
எழுத்து – இயக்கம் : ஷிவா நிர்வனா
நடிகர்கள் : விஜய தேவரகொண்டா, சமந்தா, சச்சின் கேத்கர், சரண்யா பொன்வண்ணன், முரளி ஷர்மா, லக்ஷ்மி
இசை: ஹெஷாம் அப்துல் வகாப்
ஒளிப்பதிவு: முரளி
தயாரிப்பு: மைத்ரி மூவி மேக்கர்ஸ்
பி எஸ் என் எல் நிறுவனத்தி பணிபுரிகிறார் விஜய தேவரகொண்டா. காஷ்மீர் பகுதியில் சென்று பணிபுரிவதாக விருப்பப்பட்டு அலுவலகத்தில் அனுமதி பெற்று அங்கு செல்கிறார் விஜய தேவரகொண்டா.
அங்கு யதேச்சையாக சமந்தாவை காண்கிறார். கண்டதும் காதலாக மாற, சமந்தாவை காதலிக்க ஆரம்பிக்கிறார் விஜய்.. தான் பாகிஸ்தான் பெண் என்று முதலில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் சமந்தா. இருந்தாலும், சமந்தாவிற்கு நிறைய உதவிகளை செய்கிறார் விஜய். அதன் பின், தான் திருச்செந்தூரைச் சேர்ந்த தமிழ் பெண் தான் என்று விஜய்யிடம் உண்மையை கூறிவிடுகிறார் சமந்தா.
விஜய்யின் மனதைக் கண்டு விஜய் மீது காதலில் விழ, இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இருவரின் வீட்டிலும் காதலை சொல்ல நினைக்கும் போது தான் எழுகிறது பிரச்சனை.
ஆம், சமந்தாவின் தந்தையான முரளி ஷர்மா, இந்து தர்மத்தையும் அதன் தன்மையையும் போற்றும் சுத்தமான ஆன்மிகவாதி, அதற்கு நேர்மாறாக விஜய்யின் தந்தையான சச்சின் கேத்கர் இந்து தர்மத்தை எதிர்க்கும், அறிவியலை மட்டுமே நம்பும் ஒரு நாத்திகவாதி. நடக்கும் அனைத்தும் இறை சக்தி இல்லை, அனைத்துமே அறிவியல் என்று நம்பக்கூடியவர்.
சச்சித் கேத்கர் மற்றும் முரளி ஷர்மா இருவரும் எதிரெதிர் துருவங்களாக நிற்கின்றனர். இருவருமே காதலுக்கு எதிராக நிற்கின்றனர். விஜய்யை திருமணம் செய்தால் கஷ்டப்படுவாய், அவரின் ஜாதகம் சரியில்லை, அதற்கு அவர் ஒரு யாகம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார் முரளி ஷர்மா. இதை எதையும் நம்பாமல், எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்கின்றனர்.
இவர்களுக்கு குழந்தை பிறப்பது தள்ளிச் செல்ல, இதற்கெல்லாம் காரணம் யாகம் நடத்தாதது என்று சமந்தா நினைக்கிறார். இதனால் இருவருக்குள்ளும் பிரிவு ஏற்படுகிறது.
அதன்பிறகு என்ன நடந்தது.? குடும்பம் சேர்ந்ததா.? இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
காதல், மோதல் என இரண்டிற்கும் பொருத்தமான ஒரு நடிகர் என்றால் அது இவர் தான் என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம் அதுதான் விஜய தேவரகொண்டா. இந்த படத்திலும் அதை தெளிவாக செய்து முடித்திருக்கிறார். எப்போதும் போல், காதல் மன்னனாக, ரொமன்ஸ் கிங்’காக இப்படத்தில் அதகளம் செய்திருக்கிறார் விஜய். காதல், எமோஷன்ஸ், அவளை பிரியவும் முடியாமல் சேரவும் முடியாமல் தனது எமோஷ்னலான காதலை எப்படி அவளிடம் புரிய வைப்பது என ஏங்கும் காட்சிகளில் எல்லாம் நம்மை அதிகமாகவே ரசிக்க வைத்துவிட்டார்.
அழகு தேவதையாக காட்சிக்கு காட்சி மாறுபட்ட அழகாக தோன்றி ரசிகர்களை ஈர்த்திருக்கிறார் சமந்தா. சிலையாக தோன்றி, அனைவரின் பார்வையையும் தன் பக்கம் ஈர்த்துவிட்டார் சமந்தா. இந்த பொண்ணுக்காக என்னவென்னா பண்ணலாம் என்று சொல்லக் கூடிய அளவிற்கு, தனது காதலை நடிப்பின் உச்சத்தில் கொண்டு வந்து நிறுத்தி அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் சமந்தா.
வழக்கம்போல் சீனியர் நடிகர்களான சச்சித் கேத்கர் மற்றும் முரளி ஷர்மா இருவரும் தங்களது அனுபவ நடிப்பை அளவாக கொடுத்து நடித்திருந்தனர். எப்போதும் இல்லாத அளவாக சற்று மீட்டர் ஏற்றி நடித்திருந்தார் சரண்யா பொன்வண்ணன்.
அழகான காதல் கதையை கையில் எடுத்து, அழகான காவியமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஷிவா நிர்வனா. முதலில் காதல் பருவத்தில் சற்று தடுமாறினாலும், திருமணத்திற்கு பின்னான காதல் கதை மற்றும் மோதலை சமரசமின்றி நேர்க்கோட்டில் பயணப்பட வைத்திருக்கிறார் இந்த இயக்குனர்.
காதல் காட்சியில் இருந்த சண்டைக் காட்சியைத் தவித்திருந்திருக்கலாம். திருமணத்திற்கு பின்னான ஹீரோயிசம் சண்டைக் காட்சியையும் படத்திலிருந்து தவிர்த்திருந்திருக்கலாம்.
ஆம், படத்தில் மொத்தமாக இரண்டு சண்டைக் காட்சி தான். இரண்டையும் தவிர்த்து ஹீரோயிசம் இல்லாத கதையாக சற்று பயணப்பட வைத்திருந்திருக்கலாம்.
இதுமட்டுமே படத்தில் சற்று குறையாக தென்பட்டது. மற்றபடி காதல் கதையாக இல்லாமல் காதல் உயிரோட்டமாக கொடுத்த இயக்குனருக்கு ஆகப்பெரும் வாழ்த்துகள்.
படத்தில் மிகப்பெரும் பலம் என்றால் அது பாடல்கள் தான். ஹெஷாம் அப்துல் வகாப் இசையில் பாடல்கள் கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்ற ரகம்.. பின்னணி இசையும் கதையோடு பயணப்பட வைத்திருக்கிறது.
காஷ்மீர் காட்சிகளை தனது கேமராவில் நன்றாகவே படம்பிடித்து காண்பித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் முரளி. முதல் பாதியில் இருந்த சண்டைக் காட்சிகளில் ஒளிப்பதிவை சற்று கவனித்திருக்கலாம்.
மற்றபடி,
குஷி – காதல் வென்றது..