அரண்மனை படத்தின் மூன்று பாகத்தை தொடர்ச்சியாக கொடுத்து வரும் இயக்குனர் சுந்தர் சி, அடுத்ததாக அரண்மனை 4 படத்தையும் இயக்கியிருக்கிறார்.
இப்படத்தில், சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ், சந்தோஷ் பிரதாப், கருடா ராம், டெல்லி கணேஷ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஈ கிருஷ்ணமூர்த்தி. பென்ஸ் மீடியா & அவ்னி பிக்சர்ஸ் சாரிபில் குஷ்பூ சுந்தர் சி & ஏ.சி.எஸ் அருண்குமார் இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.
கதைக்குள் பயணிக்கலாம்…
வக்கீல் தொழில் செய்து வரும் சுந்தர் சி, தனது தங்கை தமன்னா மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார். அண்ணன் மீது தமன்னாவும் பாசம் வைத்திருக்கிறார். தந்தையின் எதிர்ப்பை மீறி தனது காதலன் சந்தோஷ் பிரதாப்பை திருமணம் செய்து கொள்கிறார்.
இந்த அதிர்ச்சியில் தந்தை இறந்துவிட, சந்தோஷ் பிரதாப்பும் தமன்னாவும் ஊரை விட்டு வெளியேறி விடுகின்றனர்.
வருடங்கள் உருண்டோட, வேறொரு ஊரில் தங்கை தமன்னா தற்கொலை செய்து கொண்டதாக சுந்தர் சி’க்கு தகவல் வர, அதிரிச்சியில் உறைகிறார் சுந்தர் சி.
தமன்னா தங்கியிருந்த பழமை வாய்ந்த அரண்மனைக்கு தனது அத்தை கோவை சரளாவை அழைத்துச் செல்கிறார்.
அங்கு, தமன்னாவிற்கு இரு குழந்தைகள் இருப்பதை அறிகிறார். அவர்களை கவனித்துக் கொள்ள அங்கு தங்குகிறார். மேலும், தனது தங்கை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அதை விசாரிக்க ஆரம்பிக்கிறார் சுந்தர் சி.
அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
கதையின் நாயகனாக வருகிறார் சுந்தர் சி. வழக்கம்போல், கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்து அசத்தியிருக்கிறார் சுந்தர் சி. கதையின் முக்கிய கருவாக வருகிறார் தமன்னா.
கதையின் வலுவை அறிந்து கொண்டு, அதை அளவாக நடித்து அக்கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். சந்தோஷ் பிரதாப் தமன்னாவை அரண்மனைக்குள் தேடும் காட்சியை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
செண்டிமெண்ட் மற்றும் திகில் இரண்டையும் அளவாக கொடுத்திருக்கிறார்கள். சிஜி பணிகள் மிகவும் நேர்த்தியாக செய்திருக்கிறார்கள். காட்சிகளுக்கான மெனக்கெடல் நன்றாகவே தெரிகிறது.
படத்தினை பிரமாண்ட பொருட் செலவில் தயாரித்திருக்கிறார்கள். யோகிபாபு, விடிவி கணேஷ் மற்றும் கோவை சரளா மூவரின் காமெடி காம்போ நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.
வில்லனாக வரும் கருடா ராம் மிரள வைத்திருக்கிறார். ஹிப் ஹாப் ஆதியின் பாடல்களும் பின்னணி இசையும் படத்தினை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்று வைத்துள்ளது.
ஒளிப்பதிவு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது.
க்ளைமாக்ஸ் பைஃட் காட்சி பிரமிக்க வைத்திருக்கிறது. இரட்டை அர்த்த வசனங்களோ மது குடிப்பது போன்ற காட்சியோ எந்த இடத்திலும் இல்லாதது பலம்..
அரண்மனை 4 – கோடை கால கொண்டாட்டமாக வெளிவந்திருக்கும் இந்த படத்தை குடும்பத்தோடு கொண்டாடலாம்…