
மரிய ராஜா இளஞ்செழியன் அவர்களின் எழுத்து மற்றும் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், அப்பாஸ், ஸ்ரீ கௌரி பிரியா, ஜார்ஜ் மரியன், கீதா கைலாசம், அதிர்ச்சி அருண், மதுரை முத்து, மகேஷ் தேவி, பிரார்த்தனா நாதன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ”ஹாப்பி ராஜ்”.
இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஜஸ்டின் பிரபாகரன். ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் மதன் கிறிஸ்டோபர். படத்தொகுப்பு பணிகளை செல்வா ஆர் கே அவர்கள் செய்திருக்கிறார். படத்தினை பியாண்டு பிக்சர்ஸ் சார்பில் ஜெய்வர்தா அவர்கள் தயாரித்திருக்கிறார்கள்.
பல வருடங்கள் காத்திருப்பதற்குப் பிறகு பிறந்த மகன் என்பதால் ஜிவி பிரகாஷ் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார் அப்பா ஜார்ஜ் மரியன். அம்மாவாக வருகிறார் கீதா கைலாசம். உருவத்தால் பலரும் நம்மை கேலி செய்ததால், தனது அழகான மகனை பொத்தி பொத்தி வளர்க்கிறார் ஜார்ஜ்.
உருவத்தால் தன்னை கேலி செய்தாலும், தனது படிப்பு நம்மை உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்றெண்ணி நன்றாக படித்து பள்ளியில் ஆசிரியராகவும் ஆகிவிடுகிறார் ஜார்ஜ் மரியன். இதனைத் தொடர்ந்து ஜி வி பிரகாஷையும் நன்றாக படிக்க வைக்கிறார்.
பள்ளி காலம் ஆரம்பித்து தொடர்ச்சியாக தனது தந்தையின் உருவத்தை குறித்து அனைவரும் விமர்சித்து வருவதால் தந்தை மீது ஒரு சிறிய வெறுப்பும் இருக்கிறது ஜி.வி பிரகாஸுக்கு. ஒரு கட்டத்தில் ஜிவி பிரகாஷின் காதல் தோல்விக்கும் ஜார்ஜ் மரியம் ஒரு காரணமாக அமைவதால், அவரை விட்டு விலகி இருக்க முடிவெடுக்கிறார் ஜி வி பிரகாஷ்.
அந்த சமயத்தில் பெங்களூருவில் வேலை கிடைக்கிறது ஜி.வி பிரகாசுக்கு. அங்கு செல்லும் ஜி வி பிரகாஷ், தனது ஆபீஸில் பணிபுரியும் நாயகி கௌரி பிரியாவுடன் பழக்கம் ஏற்படுகிறது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது.
அப்பாஸ் அவர்களின் மகளாக வரும் கௌரி பிரியா, பணக்கார வீட்டு பெண்ணாவார். ஜிவி பிரகாஷின் திறமையை கண்டு தனது மகளை அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார் அப்பாஸ்.
இந்த சமயத்தில் தனது அப்பாவை பற்றி கூறினால் இந்த சம்மந்தம் நிச்சயம் நடக்காது என்றும் யோசிக்கிறார் ஜீவி பிரகாஷ். ஒரு கட்டத்தில் தனது அப்பாவின் புகைப்படத்தை கௌரி பிரியாவிடமும் அப்பாஸிடமும் காண்பிக்கிறார் ஜி வி. அவர்களும் ஓகே சொல்லிவிடுகின்றனர். இதனைத் தொடர்ந்து ஜார்ஜ் மரியம் பெங்களூருவிற்கு தனது சொந்த பந்தங்களை அழைத்து நேரில் வந்து பெண் பார்க்க வருகிறார்.
அங்கு ஏற்படும் குழப்பத்தால் அப்பாஸ் கோபம் அடைகிறார். மேலும் ஜார்ஜ் மரியனை மரியாதை குறைவாகவும் நடத்தி விடுகிறார் அப்பாஸ். ஜார்ஜ் மரியம் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டால்தான் நான் திருமணத்திற்கு சம்மதிப்பேன் என்று அப்பாஸ் கூற, அப்பாஸ் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டால் மட்டும் தான் நான் திருமணத்திற்கு சம்மதிப்பேன் என்று ஜார்ஜ் மரியன் கூற… தடைபடுகிறது திருமணம்..
அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை…
முதல் பாதி சற்று தடுமாறினாலும், இரண்டாம் பாதியில் நம்மை கதைக்குள் இழுத்துச் சென்று அனைவரையும் கண்கலங்க வைக்கும் ஒரு படைப்பைக் கொடுத்து ஒட்டுமொத்த ரசிகர்களின் பாராட்டையும் அள்ளிச் சென்று விட்டார் இயக்குனர்.
ஜார்ஜ் மரியன் அவர்களின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்திருக்கிறது. இரண்டாம் பாதியில் தனக்கான பங்களிப்பு குறைவாக இருந்தாலும், அதனை ஏற்றுக் கொண்டு, கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தில் நடித்திருக்கிறார் ஜி வி பிரகாஷ்குமார்.
தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் தொடாத ஒரு ”நாட்” எடுத்து, அதனை அழகாக கொடுத்திருக்கிறார் இயக்குனர். வசனங்கள் சற்று இன்னமும் கூர்மையாக இருந்திருக்கலாம்… ஒரு சில குறைகள் எட்டிப் பார்த்தாலும், நிறைவான ஒரு மனதுடன் நம்மை திரையரங்கை விட்டு அனுப்பி வைத்திருக்கிறார் இயக்குனர்.
ஸ்ரீ கெளரி ப்ரியாவின் அழகு நம்மை கட்டிப் போட்டு விடுகிறது. மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு பெரிய பங்காற்றியிருக்கிறது. ஜஸ்டின் பிரபாகரனின் இசை ஆரம்பத்தில் இரைச்சலாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் மனதை வருடியிருக்கிறது.
பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் எண்ட்ரீ கொடுத்திருக்கிறார் அப்பாஸ். ஆங்காங்கே அவர் ஆடும் நடனம் சூப்பர்பா என்று சொல்ல வைத்திருக்கிறது.
கீதா கைலாசம் தனக்குக் கொடுக்கப்பட்டதை அழகாக செய்திருக்கிறார். முதல் பாதியில் காமெடி என்ற பெயரில் இருந்த குறையை சற்று இல்ல அதிகமாகவே கவனித்திருந்திருக்கலாம்.
ஜார்ஜ் மரியன், படத்தின் ஹீரோவே இவர் தான் என்று அடித்துக் கூறலாம். படம் முழுக்க அப்படியொரு நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அதிலும், தான் யார் என்பதை அப்பாஸிடம் கூறும் காட்சிகளில் கண்கலங்க வைத்து விடுகிறார். இரண்டு இடைவேளை இரண்டு க்ளைமாக்ஸ் என்று கதை நின்று சென்றதையும் சற்று கவனித்திருந்திருக்கலாம்..
அளவான பட்ஜெட்டை கதைக்கேற்றவாறு கொடுத்து, சிறப்பாக இப்படத்தை தயாரித்திருக்கிறது பியாண்ட் பிக்சர்ஸ். குடும்பத்தோடு நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படைப்பாக இந்த வாரம் வருகிறது “ஹாப்பி ராஜ்” …





