
ஜாக்சன் ராஜ் இயக்கத்தில் ஏகே ஆனந்த், ஜெசி ரத்னவதி, ரெஜி, சிந்து, டிகேஎஸ் சண்முக சுந்தரம், சிம்சன் தேவராஜ், வினோத் சிங், சதா, ஜாவா கார்த்திக் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “அறமுடைத்த கொம்பு”.
கதைப்படி,
திருநெல்வேலி அருகேயுள்ள ஒரு அழகிய கிராமம் தான் வேலியூர்.. கதாநாயகனான ஆனந்த் சட்டை கிழிந்து, தள்ளாடிக் கொண்டு வந்து ஊர் எல்லையில் மயங்கி விழுந்து கிடக்கிறார். ஆனந்தை ஓடோடி வந்து காப்பாற்றுகின்றனர் வேலியூரைச் சேர்ந்த திருநங்கைகள்.
ஆனந்தைக் காப்பாற்றி ஊர் பெரியவரான சண்முகசுந்தரத்திடம் ஒப்படைக்கிறார்கள். தான் யார் என்பதை சண்முகசுந்தரத்திடம் கூறுகிறார் ஆனந்த்.. கதையைக் கேட்டு கவலை கொண்ட சண்முகசுந்தரம், ஆனந்தை அங்கேயே தங்க வைக்கிறார். வயல்வெளிகளில் வேலை பார்த்து வேலியூரிலேயே இருக்கச் சொல்கிறார்.
ஜாதிப் பெருமை பேசிக் கொண்டு, ஜாதிக்கென்று சங்கம் வேண்டும் என்று சிம்சன் தேவராஜ், வினோத் சிங் ஊரில் சுற்றித் திரிகின்றனர். இவர்கள், ஆனந்தை பார்க்கும் இடத்திலெல்லாம் அடிக்கின்றனர்.
ஜாதி வேண்டாம் என்று பறைசாற்றும் கர்ணன் மற்றொரு பக்கம். இந்நிலையில், அதே ஊரில் சுகாதாரத்தை மையப்படுத்தி தனது ஊரின் மக்களின் நலனில் அக்கறையெடுக்கும் கதாபாத்திரமாக நாயகி ஜெசி.. ஆனந்துக்கும் ஜெசிக்கும் காதல் மலர்கிறது.
இந்த காதல் கைகூடியதா.?? ஊரில் சாதி சங்கம் ஆரம்பிக்கப்பட்டதா.??? இதனால் என்னென்ன பிரச்சனைகள் நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை..
அப்பாவித்தனமான முகம் கொண்டு நடித்த ஆனந்த், கதைக்கு சரியான தேர்வு என்றாலும் ஆங்காங்கே சின்ன சின்ன ரியாக்ஷன்கள் கொடுக்கத் தவறியிருக்கிறார். அதிலும் சற்று கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்.
கதைக்கேற்ற நாயகியாக ஜொலித்திருக்கிறார் ஜெசி. கிராமத்தில் இருக்கும் ஒரு பெண், என்ன மாதிரியான மனநிலைமையில் இருப்பார், என்ன மாதிரியான சுட்டித்தனத்தில் இருப்பார் என்பது போல அழகாக தோன்றியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் சொல்லிக் கொடுப்பது, அழகு தமிழை கற்றுக் கொடுப்பது, குளிக்கும் காட்சியை வீடியோ எடுத்து மிரட்டுவதை எதிர் கொண்டது என பல இடங்களில் செம சொல்ல வைத்துவிட்டார் இயக்குனர்.,
கிராமங்களில் நூலகம், மருத்துவ முகாம் உள்ளிட்டவைகள் குறித்த விழிப்புணர்வை கொண்டு வந்தது படத்திற்கு பலம்.
படத்தின் மிகப்பெரும் பலம் என்றே கூறலாம்.. நெற்றியில் கலர்கலராக பட்டையை போட்டுக் கொண்டு அடிக்கும் கதாபாத்திரத்தின், காமெடிகள் வேற ரகமாக இருந்து, படத்திற்கு பெரிதாக கைகொடுத்திருக்கிறது.
முதலில் சற்று சலிப்பைக் கொடுத்தாலும், படம் செல்ல செல்ல ரசிக்க அறமுடைத்த கொம்புவிற்குள் நம்மையும் இழுத்துச் சென்று பயணிக்க வைத்துவிட்டார் இயக்குனர்.
ஒளிப்பதிவு கிராம அழகை அழகிய வாழ்வியலாக காட்சியளித்திருக்கிறது.
கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு என அனைத்தையும் ஜாக்சன் ராஜ் கையாண்டிருக்கிறார்.
அல் ரூபியன் இசையில் பாடல்கள் ஓகே ரகம்.. பின்னணி இசை கதையோடு ஓட்டம் எடுத்திருக்கிறது. ஜாதிகளின் படத்தில் இது ஒரு தனிரகம் தான்.
ஆங்காங்கே சில குறைகள் எட்டிப் பார்த்தாலும், நிறைகள் அவற்றை ஓவர்-டேக் செய்து பயணப்பட்டு, அறமுடைத்த கொம்பு பல கருத்துகளை கச்சிதமாக சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறது. மனிதனின் அறம் மட்டும் என்றும் நிரந்தரம் என்பதை தெளிவாக கூறிவிட்டுச் சென்றிருக்கிறது.
அறமுடைத்த கொம்பு – ஜாதிகளுக்கு எதிராக கூர்மையாக்கப்பட கொம்பு..