Spotlightவிமர்சனங்கள்

குருப் விமர்சனம் 3/5

1960 -80களில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

1960களில் கேரளாவில் படிக்காமல் சுற்றித் திரிந்த நாயகன் துல்கர் சல்மானை அவரது தந்தை இந்திய விமான படைக்கு வேலைக்கு செல்ல சொல்கிறார். அங்கு தேர்ச்சி பெற்று பணியில் சேர்கிறார் துல்கர்.

நண்பர்களோடு கூத்தடிப்பது, புகைப்பிடிப்பது, மதுப்பழக்கம் என ஏகத்துக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறார் துல்கர்.

இதன் நடுவே காதலும் ஒரு பக்கம் பயணம் ஆகிறது. தான் இறந்து விட்டதாக இந்திய விமானப் படையை நம்ப வைக்கிறார் துல்கர். தன் பெயரை மாற்றி காதலியோடு சேர்ந்து வெளிநாட்டிற்கு பயணம் ஆகிறார் துல்கர். அங்கு சில வருடங்கள் இருந்துவிட்டு, மீண்டும் கேரளாவிற்கு வருகிறார்.

அங்கு ஒரு கொலை குற்றத்திற்காக போலீஸாரால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுகிறார் துல்கர். இதன் வழக்கை நேர்மையான போலீஸ் அதிகாரி ஒருவர் கையில் எடுத்து விசாரணை நடத்துகிறார்.

அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை…

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்கு பிறகு தமிழில் துல்கர் சல்மானுக்கு அடுத்த படமாக வெளிவந்திருக்கிறது “குருப்”. தனக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளில் தனது நடிப்பை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார் துல்கர்.

முதல் பாதியில் ஆங்காங்கே கதையை நிறுத்தி இரண்டாம் பாதிக்கு வாங்க, அங்க முழு கதையையும் சொல்றேன்னு இழுத்துக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர். மெதுவாக நகரும் திரைக்கதையை அமைத்து நம்மை பொறுமையின் சோதனைக்கு தள்ளுகிறார் இயக்குனர்.

கேங்க்ஸ்டர் படமாக இருக்கும் என நம்பி வந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்திருக்கிறார் நாயகன் துல்கர் சல்மான். முழுக்க முழுக்க தன் சுயலாபத்துக்காக, தான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக மற்றவர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் ஒரு கொடூரக்காரனாக குருப்பின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஒரு கொலை நடக்கிறது, அதை செய்தவரக்ள் கைது செய்யப்படுகிறார்கள். கொலை செய்யப்பட்ட நபரின் உடலை எரித்ததற்காக நாடு முழுக்க தேடப்படும் குற்றவாளியாக குருப்பை தேடுவது என்பது புதிதாக தெரிகிறது.

நாயகியாக ஷோபிதா கண்ணை கவரும் அழகியாக இருந்தாலும், நடிப்பில் பெரிதாக ஈர்ப்பு இல்லை.

ஆள்மாறாட்டத்தில் இன்சுரன்ஸ்க்காக கொலைக்குற்றத்தில் சிக்கி மிகப்பெரும் தேடும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, இன்னமும் தேடப்படும் குற்றவாளியாக இருக்கும் டான் “குருப்”பின் உண்மை சம்பவம் இந்த குருப்.

போலீஸ் அதிகாரியாக இந்திரஜித் சுகுமாரன் மிடுக்கான தோற்றத்தில் நம்மை கவர்கிறார். கம்பீரமான பார்வையில் வேகமெடுக்கிறார்.

நமக்கு கதையில் பெரிதான கதாபாத்திரம் இல்லை என்றாலும் நடித்த டொவினோ தாமஸ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இருவருக்கும் பாராட்டுகள்.

நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவில் ஆங்காங்கே சில காட்சிகளில் கோட்டை விட்டிருந்தாலும், 1970 களில் இருந்தவற்றை கண்களுக்கு விருந்து படைத்ததற்காக ஒளிப்பதிவாளரை பாராட்டலாம்.

சுஷின் ஷியாமின் பின்னனி இசை ரசிக்க வைத்தது.

உண்மை கதையை எடுப்பதாக கூறி, பல இடங்களில் இயக்குனர் தடுமாறியதை கவனிக்க முடிந்தது.

இரண்டாம் பாதியில் கொடுத்த வேகத்தை முதல் பாதியிலும் கொடுத்திருந்தால் குருப் டாப் டக்கராக இருந்திருக்கும்.., எனினும் துல்கரின் ரசிகர்களுக்கு இது ஒரு மாஸான ட்ரீட் தான்..

குருப் – வெறுப்பாகல..

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close