Spotlightஇந்தியா

கேரளாவில் இன்று பந்த்; 60 பேருந்துகள் உடைப்பு!

கேரளா: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன.

உச்ச நீதிமன்ற உத்தரவிற்குப் பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டபோது, 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பலர், சபரிமலைக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அவர்களால் செல்ல முடியவில்லை.

இந்நிலையில், நேற்று அதிகாலை கேரளாவைச் சேர்ந்த 50 வயதுக்குட்பட்ட இரண்டு பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. திருவனந்தபுரத்தில் நடந்த போராட்டத்தின்போது பாஜகவினருக்கும், போலீசாருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த சபரிமலை கர்ம சமிதி அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

முழு அடைப்பு போராட்டம் காரணமாக பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. முக்கிய சாலைகள் வாகன நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. பத்தனம்திட்டா பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. முழு அடைப்புக்கு ஆதரவு அளிக்காமல் பேருந்துகளை இயக்கியதால் போராட்டக்காரர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். பல்வேறு பகுதிகளில் அரசுப் பேருந்துகள் மீது கற்களை வீசி போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.

60க்கும் மேற்பட்ட பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, மாநிலம் முழுவதும் பேருந்து சேவையை நிறுத்தி வைப்பதாக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்தது. போராட்டக்காரர்களின் வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்

Facebook Comments

Related Articles

Back to top button