ஈரோடு பெரியார் திடலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மண்டல மாநாடு இரண்டு நாள் நடைபெறுகிறது. இன்று மற்றும் நாளை இந்த மாநாடு நடைபெறவிருக்கிறது.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர் கோபி செழியன் மாநாட்டின் முகப்பில் இரு வண்ணக் கொடியான திமுக கொடியை ஏற்றி வைத்து இந்த மாநாட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மாநாட்டிற்காக மிக பிரம்மாண்டமான முகப்பும், 4,00,000 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ளே அரங்குகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதே போல் 300 ஏக்கர் பரப்பளவில் வாகனம் நிறுத்தும் இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. காலை முதலே ஏராளமான திமுக தொண்டர்களும், இளம் தலைமுறையினரும், மகளிர் அணியினரும், பொதுமக்களும் தொடர்ந்து குவிந்து வருகிறார்கள்.
2 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 2ம் நாளான நாளை, முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட இருக்கின்றன. அதன் பிறகு நாளை மாலை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாநாட்டின் நிறைவிரையாற்றுகிறார். இந்த மாநாட்டையொட்டி திராவிட இயக்க வரலாறு குறித்த கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. பல அரிய புகைப்படங்கள் அடங்கிய 2000க்கும் மேற்பட்ட புகைப்படங்களும் கூடிய அந்த கண்காட்சி மாநாட்டின் அரங்கிற்கு அருகிலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த கண்காட்சியையும் ஏராளமானோர் பார்த்து, வரலாற்றினை அறிந்து வருகிறார்கள். மேலும் ஸ்டாலின் தலைமையில், 100 ஜோடிகளுக்கு, இலவச சுயமரியாதை திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது.