
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘#Love’ வெப் தொடரின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. பாலாஜி மோகன் இயக்கியுள்ள இந்தத் தொடரில் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் தொடர் வெளியாகிறது.
இன்றைய டிஜிட்டல் உலகில் காதல் எப்படித் தொடங்குகிறது, ஒரு உறவு நீடிக்க கெமிஸ்ட்ரி முக்கியமா அல்லது ஒருவருக்கொருவர் பொருந்திப் போவதுதான் முக்கியமா என்ற கேள்வியை மையமாகக் கொண்டு ‘#Love’ உருவாகியுள்ளது.
தாரா மற்றும் மேத்யூ என்ற இரு போட்டியாளர்களைச் சுற்றிக் கதை நகர்கிறது. ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கும் தாரா, ‘FOUND’ என்ற டேட்டிங் ஆப்பை நடத்துகிறார். உறவுக்கு இருவருக்கிடையேயான பொருத்தமே முக்கியம் என்பது அவரது நம்பிக்கை. அர்ஜுன் தாஸ் நடிக்கும் மேத்யூவின் ‘Find My Bae’ ஆப், கெமிஸ்ட்ரியை முன்னிறுத்துகிறது. மற்றவர்களுக்கு ஏற்ற துணையைக் கண்டுபிடித்துக் கொடுக்கும் இவர்கள், தங்களது காதல் வாழ்க்கையில் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதே தொடரின் சுவாரஸ்யம்.
சென்னையில் நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் படக்குழுவினர் தொடரைப் பற்றிப் பேசினர். நவீன காதலை நகைச்சுவையுடனும் நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமான உணர்வுகளுடனும் சொல்ல முயன்றிருப்பதாக இயக்குநர் பாலாஜி மோகன் தெரிவித்தார். காதலுக்கு கெமிஸ்ட்ரி முதலில் ஈர்ப்பை ஏற்படுத்தலாம்; உறவு தொடரப் பொருத்தம் அவசியம் என அர்ஜுன் தாஸ் தனது கருத்தைப் பகிர்ந்தார். கெமிஸ்ட்ரியில் தொடங்கும் உறவு, பின்னர் பொருத்தத்தை நோக்கி நகரலாம் என ஐஸ்வர்யா லட்சுமி கூறினார்.
மேத்யூ கதாபாத்திரத்தின் உணர்வுகளும் பலவீனமான பக்கமும் தன்னைக் கவர்ந்ததாக அர்ஜுன் தாஸ் தெரிவித்தார். தாரா கதாபாத்திரம் தனது இயல்புக்கு நெருக்கமாக இருந்ததால் அதில் நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாக அமைந்ததாக ஐஸ்வர்யா லட்சுமி கூறினார்.
நிர்மல் வில்லியம்ஸ் எழுதியுள்ள இந்தத் தொடரில் ஷரதா சுப்ரமணியன் மற்றும் ஸ்வேதா சக்ரவர்த்தி இணை எழுத்தாளர்களாகப் பணியாற்றியுள்ளனர். May6 Entertainment Factory தொடரைத் தயாரித்துள்ளது. காதல், நட்பு, குடும்பம், லட்சியம் ஆகியவற்றையும் ‘#Love’ பேசுகிறது.




