Spotlightசினிமாவிமர்சனங்கள்

லைசென்ஸ் – விமர்சனம் 3/5

இயக்குனர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில், சூப்பர் சிங்கர் புகழ் ராஜலெட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் “லைசென்ஸ்”. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகியிருக்கிறார் ராஜலெட்சுமி.

இப்படத்தை JRG புரடக்சன்ஸ் சார்பில் N.ஜீவானந்தம் தயாரித்திருக்கிறார்.

ராதாரவி, N.ஜீவானந்தம், விஜய் பாரத், பழ.கருப்பையா, கீதா கைலாசம், அபி நட்சத்திரா, தன்யா அனன்யா, வையாபுரி, நமோ நாராயணன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கதைப்படி,

ராதாரவிக்கு மகளாக வருகிறார் பாரதி(ராஜலெட்சுமி). 8 வயது குழந்தைக்கு தாயான பாரதி, அரசு பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார்.

சிறு வயதில் ராதாரவியுடன் ஏற்பட்ட கோபத்தில் பல வருடங்களாக தனது அப்பாவுடன் பேசாமல் இருக்கிறார் பாரதி.

சின்ன சின்ன தவறையெல்லாம் தட்டி கேட்கும் பாரதி, பெரிய தவறை கண்டால் வெகுண்டு எழுகிறார். அதிலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை கண்டால் அனல் பறக்கும் பாரதியாக மாறி, அவர்களுக்காக குரல் கொடுக்கிறார்.

அப்படியாக, அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி ஒருவரை வசதி படைத்த ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்து விட, சிறுமிக்காக போராடுகிறார் பாரதி.

இப்படியான சூழலில், கொடூர குணம் கொண்ட ஆண்களிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவும், தன்னை சுற்றி இருப்பவர்களையும் காப்பாற்றிக்கொள்ளவும் துப்பாக்கி லைசென்ஸ் வாங்க முயற்சி எடுக்கிறார் பாரதி. அந்த லைசன்ஸ் பெறுவதற்கு மத்திய அரசிடம் அனுமதி கோறுகிறார்.

காவல்துறை விசாரணை நடத்தி பாரதியின் முன் கோபம் அறிந்து துப்பாக்கி லைசென்ஸ் பெறுவதற்கான அனுமதி நிராகரிக்கிறது காவல்துறை. தொடர்ந்து இந்த துப்பாக்கி லைசன்ஸ் பெறுவதற்காக பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்து நீதிமன்றம் ஏறுகிறார் பாரதி.

இறுதியில் தனது உரிமையை நீதிமன்றம் வாயிலாக பெற்றுக் கொண்டாரா இல்லையா பாரதி என்பதே இப்படத்தின் மீதி கதை

படத்தில் முதன்மை கதாபாத்திரமான பாரதி கதாபாத்திரத்தில் ராஜலெட்சுமி நடித்துள்ளார். கதைக்கேற்ற கதாபாத்திரமாக இருந்தாலும், ஒரு சில இடங்களில் சற்று ஓவர் ஆக்டிங்கையும், ஒரு சில இடங்களில் குறைவான ஆக்டிங்கையும் பார்க்க முடிந்தது.

முதல் படம் என்பதால் ஒரு சில குறைகள் இருந்தாலும், அதை தவிர்த்து விட்டு கேரக்டராக நம் மனதில் ஒட்டிக் கொண்டிருக்கிறார் ராஜலெட்சுமி.

தந்தையாக நடித்த ராதாரவி, தனது அனுபவ நடிப்பில் அசர வைத்திருக்கிறார். சிறு வயது பாரதியாக நடித்த அபி நட்சத்திரா, அசத்தியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். பெரிய வசனங்களை ஒரே காட்சியில் பேசி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.

சார்பட்டா பரம்பரை, மாமன்னன் உள்ளிட்ட படங்களில் அசர வைக்கும் நடிப்பைக் கொடுத்த கீதா கைலாசம், இப்படத்தில் நீதிபதியாக கதாபாத்திரத்திற்கு என்ன வேண்டுமோ அதை அளவாக கொடுத்திருக்கிறார்.

வழக்கம்போல் பழ கருப்பையா வருகிறார், பேச்சில் தெறிக்க விடுகிறார், செல்கிறார்.

மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் மனதில் நிற்கும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

காசி விஸ்வநாதன் காட்சிகளை அழகாகவே ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பைஜூ ஜேக்கப்பின் இசை இன்னும் சற்று மீட்டர் ஏற்றியிருந்திருக்கலாமோ என்று தோன்றியது.

படத்தின் கதை, வசனம் என இரண்டையும் அழகாகவே கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர்.. முதல் பாதியில் சற்று வேகம் குறைவாக செல்லும் படமானது இரண்டாம் பாதி டாப் கியர் போட்டு செல்கிறது. ஆங்காங்கே ஸ்பீட் ப்ரேக்கர் போல், வேகத்தடையாக கதை மெதுவாக நகர்வதையும் காண முடிந்தது.

பாலியல் துன்புறுத்தல் பற்றி ஆயிரம் படம் வந்தாலும், அதற்கு தீர்வு என்பது யாரும் கூறவில்லை. ஆனால்,  அதற்கான அடித்தளத்தை விதைத்திருக்கிறது இந்த “லைசென்ஸ்”.

Facebook Comments

Related Articles

Back to top button