Uncategorized

பொன்னியின் செல்வன் 2 – விமர்சனம் 4/5

யக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, பிரபு, லால், ரகுமான், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா லெட்சுமி, ஷோபிதா, உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த வருடம் வெளிவந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் பாகம் 1. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த படைப்பு பலராலும் பெரிதும் பாராட்டப்பட்டு வரவேற்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பாகம் இரண்டு இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

கதைப்படி,

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக கதை நகர்கிறது. இரண்டாம் பாகம் பார்ப்பதற்கு முன் முதல் பாகத்தை பார்த்துவிட்டு வந்தால் மட்டுமே கதையின் நகர்வு பார்ப்பவர்களுக்கு புரியும்.

ஆரம்பத்திலேயே, இளமை கால ஆதித்ய கரிகாலனுக்கும் (விக்ரம்) நந்தினிக்கும்(ஐஸ்வர்யா ராய்) இடையேயான காதல் காட்சிகள் நகர்கிறது. சிலரின் கோபத்தால் ஐஸ்வர்யா ராய் நாட்டை விட்டு கடத்தப்படுகிறார்.

நந்தினியை காண இயலா துக்கம் கரிகாலனை வாட்டி வதைக்கிறது. வருடங்கள் கடந்தோட, வீரபாண்டியன் கரிகாலனால் கொல்லப்படுகிறார். தன்னை வளர்த்த வீரபாண்டியரை கொன்ற கரிகாலனைக் கொல்ல, சோழப் பேரரசுக்குள் பெரிய பழுவேட்டரையரின் மனைவியாக நந்தினி கோட்டைக்குள் வருகிறார்.

பாண்டியர்களை கையில் வைத்துக் கொண்டு சோழப்பேரரசை வீழ்த்த திட்டம் தீட்டுகிறார் நந்தினி.

இலங்கைக்குச் சென்ற அருள்மொழி (ஜெயம்ரவி) இறந்துவிட்டதாக சோழப்பேரரசு முழுவதும் காட்டுத்தீயாக பரவ, தனது படையுடன் தஞ்சை கோட்டை நோக்கி பயணப்படுகிறார் கரிகாலன்.

இச்சூழலில், அருள்மொழியை காப்பாற்றி பாதுகாப்பு கொடுக்கிறார் வந்தியத் தேவன் (கார்த்தி).

கரிகாலன் (விக்ரம்), அருள்மொழி (ஜெயம்ரவி) மற்றும் இவர்களின் தந்தையான சக்ரவர்த்தி (பிரகாஷ்ராஜ்) இந்த மூவரையும் ஒரே நாளில் கொன்று விட பாண்டியர்கள் முன்னிலையில் உறுதியேற்கிறார் நந்தினி (ஐஸ்வர்யா ராய்).

இதற்கு நடுவே, சோழப்பேரரசை வீழ்த்த சில சிற்றரசுகளும் திட்டம் தீட்டுகின்றன.

இவர்களின் இந்த திட்டம் குந்தவைக்கு(த்ரிஷா) தெரியவர, சோழப்பேரரசை காப்பாற்ற முயல்கிறார்.

நந்தினியை காண கந்தர்வ கோட்டைக்கு செல்கிறார் கரிகாலன். அங்கு சில பல முடிவுகளை எடுக்க திட்டமிடுகிறார்.

சோழப்பேரரசை வீழ்த்த நினைப்பவர்களின் கனவு நனவானது.? பாண்டியர்களின் திட்டம் பழித்ததா.? நந்தினி கரிகாலனை பழிவாங்கினாரா.? என்பதே படத்தின் மீதிக் கதை.

ஆதித்ய கரிகாலனாக விக்ரம், தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார். வீரம், விவேகம், வேகம் என அனைத்தையும் கண்முன்னே நிலைநிறுத்தியிருக்கிறார் விக்ரம். அதுமட்டுமல்லாமல், காதலால் தான் படும் கஷ்டத்தை, ஐஸ்வர்யா ராயிடம் கூறும் போது கண்களில் ஈரத்தைக் கொண்டு வைத்து விடுகிறார்.

சிற்றரசு மன்னர்களிடம் குழுமியிருந்து பேசும் சிங்கிள் காட்சியில் அவரது நடிப்பின் உச்சத்தைக் காண முடிந்தது. பொன்னியின் செல்வன் கதையை இனி புத்தகத்தில் யார் படித்தாலும், அந்தந்த கேரக்டராக இப்படட்தில் நடித்தவர்களை மட்டுமே உருவப்படுத்திக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட கதாபாத்திரத் தேர்வைக் கனக்கச்சிதமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் மணிரத்னம்.

