
பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் தி ரூட் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து வழங்கும் ‘குரங்கு பொம்மை’ புகழ் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகியிருக்கும் படம் தான் ‘மகாராஜா’.
இப்படத்தில், விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், நட்டி (நட்ராஜ்), மம்தா மோகன்தாஸ், அபிராமி, அருள்தாஸ், முனிஷ்காந்த், பாய்ஸ் மணிகண்டன், சிங்கம் புலி, உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. இதற்கான விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய விஜய் சேதுபதி, “ எனது திரை பயணத்தில் 50வது படம் ஒரு மைல்கல்லாக நான் பார்க்கிறேன். என்னுடன் பயணித்த இயக்குனர்கள் அனைவருக்கும் நன்றி.
என் சினிமா வாழ்க்கையில் எனக்கு ஒரு புள்ளி வைத்தவர் நடிகர் அருள்தாஸ். அவர் தான் என்னை இயக்குனர் சீனு ராமசாமியிடம் அழைத்துச் சென்றார். அன்று தான் என் வாழ்க்கை ஆரம்பித்தது.
இந்த படத்தில் நட்டி நடித்ததற்கு மிகப்பெரும் நன்றி. அந்த கதாபாத்திரம் இன்னொரு ஹீரோ மாதிரி தான். சிங்கம்புலி மிகவும் பிரமாதமாக நடித்திருக்கிறார். இசையமைப்பாளர், எடிட்டர் அனைவருக்கும் மிகப்பெரும் நன்றி.
அபிராமி அவர்களின் விருமாண்டி படத்தின் மிகப்பெரிய ரசிகன் நான். உன்னை விட பாடலை அதிக முறை கேட்டிருக்கிறேன்.
மகாராஜா பேசப்படும் படமாக இருக்கும். நித்திலனோட கதை ரொம்ப புதுசா இருக்கும். அவரோடு வேலை செய்யும் போது ரொம்ப என்சாய் பண்ணேன். அனுராக் காஷ்யப் இரண்டு முறை தான் பார்த்திருக்கிறேன். எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை அவரிடம் ஓபனாக பேசியிருக்கிறேன். அதற்காக என்னை அவருக்கு பிடித்திருக்கிறது. நான் கூப்பிட்டேன் அதற்காக இந்த படத்திற்குள் வந்தார்.
எனது 50 படங்களின் பயணத்தில் பத்திரிகையாளர்களின் பங்கு அதிகம். அதற்காகவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை விழாவாக எடுத்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றெண்ணினேன். வந்திருந்த அனைவருக்கும் நன்றி.’ என்று கூறினார்.




