
குடும்ப ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்ற படம் தான் தேவி. ‘பேய்’ படங்களிலேயே சற்று வித்தியாசமாக உருவானது இப்படம். பயமுறுத்துவதை தாண்டி நம்மை சிரிக்க வைத்தது தேவி.
வரும் ஏப்ரல் 12ஆம் தேதி அன்று தேவி 2 படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு.
இயக்குனர் விஜய் இது குறித்து கூறும்போது, “நல்ல விஷயங்கள் எப்போதும் சரியான நேரத்தில், சரியான இடத்தில் நடக்கும் என்ற ஒரு கூற்று உள்ளது. அது இப்போது தேவி 2 படத்தில் நடக்கிறது என்பதால் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கோடை விடுமுறை என்பது எப்போதுமே குடும்ப பார்வையாளர்களுக்கானது, அவர்கள் திரையரங்குகளுக்கு வந்து நல்ல பொழுதுபோக்கு படங்களை ரசிக்கிறார்கள்.
தேவி 2 படம் குடும்ப ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் அவர்களை மனதில் வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் தான். எல்லோருக்கும் பிடிக்கும் காமெடி, எமோஷன், காதல், இசை மற்றும் பொழுதுபோக்கு ஆகிய கூறுகள் படத்தில் உள்ளன. பிரபுதேவா சாருடன் மீண்டும் இணைந்து பணிபுரியும் ஒரு வாய்ப்பை அளித்த பிரபு தேவா சாருக்கு நன்றி. அவரது எனர்ஜி அபாரமானது, முதல் பாகம் போலவே இந்த படத்திலும் அனைவரையும் ஈர்ப்பார்.
தமன்னா மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். முதல் பாகத்தில் அவரது நடிப்பை ரசிகர்கள் எவ்வாறு ரசித்தார்கள் என்பது அவருக்கு தெரியும். இந்த படத்தில் அதை விடவும் சிறப்பாக நடிக்க முயற்சிகள் எடுத்தார். இந்த குழுவில் இருந்த எல்லோரும் அளித்த சிறந்த பங்களிப்பு தான் குறித்த காலத்தில் படத்தை முடிக்க காரணமாக இருந்தது. இந்த கோடைகாலத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படமாக நிச்சயம் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
ஜி.வி.பிலிம்ஸ் லிமிடெட் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ள இந்த படத்தில், நந்திதா ஸ்வேதா உட்பட பல பிரபல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். சாம் சிஎஸ் இசையமைக்கிறார். அயனங்கா போஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.