
‘அக்னி சிறகுகள்’ படக்குழு கல்கத்தாவில் முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகு, இப்போது ரஷ்யாவிலுள்ள கஜகஸ்தானில் இரண்டாம் கட்டப் படிப்பிடிப்பையும் வெற்றிகரமாக முடித்திருக்கின்றனர்.
அருண் விஜய், விஜய் ஆன்டனி மற்றும் அக்ஷரா ஹாசன் போன்ற நட்சத்திரங்களுடன் படத்தின் பெரும் பகுதியை அங்கே படமாக்கியிருக்கிறார் இயக்குநர் நவீன்.
இது குறித்து கூறிய படத்தின் இயக்குநர் நவீன்..
“அல்மதி நகரின் அழகை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம். இயற்கை எழிலும் பாரம்பரியமும் பின்னிப் பிணைந்த அல்மதி நகரில் படப்பிடிப்பை நடத்தியதை, பரவசம் தந்த ஒரு புனிதமான அனுபவம் என்றே கூற வேண்டும்.
பனி போர்த்திய மலை முகடுகள், தங்கமென மின்னும் பாலைவன மணல் துகள்கள், கண்களுக்கு விருந்தளிக்கும் செங்குத்தான பள்ளத்தாக்குகள் ஆகியவற்றைப் பார்க்கும்போது ஏதோ கனவுலகில் மிதப்பது போலத்தான் இருந்தது.
இங்கு படப்பிடிப்பை நடத்தியது குறித்து ஒட்டு மொத்தக் குழுவும் மகிழ்ச்சியடைந்ததோடு, அல்மதி நகரில் படப்பிடிப்பை நடத்திய முதல் இந்தியப் படம் அக்னி சிறகுகள் என்பது குறித்தும் மிகவும் பெருமை கொள்கிறோம்.
அது மட்டுமல்ல…. உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கும் சில சண்டைக் காட்சிகளையும் இங்கு படமாக்கியிருக்கிறோம்.
ஆயுதங்களின்றி வெறும் கைகளால் சண்டையிடும் மார்ஷல் ஆர்ட் தற்காப்பு வகையில் ஒரு வகையான நொம்ட்ஸ் என்ற கலையில் இங்குள்ள குழுக்கள் நிபுணத்துவம் பெற்றிருக்கின்றன. சண்டைக் காட்சிகள் மட்டுமின்றி குதிரையேற்றம் போன்ற சாகசங்களிலும் வல்லவர்கள் இவர்கள். ‘அக்னி சிறகுகள்’ படத்தில் இடம் பெறும் இந்தப் புதுமையான சண்டைக் காட்சிகள், நமது ரசிகர்கள் இதுவரை பார்த்திராத ஒன்றாக இருக்கும். இறுதியாகச் சொல்ல வேண்டுமானால் ‘அக்னி சிறகுகள்’ திரைப்படம் வெளியான பின்னர் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு கஜகஸ்தான் மிகப் பெரிய சுற்றுலா கேந்திரமாக மாறும்” என்றார் இயக்குநர் நவீன்.