Spotlightசினிமாவிமர்சனங்கள்

டேனி – விமர்சனம்

ஞ்சாவூரில் ஒரு கிராமத்தில் கரும்பு காட்டிற்குள் இளம்பெண் எரித்து கொலை செய்யப்படுகிறார். அந்த கொலையை செய்தது, அவளது கணவர் தான் என போலீஸ் அவரை கைது செய்கிறது.

சொந்த ஊரிலேயே இன்ஸ்பெக்டராக ப்ரோமோஷன் பெறுகிறார் வரலட்சுமி சரத்குமார். இளம்பெண் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கை கையில் எடுக்கிறார் வரலட்சுமி. டேனி என்ற நாயின் உதவியுடன் அந்த கொலையை செய்தது அவளது கணவன் இல்லை என்பதை கண்டறிகிறார் வரலட்சுமி.

கொலையாளியை வரலட்சுமி நெருங்க நெருங்க அடுத்தடுத்து கொலை சம்பவம் அரங்கேறுகிறது. இந்த கொலையெல்லாம் செய்தது யார்..?? எதற்காக செய்கிறார்.?? போலீஸ் குற்றவாளியை கைது செய்ததா..?? என்பதே படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகியாக வரலட்சுமி சரத்குமார் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஒரு சில இடங்களில் ஓவர் பெர்பார்மன்ஸ் காட்சிகளையும் கொடுத்து சற்று எரிச்சலடையவும் வைத்து விடுகிறார்.

நாயின் டிரைனர் ஆக கவின், சப் இன்ஸ்பெக்டராக துரை சுதாகர், அனிதா சம்பத், வில்லனாக வினோத் கிஷன் தங்களது நடிப்பை கதைக்கேற்றவாறு கொடுத்திருக்கிறார்கள்.

துரை சுதாகர் தனது எதார்த்தமான நடிப்பில் கவனம் ஈர்க்கிறார். களவாணி 2 படத்திற்கு பிறகு ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகர் துரை சுதாகர்.

ஒரு இன்வஸ்டிகேஷன் கதையை கையில் எடுத்த இயக்குனர் அதன் விறுவிறுப்பில் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டார்.

டேனி என்ற நாயின் பெயரை படத்தின் டைட்டிலாக வைத்துவிட்டு, அதையும் ஆங்காங்கே மட்டும் காட்டியது சற்று போரடிக்க வைத்து விட்டது. இன்வஸ்டிகேஷனை இன்னும் சற்று கூடுதலாக இழுத்துக் கொண்டு சென்று கதையின் விறுவிறுப்பை ஏற்றியிருந்தால் டேனி கவனம் ஈர்த்திருந்திருப்பான்.

ஆனந்த்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு சற்று ஆறுதல். தஞ்சாவூரின் அழகை கண்களுக்கு விருந்தாக காட்டியிருக்கிறார். சாய் பாஸ்கரின் பின்னனி இசை இன்னும் கொஞ்சம் பரபரப்பை ஏற்றியிருந்திருக்கலாம்.

குழந்தைகளை பெற்றோர்கள் எப்போதும் தங்களது கவனிப்பில் கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை சொன்னமைக்கு இயக்குனர் சந்தானமூர்த்தி வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

டேனி – வேகம் இருக்க வேண்டிய இடத்துல விவேகம்… ஸ்பீடு பத்தல

Facebook Comments

Related Articles

Back to top button