Spotlightவிமர்சனங்கள்

மெஹந்தி சர்க்கஸ் விமர்சனம் 3/5

1990களில் பயணிக்கும் கதையில், ஊர் ஊராக சென்று தனது தந்தையுடன் சர்க்கஸ் செய்து பிழைப்பு நடத்தி வருபவர் தான் வட நாட்டைச் சேர்ந்த நாயகி மெஹந்தி. இப்படியாக ஒரு முறை கொடைக்கானலில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்தி ‘மெஹந்தி சர்க்கஸ்’ குழு அங்கு வருகிறது.

இசையால் உலகை ஆட்டிப்படைத்த இளையராஜாவின் காலம் அது. அவரின் இசையால் அடிமையாக்கப்பட்ட நமது ஹீரோ ‘ஜீவா’ கேசட் கடை ஒன்றை கொடைக்கானலில் நடத்தி வருகிறார்.

ஹீரோயினை பார்த்ததும் ஹீரோ அவர் மீது காதலில் விழுகிறார். அப்படியும் இப்படியுமாக ஹீரோயினையும் காதலில் விழ வைக்கிறார் ஹீரோ.

கீழ் ஜாதியினரை வீட்டில் கூட அனுமதிக்க மறுப்பவர் தான் ‘ஜீவா’வின் தந்தை மாரிமுத்து. இந்த ஜாதி வெறி கொண்ட தந்தையை மீறி ஜீவா-மெஹந்தியின் காதல் ஜெயித்ததா..?? இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

ஜீவாவாக நடித்திருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ், நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். கதைக்கென அவரின் மெனக்கெடல் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இளையராஜாவின் இசையில் இவரது காதல் பயணம் நம்மையும் 90க்கே அழைத்துச் செல்கிறது. காதலுக்காக தந்தையிடம் அடி வாங்கும் காட்சிகள் நம்மை கண்கலங்க வைக்கிறது. கோலிவுட்டில் நிச்சயம் இவர் ஒரு ரவுண்ட் அடிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

நாயகி ஸ்வேதா திருபாதி, மெஹந்தி கதாபாத்திரத்தில் நடித்து நம்மை கட்டிபோட்டுவிட்டார். கண்களை விரித்து காட்டியே நம் அனைவரையும் ரசிக்க வைக்கிறார். வட நாட்டுப் பெண்ணாக நடித்து மெஹந்தி கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். கத்தியை வைத்து விளையாடும் விளையாட்டில் சிலை போல் நின்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார். ஆர் ஜே விக்னேஷ் காமெடி என்ற பெயரில் கடுப்பேற்றுகிறார். வேல ராமமூர்த்தி, அன்கூர் விகால், மாரிமுத்து ஆகியோரின் கதாபாத்திரம் கதைக்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளனர்.

ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் சூப்பர். ‘வெள்ளாட்டு கண்ணழகி’ பாடல் ரிப்பீட் மோட். ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் இளையராஜா பாடல் மனதிற்கு இதம்.

செல்வகுமார் அவர்களின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். 90களிலே நம்மை பயணிக்க வைத்து விட்டார். ராஜு முருகனின் வசனம் ஆங்காங்கே கைதட்ட வைக்கின்றன.

கதையோடு நம்மை பயணிக்க வைக்க ஒரு சில இடங்களில் இயக்குனர் தவறிவிட்டதாக தெரிகிறது. மற்றபடி நிச்சயம் அனைவரும் காணவேண்டிய காதல் படைப்பு தான் ‘மெஹந்தி சர்க்கஸ்’.

சரவண ராஜேந்திரன் ஒரு இயக்குனராக வெற்றி பெற்று விட்டார்.

மெஹந்தி சர்க்கஸ் – காதலின் இன்பம், துன்பம், வலி, பயணம்.

Facebook Comments

Related Articles

Back to top button