
இயக்குனர் முத்துகுமார் இயக்கத்தில் அபிநயஸ்ரீ, அனுமோல், அருவி மதன், லிங்கா, சிங்கம்புலி, லவ்லின், காயத்ரி, தாரா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் ஜீ5 தளத்தில் நேரடியாக வெளிவந்திருக்கும் தொடர் தான் “அயலி”.
எளிமையான கிராமத்து பின்னணி கதைக்களம் கொண்ட கதையோடு வந்திருக்கும் தொடர்தான் இந்த “அயலி”. பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்தால் உடனே திருமணம் செய்து வைக்கும் வழக்கம் கொண்ட ஒரு கிராமத்தில், மருத்துவராக வர வேண்டும் என்ற ஆசையோடு இருக்கும் ஒரு பள்ளி பயலும் பெண்ணின் ஆசை, ஆசையாகவே போனதா இல்லையா என்பதே இந்த “அயலி”
கதைப்படி,
கதையின் நாயகியாக வருகிறார் அபிநயஸ்ரீ. இவர், தமிழ்ச்செல்வி என்ற கதாபாத்திரத்தில் பள்ளி மாணவியாக வருகிறார். இவர் வசிக்கும்கிராமத்தில் ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. பல வருடங்களுக்கு முன் அக்கிராமத்தில் நடந்த ஒரு அசம்பாவிதத்தால், அக்கிராமத்தில் சில கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அக்கிராமத்தில் வசிக்கும் சிறுமிகள், பூப்படைந்தால் உடனடியாக அவரை பள்ளியில் இருந்து நிறுத்தி விட வேண்டும். அதுமட்டுமல்லாமல், அவருக்கு விரைவாக திருமணமும் செய்து வைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு அக்கிராமத்தில் வழக்கமாக இருந்து வருகிறது.
அதே கிராமத்தில் வசிக்கும் தமிழ்ச்செல்விக்கு எப்படியாவது மருத்துவராக ஆக வேண்டும் என்ற ஆசை. இச்சமயத்தில் தமிழ்ச்செல்வி பூப்படைந்து விடுகிறார். தனது ஆசையை தனது தாயிடம் கூறி பூப்படைந்த விஷயத்தை யாரிடமும் கூறாமல் தனது படிப்பை தொடர்கிறார்.
இறுதியாக இவரின் கனவு நனவானதா இல்லையா என்பதே இந்த தொடரின் மீதிக் கதை.
தொடர்ந்து 8 எபிசோடுகளாக இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. தொடரின் மிகப்பெரும் பலமே கதாபாத்திரங்களின் தேர்வு தான். இக்கதையில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் தனது கேரக்டர்களை உணர்ந்து அக்கதாபாத்திரமாகவே மாறி தனது நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
தொடரின் மற்றொரு பலம் என்றால் அது வசனங்கள் தான். பல இடங்களில் எழுந்து நின்று கைதட்டும் அளவிற்கு பலமான வசனங்களை வீசியிருக்கிறார் இயக்குனர்.
சிறு வயதில் பெண்களை திருமணம் செய்து வைத்தால் அவர்களின் வாழ்வு எந்த மாதிரியான இன்னல்களை சந்திக்கிறது என்பதையும் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் இயக்குனர்.
இன்னமும் பல கிராமங்களில் நடந்து வரும் பெண்களுக்கான கட்டுப்பாடுகளை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் இயக்குனர். .இப்படியெல்லாம் நடக்குமா என்ற கேள்வி எழும் இடத்தில் இதையும் விட அதிகமாகவே சில இடங்களில் நடக்கிறது என்பது தான் கள நிலவரமாக இருக்கிறது.
அனுமோல், அருவி மதன், லிங்கா, சிங்கம்புலி, லவ்லின், காயத்ரி, தாரா உள்ளிட்ட நட்சத்திரங்களின் கதாபாத்திரமும் அப்ளாஷ் தான்.
ராம்ஜியின் ஒளிப்பதிவு கிராமத்து அழகியலை கண்முன்னே கொண்டுவந்து, நம்மை கதையோடு பயணிக்க கைகொடுத்திருக்கிறது.
ரெவா அவர்களின் இசையில் படத்தின் பின்னணி இசை படத்தின் ஓட்டத்திற்கு கைகொடுத்திருக்கிறது.
அழகிய கிராம வாழ்வியலையும், பெண்களின் முக்கியத்துவத்தையும், அவர்களின் உரிமைகள் இன்னமும் பறிக்கப்படுவதையும் பல இடங்களில் பறைசாற்றிய இயக்குனர் முத்துக்குமார் அவர்களுக்கு ஆகப்பெரும் வாழ்த்துகள்.
அயலி – போற்றப்பட வேண்டியவள்..