
ஜெயக்குமார் என்பவரது இயக்கத்தில் அசோக் செல்வன் , ஷாந்தனு பாக்யராஜ், பிரித்வி, கீர்த்தி பாண்டியன், பக்ஸ், குமரவேல், லிஸ்ஸி ஆண்டனி, T.N அருண்பாலாஜி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ப்ளூ ஸ்டார்.
திரைக்கதை மற்றும் வசனத்தை தமிழ்ப்பிரபா கவனித்திருக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
அரக்கோணம் அருகே ஒரு கிராமத்தில் கதை நகர்கிறது. ஒரு கிராமத்தில் இரு பிரிவாக இருக்கிறார்கள். இங்கு இரு கிரிக்கெட் டீம் இருக்கிறது. ப்ளூ ஸ்டார் என்ற டீமிற்கு அசோக் செல்வன் கேப்டனாக இருக்கிறார். ஆல்பா என்ற டீமிற்கு ஷாந்தணு கேப்டனாக இருக்கிறார்.
இந்த இரு அணிகளும் எப்போதுமே எதிரும் புதிருமாக இருக்கிறார்கள். இவர்களுக்கு போட்டியே நடக்காது. காரணம் பிரச்சனை வந்துவிடும் என்பதற்காக. இந்நிலையில், திருவிழாவை காரணம் காட்டி இரு டீமும் கிரிக்கெட் விளையாட திட்டமிடுகிறது.
ஆல்பா அணியைச் சேர்ந்த சாந்தனு, தனது அணி ஜெயிக்க வேண்டும் என்பதற்காக வெளியே இருந்து அதாவது க்ளப்பில் விளையாடும் மிகவும் தகுதி வாய்ந்த வீரரை தனது அணியில் விளையாட களம் இறக்குகிறார்.
அந்த போட்டியில் சாந்தணு டீம் வென்று விடுகிறது. அதனைத் தொடர்ந்து க்ளப் வீரர்களுக்கும் சாந்தனுவிற்கு மோதல் வர, சாந்தணுவிற்கு ஆதரவாக அவர்களை எதிர்த்து நிற்கிறார் அசோக் செல்வன்.
பின் இருவரும் நண்பர்களாகி விடுகின்றனர். இரு அணியும் இணைந்து விளையாடி க்ளப் போட்டியாளர்களை ஓட விடுவது தான் படத்தின் மீதிக் கதை.
நாயகர்கள் அசோக் செல்வன், சாந்தணு, ப்ரித்வி மூவரும் தங்களது கதாபாத்திரங்களின் வலிமை தெரிந்து உணர்ந்து புரிந்து நடித்திருக்கிறார்கள்.
ரஞ்சித் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள அசோக் செல்வன், அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். காதல், எமோஷன், கோபம் என தனக்கே உரிய பாணியில் அனைவரையும் கவர்ந்திருக்கிறார் அசோக் செல்வன்.
துறுதுறுவென தனது கதாபாத்திரத்தை மிகவும் யதார்த்தமாகவும் கலகலப்பாகவும் செய்து முடித்திருக்கிறார் ப்ருத்வி. ஒவ்வொரு கேங்க்-லயும் ப்ருத்வி மாதிரி ஒருத்தன் இருப்பான் என்பதை பலருக்கும் இவரது கதாபாத்திரம் ஞாபகப்படுத்தும்.
நாயகி கீர்த்தி பாண்டியன் நடிப்பில் அழகு. க்யூட்டாக வந்து ஸ்கோர் செய்து அனைவரையும் அதிகமாகவே கவர்ந்திருக்கிறார் கீர்த்தி பாண்டியன்.
ஒரு சில காட்சிகள் என்றாலும் தனது சிரிப்பால் அனைவரையும் வெகுவாகவே கவர்ந்திருக்கிறார் திவ்யா துரைசாமி.
ஆங்காங்கே எட்டிப் பார்த்த சாதிய காட்சிகளை தவிர்த்திருக்கலாம்… (சாதிக்குள் அடங்காத அண்ணல் அம்பேத்கர் காட்சிகளை தவிர)
கிரிக்கெட்டில் நடக்கும் அரசியல், அதிகாரம் என வெட்ட வெளிச்சமாக காட்டிய இயக்குனர் ஜெயக்குமாருக்கு பெரிய பாராட்டுகள்.
தமிழ் அ அழகனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும்பலம். காட்சிகளுக்கு இவர் பயன்படுத்திய கலர் டோன் படத்தினை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்று விட்டது.
கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்துள்ள நிலையில், பின்னணி இசையில் அதிகமாகவே ஸ்கோர் செய்திருக்கிறார் கோவிந்த் வசந்தா.
தமிழ் பிரபாவின் வசனங்கள் பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது.
ப்ளூ ஸ்டார் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய நட்சத்திரம் தான்.
ப்ளூ ஸ்டார் – வெற்றி நட்சத்திரம்.





