் ஒளிப்பதிவு காட்சிகளை மிக அழகாக படம் பிடித்திருக்கிறது. குறிப்பிட்டுச் சொல்ல ஒரு காட்சி என்றால் ஹார்பர் சண்டைக் காட்சி.
டயலாக்கை குறைத்து சற்று காட்சிகளிலும் வேகத்தை அதிகரித்துக் கொண்டு சென்றிருக்கலாம்..
மொத்தத்தில்,
ஆர்யன் – விஷ்ணு விஷாலின் த்ரில்லர் ஆட்டம்..





