Spotlightசினிமாவிமர்சனங்கள்

காடப்புறா கலைக்குழு – விமர்சனம் 3.5/5

Sakti Ciinee Productions Pvt Ltd சார்பில், டாக்டர் முருகானந்தம் வீரராகவன், டாக்டர் சண்முகப்பிரியா முருகானந்தம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜா குருசாமி இயக்கத்தில், முனீஸ்காந்த், காளி வெங்கட், மெட்ராஸ் புகழ் ஹரி, ஸ்வாதி முத்து , ஶ்ரீலேகா ராஜேந்திரன், சூப்பர் குட் சுப்பிரமணி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இன்று திரைக்கு வந்திருக்கும் படம் தான் “காடப்புறா கலைக்குழு”.

கதைப்படி,

கரகாட்ட கலையை மையப்படுத்தி உருவாகி வெளிவந்திருக்கிறது இப்படம். காடப்புறா கலைக்குழு என்ற பெயரில் கரகாட்ட குழு ஒன்றை நடத்தி வருகிறார் முனீஸ்காந்த். இக்குழுவில், மேளம் வாசிப்பவராக வருகிறார் காளி வெங்கட்.

வெள்ளந்தி குணம் கொண்ட முனீஸ்காந்த் தன் கலை மீதும் மற்றவர்கள் மீதும் அளவு கடந்த அன்பு செலுத்தி வருகிறார்.

முனீஸ்காந்தும் காளிவெங்கட்டும் பல வருடங்களாக நண்பர்களாக இருந்து வருகின்றனர். அனாதையாக நின்ற ஹரியை தத்தெடுத்து 20 வருடங்களாக உடன்பிறந்த தம்பியாக வளர்த்து வருகிறார் முனீஸ்காந்த்.

அண்ணன் மீது தம்பியும் அளவு கடந்த பாசமாக இருக்கிறார்.

அதே ஊரில், இசைக் கச்சேரி குழு வைத்திருக்கும் சூப்பர் குட் சுப்ரமணியின் சகோதரியான நாயகி ஸ்வாதி முத்துவை காதலிக்கிறார் ஹரி.

ஒருகட்டத்தில் ஒருதலைகாதல் இரு தலைகாதலாக மாறுகிறது. அதே ஊரில், பஞ்சாயத்து தலைவராக வருகிறார் மைம் கோபி.  முனீஸ்காந்த் மீது அவ்வப்போது சின்ன சின்ன கோபத்தை காட்டி வருகிறார் மைம்கோபி.

அன்பால் அனைவரையும் எப்படி முனீஸ்காந்த் அரவணைத்தார்.? கலையை காப்பாற்ற எப்படியெல்லாம் பாடுபடுகிறார்.?? ஹரியின் காதல் என்னவானது.??? என்பதே படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகனாக முனீஸ்காந்த், அற்புதமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். சின்ன சின்ன இடங்களில் அவர் கொடுக்கும் கெளண்டர் வசனங்கள் படத்தின் ஓட்டத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.

ஒரு சில இடத்தில் அவர் வெளிப்படுத்தும் எமோஷன் காட்சிகள், படம் பார்ப்பவர்களை கண்ணீர் வர வைத்து விடுகிறது.

குறிப்பாக, ஶ்ரீலேகா ராஜேந்திரன் மரணப்படுக்கையில் இருக்கும் போது உருகி அழுதது, அவரின் இறுதி ஊர்வலத்தில் கவலை கொண்ட முகத்தோடு ஆடியது, தனது நண்பனின் மகளுக்காக சேமித்து வைத்த பணம் முழுவதையும் கொடுக்கும் போது என உணர்ச்சி மிகுந்த பல காட்சிகளில் உயிரோட்டமாய் நடித்திருக்கிறார் முனீஸ்காந்த்.

காளிவெங்கட்டும் வழக்கமான தனது நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார். ஹரி, ஸ்வாதி முத்து இருவரின் ஹெமிஸ்ட்ரி படத்தில் நன்றாகவே கைகொடுத்திருக்கிறது..

ஸ்வாதி முத்து அழகு தேவதையாக வந்து காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

சூப்பர்குட் சுப்ரமணியின் கெட்-அப் பார்த்ததும் சிரிப்பை வரவழைத்துவிடுக்கிறார். அதிலும், அவருக்கான பின்னணி இசை அல்டிமேட்.

தனது ரெளடித்தனமான நடிப்பை மிகவும் யதார்த்தமாக கொடுத்து வழக்கம்போல் அசத்தியிருக்கிறார் மைம்கோபி.

வில்லனாக வந்த லீ கார்த்தி, முரட்டுத்தனமான ஆக்‌ஷனில் அதகளம் செய்திருக்கிறார்.

அதுபோக, கரகாட்ட குழுவில் இருந்த ஸ்வேதா ரமேஷ், நடனத்திலும் நடிப்பிலும் அசரவைத்திருக்கிறார்.

ஸ்வேதா ரமேஷின் அண்ணனாக நடித்தவர், தாத்தாவாக நடித்தவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஆத்தங்குடி இளையராஜா என படத்தில் நடித்த அனைவரின் நடிப்பையும் அளவோடு வாங்கியிருக்கிறார் இயக்குனர்.

முதல் படம் என்பது போல் இல்லாமல், மிகவும் உயிரோட்டமான இயக்கத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜாகுருசாமி. கரகாட்ட நடனத்தை கனக்கச்சிதமாக திரைக்கு கொண்டு வந்திருக்கிறார்.

பாடல் வரிகளை இடையூறு செய்யாத இசையை படத்தில் கொடுத்திருக்கிறார் ஹென்றி. பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.

படத்திற்கு மற்றொரு தூணாக வந்து நிற்பது ஒளிப்பதிவு தான். எந்த இடத்திலும் குறை கூற முடியாத அளவிற்கு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வினோத் காந்தி.

முகம் சுழிக்கும்படியான காட்சிகள் எதுவும் இல்லாமல், ஒரு அழகான அருமையான குடும்பத்தோடு ரசிக்கும்படியான இப்படப்பை கொடுத்ததற்காகவே இயக்குனருக்கு பெரும் வாழ்த்துகளை கூறலாம்.

தமிழ் சினிமா சிகப்பு கம்பளம் விரித்து அறிமுக இயக்குனரான ராஜா குருசாமியை வரவேற்கிறது. இப்படியான படைப்புகள் படங்களின் மூலமாக கொண்டு வரும்போது கலைக்கான மரியாதை மக்களிடத்தில் சென்று சேர்கிறது. அதை கொண்டு சேர்த்தபெருமை இயக்குனரைச் சாரும்.

காடப்புறா கலைக்குழு – தமிழ் சினிமாவின் அழகிய “கலை” படைப்பு… 

Directed by -Raja Gurusamy
Produced by-Dr. Muruganandam Veeraragavan M. Pharm., Ph. D.
Dr. Shanmugapriya Muruganandam B. P. T., MIAP. (Sakti Ciinee Productions Pvt Ltd)

Lyrics-Raja Gurusamy
Music-Henry
Cinematography-Vinoth Gandhi
Editor-Ram Gopi
Art-Inba Art Prakash
Costume Designer-Dr.Shanmugapriya Muruganandam B. P. T., MIAP.
Dance-Keshav Depur
Stunt-Sharp Sankar
Sound design and Mixing- Naveen Shankar
Costumer-S. Natarajan
Production executive-J. Mani
Stills-A. S. Ashok Pandian
Publicity Designs-Sindhu Grafix
Pro-Sathish(AIM) 

Facebook Comments

Related Articles

Back to top button