தமிழ் சினிமாவில் அவ்வப்போது ஏதாவது ஒரு நல்ல படம் வந்திராதா என ஏங்கும் கண்களுக்கான படம் தான் இந்த அருவி…. விமர்சனம் துவங்குவதற்கு முன்பே இந்த படத்தை பற்றி புகழ்ந்து விட ஆரம்பித்து விட்டார்களே என எண்ண வேண்டாம்.. படத்தை பற்று நெகட்டிவாக பேசவோ, எழுதவோ, கருத்து கூறவோ எதுவும் இல்லை என்ற காரணம் ஒன்று மட்டுமே.
அருவி, சாதாரண, சராசரி ஆசைகளுடன் , கனவுகளுடன் வலம் வரும் ஒரு பெண். அம்மா, அப்பா, தம்பி அழகான ஒரு குடும்பத்துடன் வசித்து வருகிறார். யாரும் சற்றும் எதிர்பாராத ஒரு சூழ்நிலை அருவியை பாதித்துவிடுகிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் கூடவே இருக்க வேண்டிய குடுபத்தார் அனைவரும் அருவியை வெறுத்துவிட, திசையறியா பறவை போல் வீட்டை விட்டு வெளியேறுகிறார். வெளியே வரும் அருவிக்கு 3 நபர்களால் மீண்டும் ஒரு இன்னல்.
கெட்டுப்போனவள்(தவறான வழியில் போனால் மட்டும் தான் கெட்டுப்போனவள் என்று கூற மாட்டார்கள், சூழ்நிலையும் ஒரு பெண்ணை அந்த நிலைக்கு தள்ளி விடும்) என்பதற்கு இந்த சமுதாயம் பார்க்கும் பார்வையும், அவர்கள் கொடுக்கும் தண்டனையும், வார்த்தைகளும் ஒரு பெண்ணை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை இதை விட மிகவும் அழுத்தமாக யாரும் கூறி விட முடியாது.
தன் உயிர் போகும் வரை தன்னை இந்த சமூகம் தாக்கிய துயரத்தை எண்ணி எண்ணி துயரம் கொள்ளும் ஒரு உணர்வை மிக அழுத்தமாக இயக்குனர் பதிவு செய்துள்ளார். இடைவேளைக்கு முன் அருவி பேசும் ஒரு நீண்ட வசனமும், க்ளைமாக்ஸ் காட்சியில் உணர்ச்சிபூர்வமான அந்த டயலாக் வரிகள் அனைத்தும் நம் நெஞ்சை கணத்து வைத்து விடுகிறது. புதுமுக நடிகையாக நாயகி அதிதி கோலிவுட்டின் ஒரு அதீத வரவு.
அருவியின் அப்பா, திருநங்கை அஞ்சலி வரதன், உதவி இயக்குனர் பீட்டர், ரியாலிட்டி ஷோ இயக்குனர், லட்சுமி கோபால்சாமி என படத்தின் கதாபாத்திரங்கள் அனைவரும் மிகவும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஒரு சிறு கதை என்றாலும், அதில் தரப்படும் கருத்த்துக்கள் அனைத்தும் சமூகத்தை சார்ந்தும் அதை பார்க்கும் ஒரு பார்வையின் திசையையும் மிகவும் வெளிச்சமாக காட்டியிருப்பது படத்திற்கான பலம்.
படத்தின் பின்னனி இசை அருவியின் ஓட்டத்திற்கு ஈடு கொடுத்திருக்கிறது.
அருவி – கணத்த இதயங்களின் கண்களிலும் (இதயத்திலும்) கூட ’அருவி’ கொட்டும்….