
இயக்கம்: சதீஷ்
நடிகர்கள்: கவின், ப்ரீத்தி அஸ்ராணி, பிரபு, வி டிவி கணேஷ், ஆர் ஜே விஜய், ராவ் ரமேஷ், தேவயானி, கௌசல்யா
தயாரிப்பு: ராகுல்
இசை: ஜென் மார்ட்டின்
ஒளிப்பதிவு: ஹரிஷ் கண்ணன்
கதையின் நாயகனான கவினுக்கு யாராவது உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பதைப் பார்த்தால், அவர்களுக்கு அடுத்து என்ன நடக்கும் என்பது கண்முன்னே வந்து செல்கிறது. இந்நிலையில், நாயகி ப்ரீத்தி அஸ்ராணியுடன் காதல் வருகிறது கவினுக்கு.
ஒரு கட்டத்தில், கவினுக்கு முத்தல் கொடுத்துவிடுகிறார் ப்ரீத்தி. அடுத்து ப்ரீத்திக்கு ஒரு அசம்பாவிதம் நடப்பது கவினுக்கு கண்முன்னே வந்து செல்ல, ப்ரீத்தியை விட்டுப் பிரிகிறார் கவின்.
இறுதியில், இவர்களின் காதல் வென்றதா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அதை திறம்பட செய்து முடிப்பவர் நாயகன் கவின். இப்படத்திலும், நெல்சன் என்ற கதாபாத்திரத்தை நன்றாகவே உள்வாங்கி தனது கேரக்டரை மிகச் சரியாக செய்து முடித்திருக்கிறார்.
இருந்தாலும், ஒரு சில இடங்களில் எதற்காக எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல், சிலை மாதிரி அப்படியே நிற்கிறார் என்று தான் விளங்கவில்லை. இன்னும் நடிப்பைக் கத்துக்கணும் கவின்.
அயோத்தி படத்தில் பார்த்த ப்ரீத்தியா இவங்க என்று சொல்லும் அளவிற்கு மிகவும் அழகாக காட்சிகளுக்கு தெரிந்திருந்தார். ஒவ்வொரு காட்சியிலும் அழகுச் சிலையாகவே கண்களில் பட்டார்.
வி ஜே விஜய் மற்றும் விடிவி கணேஷ் இவர்கள் அடித்த காமெடி கவுண்டர்கள் படத்தில் நன்றாகவே வொர்க் அவுட் ஆகியுள்ளது.
படத்தில் நடித்த தேவயானி, பிரபு, கெளசல்யா, ராவ் ரமேஷ் உள்ளிட்ட நடிகர்களும் படத்தில் சொன்னதை மட்டும் செய்திருக்கிறார்கள்.
நடன இயக்குனரான சதீஷுக்கு இயக்குனராக இதுவே முதல் படம். ஒரு சில இடங்களில் சற்று தடுமாறியிருந்தாலும், ஒரு சில இடங்களில் சமாளித்து காட்சிகளை கடத்திக் கொண்டு சென்றிருக்கிறார்.
நடன இயக்கத்தின் திறமையை க்ளைமாக்ஸில் சற்று வைத்திருந்திருக்கலாம். இருந்தாலும், கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைக் கடந்திருப்பது பலம் தான். இன்றைய இளம் தலைமுறைகளை இப்படம் நிச்சயம் கவரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இசை மற்றும் ஒளிப்பதிவு இரண்டுமே படத்திற்கு ப்ளஸ் தான்.
எடுத்த முயற்சிக்கு இயக்குனர் சதீஷுக்கு பாராட்டுகள்.
கிஸ் – ஷார்ப்…