
டிமாண்டி காலணி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “கோப்ரா”. மிகப்பெரும் பொருட்செலவில் லலித் குமார் இப்படத்தை தயாரித்திருக்கிறார். ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். ஸ்ரீநிதி ஷெட்டி, மிர்ணாளினி ரவி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான், கே எஸ் ரவிக்குமார் பதான் உள்ளிட்ட நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்..
கதைப்படி,
பத்திரிகையாளராக வரும் கே எஸ் ரவிக்குமார் நாயகன் விக்ரமிற்கு மறைமுகமாக தகவல் கொடுத்து சில முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய வைக்கிறார். ஒடிசா முதலமைச்சர், ஸ்காட்லாந்து இளவரசர் உள்ளிட்டவர்களை திட்டம் தீட்டி, பல வேடம் கொண்டு அவர்களை கொலை செய்கிறார். அதற்காக பல கோடி வரை விக்ரமிற்கு கொடுக்கப்படுகிறது.
கொலை செய்து முடித்ததும், வழக்கம் போல் எதுவும் தெரியாதவராக கணித ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இவரை ஒருதலையாக காதலித்து வருகிறார் ஸ்ரீநிதி.
விக்ரமை பிடிப்பதற்காக ஸ்பெஷல் போலீஸாக இந்தியா வருகிறார் இர்பான் பதான். விக்ரமை இர்பான் பதான் பிடித்தாரா.? எதற்காக இந்த கொலைகளை செய்கிறார்.? என்பதை இரண்டாம் பாதியின் மீதியில் சொல்லியிருக்கிறார்கள்.
நாயகன் விக்ரம், ஒட்டுமொத்த கதையையும் தனி ஒருவனாக சுமந்து சென்று படத்திற்கு தூணாக நின்றிருக்கிறார். ஒவ்வொரு கெட்-அப்’பிலும் மாறுபட்ட நடிப்பை கொடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திருக்கிறார்.. நடிப்பு அரக்கனாக இப்படத்தில் ஜொலித்திருக்கிறார். அந்நியன் படத்தில் விக்ரம் மற்றும் பிரகாஷ்ராஜ் இருவருக்கும் இடையே நடக்கும் ஒரு காட்சியில் விக்ரம் நடிப்பை பாராட்டாமல் இருக்க முடியாது, அப்படியொரு நடிப்பை இந்த படத்தில் ஒரு இடத்தில் கொடுத்து அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார் விக்ரம்…”என்னா மனுஷன்யா இவரு.. இப்படி நடிச்சிருக்காரு”ன்னு தான் சொல்லத் தோணுது.
நாயகி கே ஜி எஃப் படத்தின் மூலம் அனைவருக்கும் பரிட்சயமான நாயகி ஸ்ரீநிதி, இப்படத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை அளவோடு செய்து கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறார். நாயகி மிர்ணாளி ரவி மற்றும் மீனாட்சி இருவரையும் அளவோடு வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.
போலீஸ் அதிகாரியாக கெத்து காட்டியிருக்கிறார் இர்பான் பதான். இவருக்குள்ள இப்படியொரு நடிப்பு இருக்கா.? என ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் இர்பான். இனிமே நிறைய படங்கள்ல நிச்சயம் இவர பார்க்கலாம்.
முதல் பாதியில் வேகமெடுத்து ஆடும் கதைக்களம், இரண்டாம் பாதியில் சற்று தடுமாறியிருக்கிறது என்றே சொல்லலாம். கதைக்குள் பின்னல் பின்னல் என்று சற்று குழப்பியும் விட்டிருக்கிறார் இயக்குனர்.
க்ளைமாக்ஸ் காட்சியில் யார் அவர்.? யார் இவர்.? என்று தலையை பிய்த்துக் கொள்ளும் அளவிற்கு குழப்பி விட்டிருக்கிறார் இயக்குனர். திரைக்கதையில் வேகம் இருந்தாலும், கதை அடுத்தடுத்த பயணமாக சென்று கொண்டே இருப்பதால் சற்று எரிச்சலடைய வைத்துவிட்டது.
படத்தின் நீளத்தை நன்றாகவே குறைத்திருக்கலாம். ஏ ஆர் ரகுமானின் இசையில் பாடல்கள் மெட்டு போட வைத்தாலும்,
பின்னணி இசை “சார்.. என்ன ஆச்சு சார் உங்களுக்கு”ன்னு தான் கேட்க தோணுது… இன்னும் பெட்டரா கொடுத்திருக்கலாமே சார்.
ஹரீஷ் கண்ணனின் ஒளிப்பதிவு படத்தின் வேகத்திற்கு பக்கபலமாக ஈடு கொடுத்திருக்கிறது.
விக்ரமின் அசூர நடிப்பை நிச்சயம் ஒருமுறை பார்த்து நாம் வியர்ந்துவிட்டு வரலாம்..
கோப்ரா – நடிப்பின் அரக்கன் விக்ரம்…