
அறிமுக இயக்குனர் கிஷோர் இயக்கத்தில் அருண்மொழி மாணிக்கம் அவர்களின் திரைக்கதையில் சிபிராஜ், தான்யா ரவிச்சந்திரன், ராதாரவி, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியிருக்கும் படம் தான் “மாயோன்”.
கதைப்படி,
நாயகன் சிபிராஜ், தொல்லியல் ஆராய்ச்சித் துறையில் பணிபுரிகிறார். அதே துறையில் உயர்ந்த பதவி வகித்து வருபவர் கே எஸ் ரவிக்குமார்.
தொல்லியல் துறையில் பணிபுரிந்து தமிழகத்தின் பல பொக்கிஷத்தை வெளிநாட்டிற்கு கடத்துகிறார் வில்லன் ஹரீஷ் பெராடி.
பொக்கிஷங்களையும் சிலைகளையும் கடத்தும் கும்பலை பிடிக்கவும் அரசு திட்டம் தீட்டுகிறது.
இந்நிலையில்தான், மாயோன் மலைப்பகுதியில் மிகவும் பழமையான கிருஷ்ணர் கோவிலில் உள்ளது. இக்கோவிலில் இரவு நேரத்தில் யார் அங்கு இருந்தாலும் அவர்களுக்கு பித்து பிடித்துவிடும் என்பது அவர்களின் ஐதீகம்.
அந்த கோவிலின் குகை ஒன்றில் பல பொக்கிஷங்கள் இருப்பதை ஓலைச்சுவடி வாயிலாக அறிகிறார் ஹரீஷ் பெராடி.
சிபிராஜ், தான்யா ரவிச்சந்திரன் மற்றும் பகவதி பெருமாள் இவர்களை வைத்து அந்த தங்க பொக்கிஷங்களை கைப்பற்ற திட்டம் தீட்டுகிறார் ஹரீஷ் பெராடி. அவர்களும் ஓகே சொல்ல, பொக்கிஷங்களை கைப்பற்ற கோவிலுக்குள் நுழைகிறது அந்த டீம்.
இரவு நேரத்தில் அக்கோவிலின் உள்ளேச் செல்லும், இந்த குழுவிற்கு என்ன ஆனது.? அக்கோவிலுக்குள் இருக்கும் மர்மம் தான் என்ன.? பொக்கிஷம் என்னவானது..? என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் சிபிராஜ், தனது கேரக்டரில் பொருந்தியிருந்தாலும், இன்னும் கொஞ்சம் கூடுதல் பயிற்சி எடுத்திருக்கலாமோ என்று தான் அங்கங்கு தனது நடிப்பில் கோட்டை விட்டிருக்கிறார். பரபரப்பான கதை என்பதால், பெரிதான விரிசல் தென்படவில்லை.
அழகு சிலையாக வந்த தான்யாவின் நடிப்பை பாராட்டலாம். பகவதி பெருமாளின் நடிப்பை ஏற்றுக் கொள்ளலாம். கே எஸ் ரவிக்குமார் மற்றும் ராதாரவி இருவரும் தங்களது அனுபவ நடிப்பைக் கொடுத்து கேரக்டரை தெளிவாக்கிச் சென்றிருக்கின்றனர்.
கதையும் திரைக்கதையுமே படத்திற்கு சற்று பலமாக அமைந்திருக்கிறது. கிருஷ்ணர் எதற்காக மாயோன் மலை வந்தார்.? அங்கு அவர் இருந்ததற்கு காரணம் என்ன.? அக்கோவிலின் இரவில் நடக்கும் மர்மத்திற்கு என்ன காரணம் என்ற கேள்விகளுக்கெல்லாம் கொடுத்த விடை ஆச்சர்யத்தை பன்மடங்கு அதிகரித்தது.
தெளிவான விளக்கங்களோடு கடவுளையும் அறிவியலையும் மையப்படுத்தி கதை நகர்வதால் விறுவிறுப்பை மேலும் ஏற்றுகிறது. இந்த மாயோனின் பல மர்ம முடிச்சுகள் அடுத்தடுத்த பாகங்களில் கூட அவிழ்ந்து கொண்டே செல்லும்.
முன்னோர்களின் பல ஆச்சர்யமூட்டும் விடயங்கள், நம்மை மேலும் ஆச்சர்யப்பட வைக்கும் என்பதை இப்படத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
CG பணிகளில் இன்னும் சற்றும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்… மேலும், இசைஞானி இளையராஜாவின் இசையில் பின்னணி இசையும் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. பாடல்கள் கேட்கும் ரகம் தான்.
ராம் பிரசாத் இரவு நேர காட்சிகளை சிறந்த முறையில் ஒளிப்பதிவு செய்து கொடுத்திருக்கிறார். பால சுப்ரமணியனின் ஆர்ட் பணிகள் கூர்ந்து கவனிக்கும்படியாக இருந்தது.
மாயோன் – இறை மர்மம்…