Spotlightசினிமா

அசோக் செல்வனுக்கும் நாயுக்குமான எமோஷன் தான் ‘ஜாக்’!

திருடன் போலீஸ், ஒரு நாள் கூத்து, புரூஸ்லீ, சர்வர் சுந்தரம், ஆகிய படங்களை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் ‘வான்’ படத்தை தயாரிக்கும் கெனன்யா ஃபிலிம்ஸ் அடுத்து ஒரு நாயை மையமாக வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறது.

புரூஸ்லீ படத்தை இயக்கிய பிரஷாந்த் பாண்டிராஜ் இந்த படத்தை இயக்குகிறார். ‘ஜாக்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கிறார்.

இது குறித்து தயாரிப்பாளர் செல்வக்குமார் கூறும்போது, “இது ராணுவ நடவடிக்கைகளை மையப்படுத்திய படம். எங்கள் நிறுவனத்தில் அனைத்து விதமான படங்களையும் எடுப்பது என்பதில் நான் உறுதியாக இருந்திருக்கிறேன். இதுவரை விலங்குகளை வைத்து எந்த படத்தையும் நாங்கள் எடுத்ததில்லை.

இந்த கதையை பிரஷாந்த் என்னிடம் சொன்னபோது, இந்த படம் தேசிய அளவில் கவனம் பெறும் என உணர்ந்து மகிழ்ச்சி அடைந்தேன். அசோக் செல்வன் எந்த வகை படமாக இருந்தாலும் எளிதாக பொருந்தி விடுகிறார். ராணுவ வீரருக்குண்டான உடல் அமைப்பும் அவருக்கு இருக்கிறது. கோகுல் பினாய் (ஒளிப்பதிவு), ஜஸ்டின் பிரபாகர் (இசை), திலீப் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி), பாபா பாஸ்கர் (நடனம்) என படத்தின் மதிப்பை கூட்டும் வகையில் மிக திறமையான கலைஞர்களை படத்துக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறோம். கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.

படத்தின் இயக்குனர் பிரஷாந்த் பாண்டிராஜ் கூறும்போது, “ஜாக் என்ற தலைப்புக்கு சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வாய்ப்பு உள்ளது. இந்த கதையை சில காலம் முன்பே எழுதி விட்டேன். இது ராணுவத்துக்கு பயிற்சி கொடுக்கப்பட்ட ஒரு நாயை பற்றிய கதை என்பதால் கதைக்கு நிறைய ஆராய்ச்சி தேவைப்பட்டது. வெறும் நாயை வைத்து எடுக்கப்படும் பொழுதுபோக்கு படம் இல்லை, படத்தின் ஆதாரமே எமோஷன் தான்.

போர்க்காட்சிகளில் நாயகனுக்கும், நாய்க்கும் இடையே உள்ள பிணைப்பு தான் படத்தின் ஒரு முக்கிய ஹைலைட். அசோக் செல்வன் இந்த படத்துக்கு பிறகு நல்ல உயரத்துக்கு போவார், நாயகி தேர்வு நடந்து வருகிறது. நல்ல தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தின் பெரிய பலம். அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது” என்றார்.

Facebook Comments

Related Articles

Back to top button