ஊமை ராணியாக ஐஸ்வர்யா ராயின் முகம் கொண்ட அந்த பெண்மணி யார் என்பதை பெரும் திருப்புமுனைக் காட்சியாக வைத்திருப்பது படத்திற்கு பலம். கார்த்தியின் மீது வந்து விழும் பழியை எப்படி அவர் எதிர் கொண்டார் என்பதும் ட்விஸ்ட் காட்சிகளாக வந்து நிற்கிறது.

கடைசியாக வரும் போர்க் காட்சிகள் சற்று தொய்வடையும்படியான நகர்வாக இருந்தாலும், கதை எப்படி முடியும் என்பதை முன்பே அறிந்து விட்ட காரணத்தில் அதுவும் பெரிய குறையாக கண்ணில் சிக்காமல் சென்று விடுகிறது.

படத்தின் முதல் பாதியில், நானா நீயா என்று போட்டிப் போட்டுக் கொண்டு தன் அழகால் அனைவரையும் கவர்ந்திழுத்திருக்கின்றனர் ஐஸ்வர்யா ராயும் த்ரிஷாவும். காட்சிக்கு காட்சி இருவரும் பேரழகிகளாக கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்கள்.

தன் கண்களாலும், கவர்ச்சியான முகத்தாலும் எந்த ஆண் மகனையும் தன்னால் கவர்ந்திழுக்க முடியும் என்ற எண்ணம் கொண்டு வென்றிருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.

விக்ரமுடன் நேருக்கு நேர் நின்று பேசும் காட்சிகளில் கண்களை திரையில் இருந்து நகராமல் பார்த்துக் கொண்டார் ஐஸ்வர்யா ராய்.

சரத்குமார், ரகுமான், பிரகாஷ் ராஜ், என நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களுக்கானது அழகாக செய்து முடித்திருக்கிறார்கள். ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் ஷோபிதா இருவர்களுக்கும் காட்சிகள் குறைவாக இருந்தாலும் மனம் நிறைவாகும் நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

அருள்மொழி வர்மனாக அழகு இளவரசனாக தனது நடிப்பில் கொடி நாட்டிருக்கிறார் ஜெயம் ரவி. ஆக்‌ஷன், செண்டிமெண்ட், விவேகம் என நடிப்பில் அசுரத்தனத்தை காட்டியிருக்கிறார்.

சோழப்பேரரசைக் காக்கும் கருவியாக துறுதுறுவென வந்து அனைவரையும் கவர்கிறார் வந்தியத்தேவனான கார்த்தி.

தன் நண்பனுக்காக களம் கண்டு போர்கண்ட, விக்ரம் பிரபுவிற்கு இப்படம் ஒரு திருப்புமுனையாகக் கூட அமையலாம்.

படத்தின் மிகப்பெரும் பலமாக உடன் பயணித்தது பின்னணி இசையே. ஏஆர் ரகுமானைத் தவிர இந்த பிரம்மாண்டத்திற்கு உயிர் கொடுக்க வேறு யாரும் இல்லை என்றே கூறலாம்.

ஒவ்வொரு இடத்திலும் உங்களது நடிப்பா எனது இசையா என்று போட்டிப் போட்டுக் கொண்டு இசையை பறைசாற்றியிருக்கிறார் ஏ ஆர் ரகுமான்.

இளம்வயது கரிகாலன் மற்றும் நந்தினியாக நடித்த இருவரும் காதல் இளம்பிஞ்சுகளாக கண்களில் ஈரமாக கணக்கிறார்கள்.

ரவிவர்மனின் ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சியையும் அழகூற கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறது. ஐஸ்வர்யா ராய்க்கு மட்டும் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பார்கள் போலும். செப்புச் சிலையாக வர்ணிக்கும்படியான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் ரவிவர்மன்.

ஆர்ட் பணிகளும் கூர்ந்து கவனிக்கும்படியாக இருந்தது பலம்.

கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்டதால், தனக்கான இயக்கத்தை தெளிவாக கொடுத்து அசத்தியிருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இனி கல்கியின் புத்தகத்தை வாங்கி படிக்கவில்லை என்றாலும், முழு பொன்னியின் செல்வனையும் படித்துவிட்ட உணர்வை இப்படத்தின் வாயிலாக கொடுத்த மணிரத்னத்தை பாராட்டியே ஆக வேண்டும்.

பலரும் தொட வேண்டும் என்று நினைத்த “பொன்னியின் செல்வன்” படக் கனவை நனவாக்கியதோடு மட்டுமல்லாமல் அதை வெற்றிகரமாகவும் செய்து முடித்திருக்கிறார் மணிரத்னம். காலம் கடந்து இன்னும் பல ஆண்டுகள் பொன்னியின் செல்வன் நின்று பேசும்.

பொன்னியின் செல்வன் பாகம் 2 – உச்சம் தொட்ட உன்னத படைப்பு.

Facebook Comments

Related Articles

Back to top button