
இயக்கம் & தயாரிப்பு : திரவ்
நடிகர்கள்: கிஷோர் குமார், சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், தனன்யா வர்ஷினி, ஜஸ்வந்த் மணிகண்டன்
இசை : சங்கர் ரங்கராஜன்
ஒளிப்பதிவு: தேவராஜ் புகழேந்தி
கதைப்படி,
தனியார் பள்ளியில் பிடி ஆசிரியராக பணியாற்றுகிறார் கிஷோர். இவரது மனைவியாக இருக்கும் சுபத்ராவும் அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள்.
டிவியில் பாட்டு போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பானது கிஷோருக்கு கிடைக்கிறது. இதனால் அவர் அடிக்கடி பாட்டு போட்டியில் பங்கேற்கிறார். பிரபலமாகவும் ஆகிறார். பாட்டு போட்டியில் பங்கேற்பதனால், பள்ளிக்கு அடிக்கடி விடுமுறை எடுக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் அவர் வேலையை இழக்கும் நிலைமையும் ஏற்பட்டு விடுகிறது. இதன்பிறகு, அவர்களது குடும்பத்தில் எதிர்பாராத சம்பவங்கள் சில நடக்கின்றன அது அவர்களை எந்த நிலைக்கு தள்ளியது என்பதே படத்தின் மீதி கதை.

பல படங்களில் வில்லனாகவும் குணசித்திர கதாபாத்திரமாகவும் நடித்து தனது நடிப்பின் திறமையை வெளிக்காட்டி வந்திருந்த கிஷோர் குமார், இப்படத்தில் முழுக்க முழுக்க கதையின் நாயகனாக நடித்து நம்மை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.
படம் முழுக்கவே அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்து அனைவரையும் அசர வைத்திருக்கிறார். ஒரு இடத்தில் கூட கதாபாத்திரத்தை விட்டு விலகாமல் அதனை சரியாக கொண்டு சென்றிருக்கிறார். இவரின் மனைவியாக நடித்த சுபத்ரா பல படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்திருந்தாலும், இந்த படத்தில் கிஷோரின் மனைவியாக படம் முழுவதுமாகவே வந்து செல்கிறார். தனக்கு கொடுக்கப்பட்டதையும் அழகாகவே செய்து முடித்து இருக்கிறார்..
இவர்களின் குழந்தைகளாக நடித்திருந்த இருவருமே நன்றாகவே நடித்திருக்கின்றனர். மேலும், படத்தில் நடித்திருந்த ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன் இவர்களும் கொடுக்கப்பட்ட வேலையை மிகவும் சரியாக செய்திருக்கின்றனர்.

வேறு ஒரு கோணத்தில் சென்று கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் இப்படியான கதைகளும் வந்து அவ்வப்போது ஆசுவாசப்படுத்துவது தற்கால சினிமாவிற்கு நல்லது தான். இருந்தாலும், இந்த கதை ரசிகர்களை எப்படி கவரும் எப்படி அவர்களை ஏற்றுக் கொள்ள வைக்கும் என்பது ஒரு சில கேள்வி எழத்தான் செய்கிறது.
மெலடியை பிடிக்கும் அனைவருக்குமே மெல்லிசை ஒரு நல்ல வருடலாக நிச்சயம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது.





