
பி வி ஷங்கர் இயக்கத்தில் பாரதிராஜா, ஜி வி பிரகாஷ் குமார், இவானா மற்றும் தீனா நடித்திருக்கும் திரைப்படம் தான் கள்வன்.
நாயகன் ஜி வி பிரகாஷ்குமார் மற்றும் தீனா இருவரும் நண்பர்கள். சிறு சிறு திருட்டு வேலைகளை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர் இருவரும்.
சத்தியமங்கலம் அருகேயுள்ள ஒரு மலைகிராமத்தில் கதை நகர்கிறது. அருகில் இருக்கும் கிராமத்தில் திருட செல்லும்போது, அங்கு நாயகியாக வரும் இவானாவை சந்திக்கிறார் ஜி வி பிரகாஷ்.
கண்டதும் இவானா மீது காதலில் விழுகிறார் ஜி வி பிரகாஷ். திருடனை எப்படி விரும்புவது என ஜி வி பிரகாஷை, திட்டி அனுப்பி விடுகிறார் இவானா.
ஒருநாள் முதியோர் இல்லத்திற்கு வேலைக்குச் செல்கின்றனர் ஜி வி பிரகாஷும் தீனாவும். அங்கு அனாதையாக இருக்கும் பாரதிராஜாவை பார்க்கிறார் ஜி வி பிரகாஷ்.
பாரதிராஜாவிற்கு ஜி வி பிரகாஷ் உதவி செய்வதை கண்டு, இவானா ஜி வி பிரகாஷ் மீது காதலை வளர்த்துக் கொள்கிறார்.
ஆனால், பாரதிராஜாவிற்கு ஏன் உதவி செய்கிறார் என்பதில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. இறுதியில், ஜி வி பிரகாஷின் காதலை இவானா ஏற்றுக்கொண்டாரா.? ஜி வி பிரகாஷின் திட்டம் பழித்ததா.?? உள்ளிட்ட கேள்விகளுக்கெல்லாம் இரண்டாம் பாதியில் விடை இருக்கிறது.
நாயகன் ஜி வி பிரகாஷ், தனக்கு கொடுக்கப்பட்டதை அளவோடு நடித்து நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார். துறுதுறுவென தனது கதாபாத்திரத்தை எந்த இடத்திலும் கீழே இறக்காமல், நிலையாக நின்று தனது கேரக்டரை செய்து முடித்திருக்கிறார். குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் யானையுடனான காட்சியில் அப்ளாஷ் வாங்குகிறார்.
நாயகி இவானா வழக்கமான நடிப்பை கொடுத்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்திருக்கிறார். தீனாவின் ஓவர் ஸ்பீச் ஆங்காங்கே எரிச்சலைதான் வரவழைத்தது. டயலாக்கை குறைத்திருக்கலாம்.
பாரதிராஜாவின் நடிப்பு மட்டுமே படத்தில் பேசுபொருளாக வந்து நிற்கிறது. அவர்து ப்ளாஷ்பேக் காட்சிகளும் யோசிக்க வைக்கிறது.
முதல் பாதி என்னதான் சொல்ல வருகிறது என்ற கேள்வி எழுந்ததால், படத்திற்குள் பெரிதாக பயணிக்க முடியவில்லை. வழக்கமான காதல் கதை, வலுவில்லாத இரண்டாம் பாதி என நகர்வதால் கதை எந்த இடத்திலும் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பாரதிராஜாவின் கதாபாத்திரத்தைத் தவிர..
பின்னணி இசை படத்திற்கு பலமாக இருக்கிறது. ஒளிப்பதிவும் பக்கபலமாக நிற்கிறது.
கள்வன் – வலு குறைவு