
ஒரு அழகான கிராமத்தில் தனது அழகான மனைவி மற்றும் மகனுடன் கெளரவமாக வாழ்ந்து வருபவர் நமது நாயகன் கந்தன். மகன் மீது அளவற்ற அன்பும் காதலும் கந்தனுக்கு.
ஊரில் நல்லது கெட்டது என்று எது நடந்தாலும் முதல் ஆளாக ஓடிப் போய் நிற்பவர் நமது நாயகன் கந்தன்.
அரசியல்வாதியின் துணையோடு அந்த ஊருக்கு டாஸ்மாக் கொண்டு வரப்படுகிறது. முதலில் ஊர்த்தலைவர் பாவா செல்லத்துரை தலைமையில் அந்த கிராமமே அந்த டாஸ்மாக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.
ஒரு மாதத்தில் அந்த மதுக்கடை அகற்றப்படும் என்று கூறியதும் எதிர்ப்பு அடங்கி விட, சிறிது நாட்களுக்குப் பிறகு அந்த கிராமத்தில் உள்ள அனைவரும் அந்த மதுக்கடையில் மது அருந்த ஆரம்பிக்கின்றனர்.
நாயகன் கந்தனும் மதுவிற்கு அடிமையாகிறார். மனைவியின் தாலியை திருடிக் கொண்டு சென்று மது அருந்தும் அளவிற்கு அடிமையாகி ‘குடிமகன்’ என்ற பட்டத்தை வாங்குகிறார்.
கந்தனின் குடும்பம் நிற்கதியாகி விடுகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் கந்தனின் மனைவி ஒரு முடிவு எடுக்கிறார் அது என்ன என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.
கந்தனாக நடித்திருக்கும் ஜெய்குமார் படத்திற்கு சரியான தேர்வுதான். தனது மகன் மீது பாசம் காட்டுவதில் ஆரம்பித்து ஒரு குடிமகனாக போதையில் தள்ளாடுவது வரை கைதேர்ந்த நடிப்பை தான் கொடுத்திருக்கிறார்.
கதாநாயகியகி வரும், ஜெனிபர் சரியான பொருத்தம் தான். குடும்பத்தை சரிவர எடுத்துச் செல்லும் ஒரு குடும்பஸ்திரியாக நம் மனதில் ஆழமாக நிற்கிறார்.
பாவா செல்லத்துரை, பாலா சிங், கிருஷ்ண மூர்த்தி என சில முக்கிய கதாபாத்திரங்களும் படத்தில் உள்ளனர்.
குடித்து விட்டு திருந்துவதும், மீண்டும் குடித்து விட்டு திருந்துவதும் என மீண்டும் மீண்டும் ஒரே காட்சி திருப்பப்படுவதால் சற்றே அலுப்பை தட்டுகிறது.
குடி குடியை கெடுக்கும் என்ற ஒன்றிற்காக ‘குடிமகன்’ஐ பார்க்கலாம்.
குடிமகன் – 3/5