
எம் சுந்தர் அவர்களின் எழுத்து மற்றும் இயக்கத்தில் அஜிதேஜ், ஸ்ரீஸ்வேதா, பாக்யராஜ், நமோ நாராயணன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் அந்த 7 நாட்கள்.
படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் கோபிநாத் துரை. மேலும், இசையமைத்திருக்கிறார் சச்சின் சுந்தர்.
படத்தின் தயாரித்திருக்கிறார் முரளி கபீர்தாஸ்.
நாயகன் அஜிதேஸ், பைனாகுலரை வைத்து, விண்வெளி சார்ந்து அறிவியல் படிப்பைப் பயின்று வருபவர். நாயகி, ஸ்ரீஸ்வேதா ஜூனியர் வக்கீலாக பணிபுரிந்து வருபவர்.
எம் எல் ஏ – சீட்டிற்காக எதையும் செய்யத் துணிந்த நபர் தான் நமோ நாராயணன். இவரது மகன் தான் அஜிதேஸ்.
காதலுக்கு பெரும் எதிர்ப்பு கொடுப்பவராக இருக்கிறார் ஸ்ரீஸ்வேதாவின் தந்தை.
அஜிதேஸ் மற்றும் ஸ்ரீ ஸ்வேதா இருவருக்கும் காதல் உண்டாகிறது. அமைச்சரின் மகளுக்கு தன் மகனைக் கட்டிக் கொடுக்கும் கனவில் இருக்கும் நமோ நாராயணன் மற்றும் காதலுக்கு முழு எதிரியாக இருக்கும் ஸ்ரீஸ்வேதாவின் தந்தை இவர்களின் எதிர்ப்பைத் தாண்டி அஜிதேஸ் – ஸ்ரீஸ்வேதா இவர்களின் காதல் வளர்கிறது.
இந்த நிலையில், பழங்காலத்து பைனாகுலர் ஒன்றை வாங்கும் அஜிதேஸின் கண்களில் ஒரு மாற்றம் நிகழ்கிறது. அவர், யாரையெல்லாம் கண்ணோடு கண் பார்க்கிறாரோ அவர்களின் மரண நாள் அவருக்கு தெரிந்து விடுகிறது.
ஒரு கட்டத்தில், தனது காதலியின் கண்களை நேருக்கு நேர் பார்க்கும்போது, காதலி இன்னும் 7 நாட்கள் மட்டுமே உயிரோடு இருக்கப் போவதாக அஜிதேஸுக்கு தெரிந்துவிட, உடைந்து அழுகிறார் அஜிதேஸ்.
7 நாட்களில் மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருந்த ஸ்ரீ ஸ்வேதாவை அஜிதேஸ் காப்பாற்றினாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் அஜிதேஸ், தனக்கு இது முதல் படம் என்பது போல் இல்லாமல், ஒரு அனுபவ நடிகர் எப்படியான நடிப்பைக் கொடுப்பாரோ அப்படி ஒரு நடிப்பைக் கொடுத்து கண்கலங்க வைத்துவிட்டார் அஜிதேஸ். முதல் பாதியில் பயங்கர சுறுசுறுப்பான நடிப்பைக் கொடுத்த அவர், இரண்டாம் பாதியில் படம் பார்க்கும் அனைவரையும் கண்கலங்க வைக்கும் நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
நாயகி ஸ்ரீஸ்வேதா முதல் பாதியில் அழகு தேவதையாகவும் இரண்டாம் பாதியில் நடிப்பு அரக்கியாகவும் வந்து மிரட்டியிருக்கிறார். எந்த ஹீரோயினும் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ளாத ஒரு கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தியிருக்கிறார். அதிலும் க்ளைமாக்ஸ் காட்சிகளில் கண்கலங்க வைத்துவிட்டார்.
மேலும், படத்தில் நடித்திருந்த பாக்யராஜ், நமோ நாராயணன், ஹீரோயின் அப்பாவாக நடித்தவர், ஹீரோ ஃப்ரண்ட் என படத்தில் நடித்திருந்த மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கின்றனர்.
படத்தின் கதையை மிக அழகாக எழுதியிருக்கிறார் இயக்குனர். முதல் பாதி ஒரு கோணத்திலும், இரண்டாம் பாதி யாரும் யூகிக்காத வண்ணம் வேறொரு கோணத்திலும் பயணிக்க வைத்தது படத்திற்கு மிகபெரும் பலம். அதிலும், இரண்டாம் பாதியில் யாரும் யூகிக்காத வண்ணம் ரேபீஸ் தொற்றின் பாதிப்பினை கண்முன்னே கொண்டு வந்து வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார் இயக்குனர்.
ரேபீஸ் தொற்றினால், நோயாளிகள் என்ன மாதிரியான பாதிப்படைகின்றனர் என்பதை வெளிச்சமாக காட்டியிருக்கிறார்.
இது ஒரு விழிப்புணர்வு படமாகவே நாம் அனைவரும் நிச்சயம் பார்க்கலாம்.
ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றே கூறலாம். படத்தின் முதல் பாதியில் நிலாவை ரெபரன்ஸாக வைத்து, காட்சிகளை படமாக்கி அழகாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
பின்னணி இசை மற்றும் பாடல்கள் இரண்டுமே படத்திற்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது.
க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி மிகவும் இயல்பாக இருந்தது மிரட்டல்… படத்தொகுப்பாளர் கத்தியை ஷார்ப்பாக பயன்படுத்தியிருக்கிறார்.
அந்த 7 நாட்கள் – காதலின் போராட்டம்