Spotlightசினிமாவிமர்சனங்கள்

நாய் சேகர் – விமர்சனம் 3/5

வைகைப்புயல் வடிவேலு நாயகனாக நடிக்க சுராஜ் இயக்கத்தில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் நாய் சேகர்.

பல வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிக்கு முனிவர் ஒருவர் நாய்க்குட்டி ஒன்றை வழங்கி, இனி உங்களுக்கு நல்ல காலம் தான் என்று கூறிவிட்டுச் செல்கிறார். அந்த நாய் வந்த நேரம் முதல் அந்த குடும்பத்திற்கு நல்ல நேரம் தொடங்குகிறது. அவர்களுக்கு குழந்தையும்(வடிவேலு) பிறக்கிறது.

ஒருநாள், வீட்டு வேலைக்காரன் அந்த நாயை தூக்கிக் கொண்டு சென்று விட, இவர்கள் குடும்பமே ஏழ்மைப்பட்டு போய் விடுகிறது.

வருடங்கள் உருண்டோட, வடிவேலு ஒரு டீமை வைத்துக் கொண்டு செல்வந்தர்களின் நாய்களை கிட்னாப் செய்து அதில் காசு பார்த்து வாழ்ந்து வருகிறார். உள்ளூரில் மிகப்பெரும் ரவுடியான ஆனந்தராஜின் நாயை திருடி அவரின் பகையை சம்பாதித்துக் கொள்கிறார் வடிவேலு.

ஒருகட்டத்தில், சிறு வயதில் தொலைந்து போன நாயை கண்டுபிடிக்க வெளியூர் செல்கிறார் வடிவேலு.

பலத்த பாதுகாப்போடு இருக்கும் அந்த நாயை மீட்டாரா.? வில்லன்களான ராவோ ரமேஷ் மற்றும் ஆனந்த்ராஜை வடிவேலு எப்படி சமாளித்தார்.? என்பது படத்தின் மீதிக் கதை.

பல வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நாயகனாக களமிறங்கியிருக்கிறார் வடிவேலு. நாய் சேகர் என்ற அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவர் போல் தன்னை மாற்றிக் கொண்டு சேஷ்டைகளை செய்கிறார். ஆனால், அதில் காமெடி இல்லாமல் போனது தான் ஏமாற்றம்.
ரசிகர்களை சிரிக்க படாத பாடுபடுகிறார் வடிவேலு, நமக்கு ஆறுதலானவர் நடிகர் ஆனந்த்ராஜ் மட்டுமே… அவரும் அவரது கூட்டாளிகள் மட்டுமே காமெடியை சற்று தூவிவிட்டு நம்மை சிரிக்க வைத்துவிட்டுச் செல்கிறார்கள்.

வடிவேலுவை கூட ஏற்றுக் கொள்ளலாம், அவர்கள் உடன் வந்த கிங்க்ஸ்லி, சிவாங்கி, மற்றும் பிரசாந்த் இவர்கள் மூவரும் லூட்டிகள் என்ற பெயரில் அடிக்கும் சேஷ்டைகள் “யப்பா… ஆள விடுங்கடா சாமிகளா” என்று தெறித்து ஓடத் தான் தோன்றுகிறது.

ரீ எண்ட்ரீ என்றால் அதற்கான மெனக்கெடலை அதிகமாகவே கொடுத்திருக்கலாம் வைகப்புயலே… ஆனால்.? நல்ல காமெடிக் காட்சிகளை வசனங்களாக எழுதக்கூடிய எழுத்தாளர்களை கூடவே வைத்துக் கொள்ளுங்கள் வடிவேலு சார்…

சந்தோஷ் நாராயணின் இசை நமக்கு சற்று ஆறுதல்.. ஒளிப்பதிவும் கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறது.

அருவருக்கத்தக்க காட்சிகள் எதுவுமின்றி சற்று ரசிக்க வேண்டும் என்றால் தாராளமாக நாய் சேகரை பார்த்து விட்டு வரலாம்… ட்ராபிக் போலீஸ் கெட்-அப் ரசிகர்களை ரசிக்க வைத்தது. அதே கெட்-அப் படம் முழுக்க வைத்திருக்கலாம் என்றும் தோன்றியது.

Facebook Comments

Related Articles

Back to top button