
நடிகர்கள்: பாலா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி சக்திவேல், ஊர்வசி அர்ச்சனா, மதன், அமுதவானன், நிகிலா, அபிலாஷ், ஜீவா, ரியா, மகாநதி சங்கர், முருகானந்தம், டி எஸ் ஆர், ஆகாஷ், மார்ஷல், மனோஜ்
இயக்கம்: ஷெரீப்
ஒளிப்பதிவு: பாலாஜி கே ராஜா
இசை: விவேக் – மெர்வின்
தயாரிப்பாளர்: ஜெய்கிரண்
படத்தொகுப்பு: ஷிவானந்தீஸ்வரன்
கதைப்படி,
நாயகன் பாலா மற்றும் நாயகி நமீதா கிருஷ்ணமூர்த்தி இருவரும் காதலர்கள். இவர்கள் இருவரும் திருமண விழா, பிறந்தநாள் விழா என நிகழ்வுகளுக்கு ஏ டூ இசட் அனைத்து விதமான வேலைகளையும் செய்து கொடுக்கும் ஒரு டீமை வைத்துள்ளனர். அதன்மூலம் அவர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
சின்ன சின்ன நிகழ்வுகளாக வருகிறதே, பெரிதாக ஒரு நிகழ்வு வந்து அதில் தனது பிசினஸை பெரிதாக்க வேண்டும் என்ற கனவில் இருந்து வருகிறார் பாலா.
மற்றொருபுறம், பாலாஜி சக்திவேல் மற்றும் அர்ச்சனா இருவரும் கணவன், மனைவியாக சந்தோஷமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால், ஒருவருக்கொருவர் தங்களை குழந்தையாக பாவித்து,, அளவில்லா காதலுடன் தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். பாலாஜி சக்திவேல் செக்யூரிட்டி வேலை பார்த்து வருகிறார்.
தனது மனைவிக்கு 60ஆம் கல்யாண விழா வைத்து அழகு பார்க்க நினைக்கிறார் பாலாஜி சக்திவேல். அதற்காக பாலாவை சந்தித்து ஏற்பாடுகளை செய்து தருமாறு கூறுகிறார் பாலாஜி சக்திவேல். அதற்கு 50 லட்சம் வரை செலவாகும் என்று கூறுகிறார் பாலாஜி சக்திவேல்.
ஊரில் இருக்கும் நிலத்தை விற்று, அதில் கிடைத்த பணத்தை வைத்து விழாவை பெரிதாக நடத்த திட்டமிடுகிறார். இவர்கள் பணம் வாங்கிய அடுத்த நாளே, பண மதிப்பிழப்பை அறிவிக்கிறார் பிரதமர்.
தான் வாங்கி வந்த ரூபாய் நோட்டுகள் அனைத்து செல்லாது என்று கூறியது உடைந்து அழுகிறார் பாலாஜி சக்திவேல்.
அதன்பிறகு அவரது வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் பாலா, சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நாயகனாக களமிறங்கியிருக்கிறார். இதற்கு முன் சின்ன சின்ன கதாபாத்திரங்களை இவர் ஏற்று நடித்திருந்தாலும், ஒரு படத்தின் நாயகனாக தோன்றியிருக்கும் முதல் படம் இதுவாகும்.
சின்ன சின்ன இடங்களில் நடிப்பில் இன்னும் சற்று பயிற்சி எடுத்திருக்க வேண்டும் பாலா.. என்று கூற வைத்துவிட்டார். நடனத்தில் ஆக்ஷனில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார். காதல் காட்சிகளில் கூட மனம் கவர்கிறார்.
நாயகி நமீதா கிருஷ்ணமூர்த்தி காட்சிகளில் அழகாகவும் நடிப்பில் அளவாகவும் தனது காட்சிகளில் வந்து செல்கிறார். இரண்டாம் பாதியில் வரும் செண்டிமெண்ட் காட்சி படத்திற்கு தேவை என்றாலும், அதை ஏனோ கதையில் திணித்த ஒரு ஃபீலை கொடுத்துவிட்டது.
பாலாஜி சக்திவேல் – அர்ச்சனா இருவரும் தங்களது கதாபாத்திரங்களை நச்சென செய்துமுடித்துவிட்டார்கள். அதிலும், பாலாஜி சக்திவேலின் நடிப்பு வேற லெவல் தான்…
க்ளைமாக்ஸ் காட்சியானது யாரும் எதிர்பாரா திருப்பம் தான். அடுத்து இதுதான் நடக்கும் என்று ஓரளவிற்கு யூகம் தெரியும் அளவிற்கான கதை இருந்தது படத்திற்கு சற்று சறுக்கல் தான்.
ஒளிப்பதிவு படத்திற்கு பலம் தான். விவேக் – மெர்வின் இசையில் திருமண பாடல் ஆட்டம் போட வைத்திருக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் கண்களில் கண்ணீர் வருவதற்கு பின்னணி இசையானது பெரும் பக்கதுணையாக இருக்கிறது.
கதையின் நோக்கம் பலமாக இருந்தாலும், திரைக்கதை சற்று தடுமாறியதால் படத்திற்குள் பெரிதாக நம்மால் இணைய முடியவில்லை. இருந்தாலும் படத்தில் கடைசி 15 நிமிடம் நம்மை அழ வைக்கும்படியான காட்சிகள் வைத்திருப்பதால், படத்தின் இயக்குனராக ஷெரிப் வென்றிருக்கிறார்.
காந்தி கண்ணாடி – வலி..