Spotlightவிமர்சனங்கள்

எதற்கும் துணிந்தவன் – விமர்சனம் 3.5/5

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இன்று வெளிவந்திருக்கும் படம் “எதற்கும் துணிந்தவன்”. சூர்யாவின் சூரரைப் போற்று, ஜெய் பீம் இரு படங்களும் ஓடிடி’யில் வெளியானதால் சூர்யா ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாட முடியாத நிலை.

பல வருடங்களுக்குப் பிறகு ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்பில் மீண்டும் திரையரங்கில் வெளிவந்திருக்கும் இப்படம் ரசிகர்களை கவர்ந்ததா இல்லையா என்பதை விமர்சனம் மூலம் காண்போம்…

கதைப்படி,

வட நாடு தென்னாடு என்ற இரு கிராமத்தினருக்கும் இடையே திருமணத்திற்கு பெண் கொடுப்பதும் எடுப்பதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில், தென்னாட்டில் இருந்து வட நாட்டிற்கு மணமாகி சென்ற பெண் இறந்துவிட, இறப்பிற்கு காரணம் அவரது கணவர் என தெரிய வருகிறது.

தென்னாட்டில் நல்ல கெளரவமாக இருந்து வருகிறார் சத்யராஜ். இவரது மகனாக வருபவர் சூர்யா. வக்கீலாக இருக்கிறார்.

இறந்த பெண்ணிற்காக வாதாடி, வட நாட்டைச் சேர்ந்தவர்க்கு தண்டனைப் பெற்றுத் தருகிறார். இதன் காரணமாக இரு கிராமத்தினருக்கும் இடையே சில வருடங்களாக பிர்ச்சனை இருந்து வருகிறது.

இந்நிலையில், வட நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சரின் மகனாக வரும் வினய், தென்னாநாட்டைச் சேர்ந்த பல இளம் பெண்களை மிரட்டி பணிய வைத்து ஆபாச வீடியோக்களை எடுத்து விடுகிறார். அந்த வீடியோக்களை வைத்து சூர்யாவை மிரட்டுகிறார்.

பல பெண்களின் வாழ்க்கையை கண்ணபிரானாக வரும் சூர்யா எப்படி காப்பாற்றினார்.? இன்பாவாக வரும் வில்லன் வினய் மற்றும் அவருக்கு துணை சென்றவர்கள் என்னவானார்கள் என்பதே படத்தின் மீதிக் கதை.

கண்ணபிரானாக சூர்யா, பொருத்தமான தேர்வு. இப்படி ஒரு கதையில் நடித்ததற்கே ஒரு துணிச்சல் வேண்டும், அந்த துணிச்சல் சூர்யாவிடம் உள்ளது. இப்படத்தின் வாயிலாக அதை செய்தும் காட்டியுள்ளார். மிடுக்கான தோற்றத்தில் வசன உச்சரிப்பு, ஆக்‌ஷன், நடனம், சென்டிமெண்ட், காதல், காமெடி என பல பரிமாணங்களில் ”சும்மா கிர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு” இறங்கி அடித்திருக்கிறார்.

நாயகியாக வந்த ப்ரியங்கா மோகன், அழகான தேவதையாக வருகிறார். அநேக படங்களில் நாயகிகள் பலர் வந்து செல்லும் வழக்கமான கதாபாத்திரமாக இல்லாமல் கதையின் ஓட்டத்தை நகர்த்தும் முக்கியமான ‘கீ’யாகவும் இருக்கிறார்.

வில்லன் இன்பாவாக வினய்… அமுல் பேபி மாதிரி சுற்றித் திரிந்தவரை வில்லனாக பார்க்க வைத்துவிட்டது கோலிவுட். இக்கதாபாத்திரத்தையும் கனக் கச்சிதமாக செய்திருக்கிறார். துப்பறிவாளன், டாக்டர் படங்களுக்குப் பிறகு இப்படத்தில் மீண்டும் வில்லனாக தனது கதாபாத்திரத்தை மிரட்டலாக கொடுத்திருக்கிறார் வினய். ஸ்டைலிஷாக வந்து வில்லத்தனத்தில் தனது முத்திரையை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

சத்யராஜ் மற்றும் சரண்யா பொன்வண்ணன் இருவருக்கும் சரியான கதாபாத்திரங்கள்… பூஸ்ட் ஏற்றும் அப்பா, கலகலப்பேற்றும் அம்மா என இருவரும் காட்சிகளில் சரிபாதியாக நடித்து ஸ்கோர் அடித்திருககிறார்கள்.

மற்றபடி, இளவரசு, எம் எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, திவ்யா, சூரி, புகழ், ராமர், தங்கதுரை, என அனைவருக்கும் சரியான கதாபாத்திரங்கள் தான்.. படத்தின் ஓட்டத்திற்கு சரியாக கை கொடுத்திருக்கிறார்கள் அனைவரும்.

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை கையில் எடுத்தமைக்காகவே இயக்குனர் பாண்டிராஜ் அவர்களுக்கு எழுந்து நின்று மரியாதை செய்யலாம். யாரும் தொடத்துணியாத கதையை கையில் எடுத்து, அதற்கான தீர்ப்பையும் க்ளைமாக்ஸில் கச்சிதமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

பெண் குழந்தைகள் பிறந்ததும் மரக்கன்றுகளை நடுவது, அனைத்து இளம் பெண்களின் கைபேசியிலும் காவல் துறையின் “SOS” பாதுகாப்பு அப்ளிகேஷன் வைத்திருப்பது என சில   பெண்களையும் சென்றடையும் நன்காட்சிகளை வைத்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி.

பெண்களை தெய்வமாக பார்த்து அவர்களை போற்ற வேண்டும் என்ற கருத்தை படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அழுத்தமாக பதிவு செய்து கொண்டே காட்சிகளை நகர்த்தி  சென்றிருக்கிறார் இயக்குனர்.

இமான் இசையில் பாடல்களை இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தி கொடுத்திருந்திருக்கலாம்.. பின்னனி இசை மிரட்டல் என்றாலும் படத்திற்கான தீம் மியூசிக்கை இன்னும் சற்று பலமாகவே கொடுத்திருந்திருக்கலாம்.

ரத்னவேலு அவர்களின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம். சண்டைக் காட்சிகளையும் பாடல் காட்சிகளையும் ரசனைக்கு ஏற்றவாறு ஒளி கொடுத்து மெருகேற்றியிருக்கிறார்.

ராம் – லக்‌ஷ்மண் மற்றும் அன்பறிவ் சண்டை இயக்குனர்களின் சண்டைக் காட்சிகள் அதிரடி காட்டியிருக்கின்றன..

ஹீரோயிசத்தை சற்று குறைத்து கதையின் ஓட்டதிற்கு வழி கொடுத்திருந்தால் இன்னும் சற்று கூடுதல் கவனத்தை கொடுத்திருந்திருக்கும்…

எதற்கும் துணிந்தவன் – பெண்களின் பாதுகாப்பிற்காக எதற்கும் எதையும் துணிந்து நிற்பவன்…

Facebook Comments

Related Articles

Back to top button