
வி1 என்ற ஹிட் படத்தினை இயக்கிய ராம் அருண் காஸ்ட்ரோ, தனது அடுத்த படைப்பாக உருவாக்கியிருக்கும் படம் தான் இந்த “ஹர்காரா”.
காளி வெங்கட், ராம் அருண் காஸ்ட்ரோ, கெளதமி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் இந்தியாவின் முதல் தபால் மனிதன் கதை சொல்லும் படமாக உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் இந்த “ஹர்காரா”. வித்தியாசமான தலைப்போடும் தோற்றத்தோடும் உருவாகி அனைவரையும் முதல் பார்வையிலேயே கவர்ந்திழுத்திருந்தது இந்த படம்.
தேனி அருகே ஒரு அழகிய மலை கிராமத்தில் நடக்கும் கதையாக செல்கிறது. அக்கிராமத்தில் தபால் அலுவலத்தில் பணிபுரிபவராக வருகிறார் காளி வெங்கட். முதியவர்களின் உதவித்தொகை, சிறு சேமிப்பு என அப்பகுதி மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருந்து வருகிறது அந்த அஞ்சல் அலுவலகம்.
இதனால், அதில் பணிபுரியும் காளி வெங்கட்டை தன் வீட்டு மனிதனாக பார்க்கின்றனர் அக்கிராம மக்கள். ஆனால், காளி வெங்கட்டிற்கோ அங்கிருந்து வெளியேறி விட வேண்டும் என்ற எண்ணம்.. இந்த சூழலில் கடிதம் ஒன்றை கொடுப்பதற்காக மலையின் உச்சியில் இருக்கும் கிராமம் ஒன்றிற்கு பயணப்படுகிறார் காளி வெங்கட்.
அந்த பகுதிக்குச் சென்ற பிறகு அங்கு இருக்கும் மனிதர்களை பார்க்கிறார். அவர்கள் மாதேஸ்வரன் என்பவரை தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். மாதேஸ்வரன் யார்.? எதற்காக அங்குள்ள மக்கள் அவரை தெய்வமாக வழிபடுகிறார்கள்.?? தெய்வமாக வழிபடும் அளவிற்கு அந்த பகுதி மக்களுக்கு அப்படி என்ன செய்து விட்டார் இந்த மாதேஸ்வரன்.? என்பதை விளக்கும் படம் தான் இந்த ஹர்காரா.
கதையின் நாயகனாக ஜொலித்திருக்கிறார் காளி வெங்கட். கலகலவென, துறுதுறுப்பாக இருந்து ஒவ்வொரு காட்சியினையும் வேகமாக கடந்து செல்வதற்கு இவரது வேகம் நன்றாகவே ஈடு கொடுத்திருக்கிறது. வழக்கமான உடல் மொழியினை கொடுத்து நம்மை வெகுவாகவே கவர்கிறார் காளி வெங்கட்.
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அக்கதாபாத்திரமாகவே மாறி, நம்மை அந்த உலகத்திற்கு அழைத்துச் செல்லக் கூடியவர் காளி வெங்கட். இப்படத்திலும், அதையே கொடுத்து நம்மையும் அக்கிராம மக்களோடு இணைய வைத்திருக்கிறார்.
வி1 படத்தில் வித்தியாசமான ஒரு நடிப்பைக் கொடுத்து அசத்திய ராம் அருண் காஸ்ட்ரோ, இதிலும் அதே நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இயக்குனர் என்பதால் கூடுதல் பொறுப்பு என்று ஒவ்வொரு காட்சிகளையும் மெனக்கெடல் செய்து தனது நடிப்பைக் கொடுத்திருக்கிறார் ராம் அருண்.
நடிப்பிலும் கதையிலும் இம்முறையும் தனது தனிமுத்திரையை பதிவு செய்திருக்கிறார் ராம் அருண் மாஸ்ட்ரோ..
கதையிலும் சரி, திரைக்கதையிலும் சரி எந்த வித சமரசமும் இல்லாமல் தனிஒருவனாகவே தமிழ் சினிமாவில் ஜொலித்திருக்கிறார் ராம் அருண்.
பிச்சைக்காரன் ராமமூர்த்தி,ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் முக்கிய பாத்திரங்களில் நடித்து நம்மை ஈர்த்திருக்கிறார்கள். ஒரு சில காட்சிகள் என்றாலும் அதிகமாகவே நம்மை கவர்கிறார் நாயகி கெளதமி.
மலைகிராமம் என்பதால் கலை இயக்குனருக்கு சற்று அதிகான பணிகளே இருந்திருக்கிறது. அதை கவனமுடனும் பொறுப்புடனும் நன்றாகவே செய்து முடித்திருக்கிறார் கலை இயக்குநர் VRK ரமேஷ்.
150 வருடத்திற்கு முன்பு இருந்த மக்களை திரையில் கொண்டு வரும் போது இருக்கும் சவால்களை நன்றாகவே திறமையுடன் கையாண்டு அசத்தியிருக்கிறார் இயக்குனர்.
இப்படத்தினை பார்த்த பிறகு தபால்காரர்கள் மீதான அன்பு இன்னும் அதிகமாகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
பிலிப் R. சுந்தர் மற்றும் லோகேஷ் இளங்கோவன் இவர்கள் இருவரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு காட்சிக்கான மெனக்கெடல், திரையில் நன்றாகவே தெரிகிறது.
ராம் சங்கரின் இசை ரயில் தண்டவாளம் போன்று கதையோடு பயணிக்க வைப்பதில் பின்னணி இசை மிகப்பெரும் பங்கு வகித்திருக்கிறது.
டானி சார்லஸின் எடிட்டிங்க் – தரம்.
தனித்துவமான கதையோடு, அருமையான திரைக்களத்தோடு ஒரு வகையான திரை அனுபவத்தை கொடுத்திருக்கும் “ஹர்காரா”விற்கு வாழ்த்துகள் ..
ஹர்காரா – தமிழ் சினிமாவின் தரமான படைப்பு…