Spotlightசினிமாவிமர்சனங்கள்

J. பேபி – விமர்சனம் 4/5

சுரேஷ் மாரி இயக்கத்தில் ஊர்வசி, தினேஷ், மாறன், ஜெய மூர்த்தி, ஏழுமலை, தக்‌ஷா, மெலடி டோர்காஸ், மாயஸ்ரீ அருண் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த ஜே. பேபி.

இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் டோனி பிரிட்டோ. ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஜெயந்த் சேது மாதவன்

படத்தொகுப்பு செய்திருக்கிறார் சண்முகம் வேலுசாமி. தயாரித்திருக்கிறார்கள் பா ரஞ்சித், அபயானந்த் சிங், பியூஸ் இச்ங், சவுரேஷ் குப்தா, அதிதி ஆனந்த் உள்ளிட்டோர்.

கதைக்குள் பயணப்பட்டு விடலாம்….

அண்ணன் தம்பிகளாக வருகின்றனர் மாறனும் தினேஷும். தன்னை அவமானப்படுத்திய வீட்டில் இருந்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் தம்பி தினேஷுடன் பேச்சுவார்த்தை இல்லாமல் இருக்கிறார் மாறன்.

இந்த சூழலில், லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அழைப்பு வர, இருவரும் ஸ்டேஷன் செல்கின்றனர். அப்போது, இவர்களின் அம்மாவான ஊர்வசி (பேபி), கொல்கத்தாவில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷனில் இருப்பதாகவும் இருவரும் ஒன்றாக சேர்ந்து கொல்கத்தா சென்று அம்மாவை அழைத்து வருமாறு கூறி விடுகிறார் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்.

மன ரீதியாக சற்று பாதிக்கப்பட்டிருந்த தனது அம்மா ஊர்வசியை அழைத்து வர கொல்கத்தா செல்கின்றனர் தினேஷும் மாறனும். கணவர் இல்லாத ஊர்வசிக்கு மொத்தமாக மூன்று ஆண் மகன்களும் இரண்டும் பெண் மகள்களும் இருக்கிறார்கள்.

இவர்களில் மாறனும் தினேஷும் கொல்கத்தா செல்கின்றனர். அங்கு ராணுவ வீரர் ஒருவர் இவர்களுக்கு உதவி செய்கிறார். தனது அம்மாவை மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்தார்களா.? பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்த அண்ணன் தம்பியான இருவரும் ஒன்று சேர்ந்தார்களா.?? என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் என்பதை தாண்டி, நாயகர்கள் என்று தான் சொல்ல வேண்டும். இரண்டு ஹீரோ சப்ஜெக்டாக தினேஷும் மாறனும் இக்கதையில் வாழ்ந்திருக்கிறார்கள். காமெடி நடிகராக அனைவராலும் அறியப்பட்ட மாறன், இப்படத்தில் நல்லதொரு குணச்சித்திர நடிகராக தோன்றி அசத்தியிருக்கிறார். ஆங்காங்கே சில இடங்களில் இவர் அடிக்கும் கெளண்டர்கள் படத்திற்கு நன்றாகவே வொர்க்-அவுட் ஆகியுள்ளது.

ஒரு மிடில் க்ளாஸ் குடும்பஸ்தன் எப்படியான உடல் மொழியில் இருப்பார்ரோ அப்படியான ஒரு தோற்றத்தில் தோன்றி அசத்தியிருக்கிறார் தினேஷ். தனக்கு சரிசமமாக மாறனோடு திரைப் பகிர்வை பகிர்ந்து கொண்டது அருமை.

படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றால் அது ஊர்வசி. இப்படத்திற்கு இக்கதைக்கு இவரை விட்டால் வேறு யாரும் பொருத்தமாக இருக்கமாட்டார்கள் என்பது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டார் நடிகை ஊர்வசி. தனது அனுபவ நடிப்பை ஆங்காங்கே விதைத்து விட்டுச் சென்று அனைவரின் கண்களிலும் ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்துவிட்டார் ஊர்வசி.

குறிப்பாக, மகன் தினேஷ் தன்னை அடித்துவிட்டார் என்ற கவலை ஒருபக்கம் இருந்தாலும், மகன் கவலைப்படுவானே என்றறிந்து வீட்டிற்கு வந்து சாப்பிடும் காட்சியில் படம் பார்ப்பவர்கள் அனைவரையும் அழ வைத்துவிட்டார் ஊர்வசி.

மொழி தெரியாத ஊரில் மாட்டிக் கொண்ட பின், மீண்டும் தனது மகன்களை பார்த்தவுடன் வந்த பாச உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் போது நச் என ஸ்கோர் செய்திருக்கிறார். கொல்கத்தாவில் உதவி செய்யும் ராணுவ வீரரின் செயல்பாடுகள், எங்கே போனாலும் தமிழன் ஒருவன் எப்போதும் உனக்கு உறுதுணையாக இருப்பான் என்ற எண்ணத்தை வர வைத்திருக்கிறார்.

தினேஷின் தங்கையாக நடித்தவர், தனது அம்மாவைப் பற்றி பேசும் காட்சிகளில் அழ வைத்திருக்கிறார். படத்திற்கு மிகப்பெரும் பலமாக வந்து நின்றது பின்னணி இசை தான். எந்த இடத்தில் என்ன வேண்டுமோ அதை அளவாக கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர்.

ஒளிப்பதிவும் மற்றொரு தூணாக வந்து நின்றது கூடுதல் பலம்.

குடும்ப உறவுகளையும் அம்மாவின் அளவில்லாத பாசத்தையும் வெளிக்கொணரும் விதமாக ஒரு உண்மைச் சம்பவத்தை கண்முன்னே நிலைநிறுத்திய இயக்குனருக்கு ஆகப்பெரும் வாழ்த்துகள்.

J. பேபி – தமிழ் சினிமா கொண்டாட வேண்டிய படைப்பு…

Facebook Comments

Related Articles

Back to top button