
அசோக் வீரப்பன் இயக்கத்தில் வைபவ், ஆந்தகுடி இளையராஜா, அனேகா, தமிழ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “பபூன்” . அழிந்து வரும் கலைக்கூத்தை மையப்புள்ளியாக வைத்து ஆரம்பிக்கும் படமாக இப்படம் அமைந்திருக்கிறது.
கதைப்படி,
பாரம்பரியமாக கலைக்கூத்து கலைஞர்களாக வருகின்றனர் வைபவ் குடும்பத்தினர். வைபவின் தந்தை மிகப்பெரும் கலைஞனாக இருக்கிறார். கூத்துகளில் பபூன் வேடம் அணிந்து வருபவர் வைபவ். இவரது நண்பராக வருபவர் இளையராஜா.. இவரும் கூத்துக் கலைஞன்.
போதுமான வருமானம் இல்லாததால், வேறு வேலை பார்த்து சம்பாதித்து வெளிநாடு செல்ல திட்டமிடுகிறார் வைபவும் அவரது நண்பரான இளையராஜாவும்.
இதற்காக லாரி ஒன்றில் டிரைவராக வேலை பார்க்கிறார். அப்போது, அந்த லாரியில் கடத்தல் பொருள் இருக்க.. போலீஸார் வைபவையும் இளையராஜாவையும் கைது செய்கின்றனர்.
காவல்நிலையம் அழைத்துச் செல்லும் முன் அங்கிருந்து இருவரும் தப்பித்து விடுகின்றனர் இருவரும்.
அதன் பிறகு இவர்களது வாழ்க்கை என்னவானது.? இதற்கு பின்னால் நடக்கும் அரசியல் என்னென்ன என்பதே படத்தின் மீதைக் கதையாக வந்து நிற்கிறது இந்த “பபூன்”.
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அதில் எந்த வித ரிஸ்க் எடுக்காமல் தனக்கென ஒரு ஸ்டைலில் ஓரளவிற்கு நடித்து செல்பவர் நடிகர் வைபவ். ஆழமான கதையாக வந்திருந்த இப்படத்தில், வைபவ் இன்னும் சற்று அதிகமாகவே மெனக்கெடல் செய்து படத்திற்கு உயிர் கொடுத்திருக்கலாம்.
நாட்டுப்புறப்பாடல் மூலம் மிகவும் பிரபலமான ஆந்தகுடி இளையராஜா, இப்படத்தில் தனக்கென ஒரு முத்திரையை கொடுத்திருக்கிறார். சிறப்பாக நடித்து அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார்.
படத்தின் நாயகியான அனேகா, எந்த இடத்திலும் காதலுக்கான இடமும் இல்லாமலும், சிரிப்புக்கான இடமும் இல்லாமலும் அழகு தேவதையை அழுகாச்சியாக கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.
வலுவான கதையை கையில் எடுத்த இயக்குனர், நட்சத்திரங்களின் தேர்வையும் இன்னும் சற்று ஆழமாக எடுத்திருக்கலாம்.
சந்தோஷ் நாராயணின் இசை, “நான் ஒரு பக்கம் செல்கிறேன்.. நீங்கள் ஒரு பக்கம் செல்லுங்கள்” என்பது போல் அமைந்திருக்கிறது பின்னணி இசை.
பாடல்களும் பெரிதாக மனதில் ஒட்டவில்லை… ஒளிப்பதிவு படத்திற்கு சற்று ஆறுதல்.
தனபால் கதாபாத்திரத்திற்கு மிகப்பெரும் பில் டப் கொடுத்துவிட்டு, அதற்கான காட்சிகள் பெரிதளவில் வைக்காதது வருத்தமே…
டாணாக்காரன் இயக்குனரான தமிழ் அவர்களின் நடிப்பு மிரட்டல்.
நிகழ்கால அரசியல், இலங்கை தமிழர்கள், என பல கதைகளை உள்ளே எடுத்த இயக்குனர் பல வழிகளில் பயணம் செய்திருக்கிறார்.
பபூன் டைட்டிலுக்கும் படத்தின் ஓட்டத்திற்கும் சிறிதும் சம்மந்தம் இல்லாத கதையாக நகர்ந்து நம்மை சோதனை செய்து விட்டது இந்த பபூன்.
பபூன் – பலிக்கவில்லை…





