Spotlightவிமர்சனங்கள்

க. மு – க. பி திரைப்பட விமர்சனம் 3.5/5

றிமுக இயக்குனர் புஷ்பநாதன் ஆறுமுகம் இயக்கத்தில் டி எஸ் கே, விக்னேஷ் ரவி, சரண்யா ரவிச்சந்திரன், பிரியதர்ஷினி, நிரஞ்சன், உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “க.மு. – க.பி.” (கல்யாணத்திற்கு முன் – கல்யாணத்திற்கு பின்).

கதைப்படி,

சினிமா தயாரிப்பாளர் ஒருவரிடம் கதை கூற ஆரம்பிக்கிறார் டி எஸ் கே. இயக்குனராக ஆக வேண்டும் என்ற லட்சியத்தில் பல வருடமாக போராடிக் கொண்டிருப்பவர் டி எஸ் கே.

கதையில், விக்னேஷ் ரவி மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் காதலர்களாக வருகின்றனர். இந்த இரு கதாபாத்திரத்தை வைத்து தனது கதையை நீள்கிறார் டி எஸ் கே.

விக்னேஷ் ரவி இயக்குனராக ஆக வேண்டி ஒவ்வொரு தயாரிப்பாளரிடமும் கதை கூறி வருகிறார். சரண்யா நல்ல ஒரு சம்பளத்துடன் ஐடி துறையில் வேலை பார்த்து வருபவர்.

பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டு, தங்களது வாழ்க்கையை வாழத் துவங்குகின்றனர்.

சரண்யாவின் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர். நாட்கள் செல்ல செல்ல, இருவருக்கும் சின்ன சின்ன சண்டை வருகிறது. இதனால், இருவருக்குமிடையேயான பிரிவு உண்டாகிறது. கல்யாணத்திற்கு முன் இருந்த காதல் கல்யாணத்திற்கு பின் இல்லையே என இருவரும் எண்ண, அதன் விளைவு விவாகரத்திற்குச் சென்று நிற்கிறது.

இருவரும் பிரிந்து விடுவதென முடிவு எடுக்கிறார்கள். அதன்பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

அதே வேளையில், விக்னேஷ் ரவி தயாரிப்பாளர் ஒருவரிடம் கதை கூற, அந்த கதையின் ஹீரோவாக டி எஸ் கே வருகிறார். இது ஒரு கிளைக் கதையாக நகர்கிறது. அதில் டி எஸ் கே’வும் ப்ரியதர்ஷினியும் காதலர்கள்.

டி ஸ் கே’வின் நண்பனாக வரும் நிரஞ்சனுக்கு திருமணம் முடிந்து சில நாட்களே ஆகியிருக்கிறது. பெண்களை எப்போது ஆணை விட ஒரு படி கீழே தான் வைத்து பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர் நிரஞ்சன். இதனாலேயே, தனது மனைவியிடம் எப்போதுமே அன்பாக நடந்து கொள்ள மாட்டார்.

இப்படி ஒரு கிளைக் கதையில் இவர்களின் வாழ்க்கையில் என்ன நடந்து என்பதையும் இயக்குனர் கூறியிருக்கிறார்.

படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரமும் தங்களது கேரக்டர்களின் வலுவை உணர்ந்து நன்றாகவே நடித்திருக்கின்றனர்.

விக்னேஷ் ரவி மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் இருவரின் நடிப்பும் பாராட்டும்படியாக இருந்தது. முக பாவனை, உடல் மொழி, வசன உச்சரிப்பு என அனைத்திலும் மிகவும் நேர்த்தியான ஒரு நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர் இருவரும்.

தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரும் நடிகராக உயர்வதற்கான தகுதி விக்னேஷ் ரவியிடம் இருப்பதை தனது அளவான நடிப்பின் மூலம் நிரூபித்திருக்கிறார்.

சின்ன சின்ன கதாபாத்திரத்தில் தனது அசாத்திய நடிப்பை கொடுத்து வந்திருந்த சரண்யா ரவிச்சந்திரன், இப்படத்தில் சிம்பிளான மிகவும் யதார்த்தமான க்யூட்டான ஒரு நடிப்பைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். அதிலும், குழந்தை பிறந்தால் என்னென்ன கமிட்மெண்ட் இருக்கும் என்பதை ஒரு நீண்ட வசனமாக பேசும் இடத்திலும் கண்களை வியப்படைய வைக்கும் நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார் சரண்யா.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நன்கு பரிட்சயமான நடிகர் டி எஸ் கே, இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தனது கேரக்டருக்கு வலு சேர்க்கும் வண்ணம் நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

சின்ன சின்ன இடங்களில் க்யூட் எக்ஸ்ப்ரஷனைக் கொடுத்து நம்மை அதிகமாகவே கவர்கிறார் நடிகை ப்ரியதர்ஷினி.

ஒரு கதாபாத்திரத்தில் தன்னால் என்ன பெட்டராக செய்ய முடியுமோ அதை செய்து அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் நிரஞ்சன். இவரது மனைவியாக நடித்தவரும் கச்சிதமான பொருத்தம். இவர்களது காட்சி சிலருக்கு ஒரு மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே படத்தினை ஒருபடி மேல் எடுத்துச் சென்று நிறுத்தியிருக்கிறது. கவிஞர் ஜெகன் சேட் அவர்களின் பாடல் வரிகள் காதுகளுக்கு இனிமை தான்.

தேவையான இடங்களில் மட்டுமே பின்னணி இசையை பயன்படுத்தியிருப்பது கூடுதல் பலம்.

படத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் வெளிச்சமாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

ஒரு அழகான வாழ்க்கையை, காதலை மிகவும் நேர்த்தியாக கையாண்டு எந்த இடத்திலும் கதையை தொய்வடைய விடாமல் ஒரு காவியமாக படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். வசனங்கள் படத்திற்கு பெரும் பலம் என்றே கூறலாம்.

நிகழ்காலத்தில் திருமணத்திற்கு முன் நடக்கும் காதலையும் திருமணத்திற்கு பின் இருக்கும் காதலையும் திரைக்குக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர்.

எந்த இடத்தில் இருவரது காதல் உடைகிறது என்பதையும் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் இயக்குனர்.

மொத்தத்தில்,

க.மு. – க.பி. – அழகு காவியம்.

படத்தின் ஒளிப்பதிவை ஜி எம் சுந்தர் கவனித்துள்ளார். இவர் மகாராஜா, லப்பர் பந்து ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளரான தினேஷ் புருஷோத்தமனின் சிஷ்யர். இசையமைப்பாளர் ஜிப்ரானிடம் பணியாற்றிய தர்ஷன் ரவிக்குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஷமந்த் நாக் ஒரு பாடலுக்கு இசையமைத்திருக்கிறார். பாலு மகேந்திராவின் மாணவரான சிவராஜ் பரமேஸ்வரன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

இப்படத்தை வி & டோனி இன்டர்நேஷனல் மற்றும் கேபிள் சங்கர் எண்டர்டைன்மென்ட் சார்பில் லால் தேவசகாயம் மற்றும் கேபிள் சங்கர் ஆகியோர் உலகமெங்கும் வெளியிடுகிறார்கள்.

Facebook Comments

Related Articles

Back to top button