ஐஸ்வர்யா ராஜேஷ், அனுமோல், ஐஸ்வர்யா டட்தா, “ஜித்தன்” ரமேஷ், செல்வராகவன் நடிப்பில் திரைக்கு வந்திருக்கும் படம் தான் “ஃபர்ஹானா”. நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவான படத்தை, ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயரித்துள்ளது.
கதைப்படி,
சென்னையில், ஐஸ் ஹவுஸ் ஏரியாவில் செருப்பு கடை வைத்திருப்பவர்தான் கிட்டி. அவரின் மகன் “ஜித்தன்” ரமேஷும் அந்த கடையை பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால், போதிய வியாபாரம் இல்லாத காரணத்தால் வறுமையில் திண்டாடுகிறது அவர்களின் குடும்பம்.
அதனால் வேலைக்கு செல்கிறார் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ். கால் சென்டரில் வேலை செய்யும் இவர் ஆரம்பத்தில் க்ரெடிட் கார்ட் விற்பனை செய்கிறார். ஆனால், போதிய வருமானம் இல்லாத காரணத்தால், முகம் தெரியாத நபர்களோடு போனில் பேசும் பிரிவுக்கு செல்கிறார் ஐஸ்வர்யா.
அங்கு ஆரம்பத்தில் பலரும் செக்ஸ் சாட் செய்து வர. பின்னர் மன கஷ்டத்தை பகிர்ந்து கொள்வதற்காக ஐஸ்வர்யா ராஜேஷை தொடர்பு கொள்கிறார் செல்வராகவன்.
அதன் பின், தினமும் அவர்கள் பேச ஆரம்பிக்க அது நட்பாக மாறுகிறது. அதன் காரணமாக, செல்வராகவனை பார்க்க வேண்டும் என்று அழைக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
ரமலான் பண்டிகை அன்று இருவரும் சந்திக்கவிருந்த நிலையில், ஒரு சில காரணத்திற்காக செல்வராகவனை பார்க்க மறுக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
ஐஸ்வர்யாவை பார்த்தே ஆகா வேண்டும் என்று முடிவு செய்யும் செல்வராகவன், ஐஸ்வர்யா பற்றிய தகவல்களை சேகரித்து அவரை பிளாக் மெயில் செய்கிறார். அதன் பின் இருவரும் சந்தித்தார்களா? இல்லையா? என்பது படத்தின் மீதிக்கதை.
சமீப காலத்தில் அதிகப்படியான பீமேல் சென்ரிக் படங்களை தேர்வு செய்து நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த வகையில் மீண்டும் ஒரு நல்ல கதையை தேர்வு செய்துள்ளார் என்பதில் சந்தேகம் இல்லை. தொழுகை, பதட்டம், மாமனாருக்கு பயந்த ஒரு பெண் என அனைத்து காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
படம் ஆரம்பித்து அரைமணி நேரம் கழித்து வருகிறார் செல்வராகவன். ஆனால், கை, காது, முதுகு, கால் என க்ளைமாக்ஸுக்கு அரைமணி நேரம் வரை முகத்தையே காட்டவில்லை செல்வா. அந்த பாத்திரத்திற்கு அவ்வளவு பீல்ட்-அப் தேவையில்லை. கிட்டத்தட்ட ஒரு சைக்கோவாக நடித்திருக்கும் செல்வராகவன் இம்முறையும் நம்மை கவர்ந்துள்ளார்.
உடன் நடித்த ஐஸ்வர்யா டட்தா, அனுமோல், ஜித்தன் ரமேஷ், சக்தி என அனைவரும் கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.
ஜஸ்டின் பிரபாகரனின் இசை படத்திற்கு தூணாக இருந்தது. பாடல் ஹிட் ரகம்.
த்ரில்லர் பட பாணியில் கதை அமைத்த நெல்சன் திரைக்கதையை கொஞ்சம் கவனமாக அமைத்திருக்கலாம். இண்டர்வல் காட்சி வரை என்ன நடக்கிறது என்பதையே அவர் தெளிவாக சொல்லவில்லை. ஆனால், படத்தின் விறுவிறுப்பை இரண்டாம் பாதி முழுவதும் மெயின்டெய்ன் செய்தார் நெல்சன்.
ஒளிப்பதிவு செய்த கோகுலுக்கு நிச்சயம் பெரிய எதிர்காலம் இருக்கிறது. மிக குறுகிய இடங்களில் பல காட்சிகளை அழகாக காட்சி படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார் கோகுல்.
ஃபர்ஹானா – சுமை தாங்கியவள்.