அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர், முத்துக்குமார், அருண்பாண்டியன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் டிமாண்டி காலணி 2.
முதல் பாகம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதால், அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் உருவாகியிருக்கிறது.
முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாம் பாகத்திற்கு சற்று அதிகமாகவே செலவு செய்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
சாம் சி எஸ் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படத்தின் கதை நகரவில்லை. முதல் பாகத்தின் கதையின் நடுவே இரண்டாம் பாகத்தின் கதையும் ஆரம்பிக்கிறது.
படம் ஆரம்பமான உடனே, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரு சிலர் மாடியிலிருந்து கீழே விழுந்து இறக்கின்றனர். அதே கட்டிடத்தில் ப்ரியா பவானி சங்கரின் காதல் கணவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொள்கிறார்.
தனது கணவரின் ஆவி தன்னுடன் பேச நினைப்பதாக அறிகிறார் ப்ரியா பவானி சங்கர். அதற்காக சாமியார் ஒருவரின் உதவியுடன் தனது கணவரின் ஆவியுடன் பேச முற்படுகிறார். ஆனால், அங்கு வேறொரு ஆவி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை அறிந்து, அந்த ஆவிக்காக உதவி செய்ய நினைக்கிறார்.
அதுதான், முதல் பாகத்தில் இறந்து போன் அருள்நிதியின் ஆவி. ஒருகட்டத்தில் அருள்நிதியின் ஆவியை மீட்டு, அவரை காப்பாற்றி விடுகிறார் ப்ரியா. ஆனால், கோமாவிற்கு சென்று விடுகிறார் அருள்நிதி.
அருள்நிதி இரட்டைச் சகோதரர்களாக வருகின்றனர். மூத்த மகன் தனது தந்தையின் பல கோடி சொத்தை தனதாக்கிக் கொள்ள தம்பி அருள்நிதியை கொல்ல நினைக்கிறார் அண்ணன் அருள்நிதி.
இந்த சூழலில், தம்பியைக் கொன்றால் அண்ணனான நீயும் இறந்து விடுவாய் என கூறுகிறார் ப்ரியா பவானி சங்கர்.
அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
கதை தேர்ந்தெடுத்து நடிப்பதில் எப்போதும் கவனமாக இருப்பவர் நடிகர் அருள்நிதி. இப்படத்திலும், அதை சிறப்பாகாவே செய்திருக்கிறார். முதல் பாகத்தையும் இரண்டாம் பாகத்தையும் கனெக்ட் செய்த விதம் வித்தியாசமான ஒரு அனுபவமாக இருந்தது.
முதல் பாகத்தில் கொடுத்த அதே நடிப்பை மீண்டும் திரையில் கொண்டு வந்திருக்கிறார் அருள்நிதி.
இவருக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார் ப்ரியா பவானி சங்கர். சொல்லப்போனால், அருள்நிதியை தாண்டிலும் அதிகமான காட்சி ப்ரியா பவானி சங்கருக்கு தான்.
சாம் சி எஸ் அவர்களின் இசையில் பின்னணி இசை ஆங்காங்கே எடுபட்டாலும், பல இடங்களில் எரிச்சலடைய வைத்துவிட்டது.
ஒளிப்பதிவு பெரும் பலம் தான். படத்தின் முதல் பாதி வேற ரகமாக இருந்தாலும், இரண்டாம் பாதி நம்மை சோதனை செய்துவிட்டது தான்.
பயம், படபடப்பு என இரண்டையும் ஒருசேர கொடுத்த இயக்குனர் கதையில் சற்று சறுக்கியிருக்கிறார்.
டிமாண்டி காலணி 2 – முதல் பாதி வேகம், இரண்டாம் பாதி குழப்பம்