Spotlightவிமர்சனங்கள்

அயோக்யா; விமர்சனம் 3.5/5

தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன திரைப்படம் ‘டெம்பர்’ படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது ‘அயோக்யா’. விஷால், ராஷிகண்ணா. கே எஸ் ரவிக்குமார், பார்த்திபன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சிறுவயதில் இருந்தே பணம் தான் நம் வாழ்க்கை என வாழத்தொடங்குகிறார் கர்ணன்.(விஷால்). போலீஸானால் மட்டும் தான் எப்போதும் பணம் சம்பாதிக்க முடியும் என்று போலியான சான்றிதழ்களை கொடுத்து இன்ஸ்பெக்டர் பணிக்கு சேர்கிறார் விஷால்.

குற்றங்களை கண்டு கொள்ளாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் செய்யாமல் பணம் ஒன்றே குறிக்கோளாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் விஷால்.

இந்நிலையில் தான், எதிரிகளிடம் சிக்கி பாலியல் வன்முறைக்கு ஆளாகி மரணமடைந்த ஒரு பெண்ணின் வழக்கை கையில் எடுக்கும் விஷால், தான் அதுவரை பணத்திற்காக வேலை செய்து வந்த ரவுடி பார்த்திபனையே எதிர்த்து அவனது தம்பிகள் நால்வரை சிறையில் தள்ளிவிடுகிறார். இறுதியாக விஷால் அவர்களுக்கு தண்டனை பெற்று கொடுத்தாரா.??

வழக்கமான விஷாலின் படமாக இது இல்லாமல், வேறு ஒரு தளமாக இருந்ததால் முன்பை விட விஷாலின் நடிப்பை அதிகமாக ரசிக்க முடிந்தது. விஷாலின் நடிப்பிலும் வசன உச்சரிப்பிலும் ஏகப்பட்ட மாறுதல். இறுதியில் வரும் 20 நிமிட காட்சிகளில் நடிப்பில் தனி முத்திரையை படைத்து படம் பார்த்த அனைவரிடமும் இருந்து கைதட்டல் பெறுகிறார்.

விஷாலின் மனமாற்றத்திற்கு காரணமாக அமைந்து அவரை நல்வழிக்குத் திருப்பும் காதலி கதாபாத்திரத்தில் ராஷி கண்ணா அழகு தான். அதிலும், கண்ணே கண்ணே பாடலில் அழகோ அழகோ.

பார்த்திபன், கே எஸ் ரவிக்குமார் என அனைவரும் திகட்டாத நடிப்பை கொடுத்து படத்தின் ஓட்டத்திற்கு ஈடுகொடுத்துள்ளனர். சிறிது நேரம் வந்தாலும் தனது காமெடி முத்திரையை பதித்துவிட்டார் யோகிபாபு.

கிளைமாக்ஸில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தருவதற்காக விஷால் எடுக்கும் அதிரடி முடிவு யாருமே எதிர்பாராத ஒன்று அதுவரையிலான அந்த கேரக்டரின் மீதான கோபத்தை அப்படியே இது தனித்து விடுகிறது.. படத்தை தாங்கிப்பிடிக்கும் தூணே அதுதான்.

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தூக்கு தண்டனை ஒன்றே சரியான தண்டனை என்பதை வலியுறுத்தி உள்ளதற்காக படத்தை நிச்சயம் தூக்கி வைத்து கொண்டாடலாம். இயக்குனர் வெங்கட் மோகனுக்கு மிகப்பெரும் வாழ்த்துக்கள்.

சாம் சி எஸ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னனி இசை மிரட்டல் தான். கார்த்திக் ஒளிப்பதிவு கலர்புல்.

அயோக்யா – நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close