Spotlightவிமர்சனங்கள்

ஓ மை டாக் – விமர்சனம் 3/5

ருண் விஜய், இவரது தந்தை விஜயகுமார், அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் என மூன்று தலைமுறை இணைந்து நடித்திருக்கும் படம் தான் “ஓ மை டாக்”. இப்படம் நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. இப்படத்தை சரோவ் சண்முகம் என்பவர் இயக்கியிருக்கிறார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். 2டி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

கதைப்படி,

ஊட்டியில் ஒரு நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து வருபவர் அருண் விஜய். தனது மனைவி மகிமா நம்பியார் மகன் அர்னவ் விஜய், தந்தை விஜயகுமாருடன் வாழ்ந்து வருகிறார்.

தனது மகன் அர்னவ் விஜய்யின் படிப்பு செலவிற்காக தனது வீட்டினை அடமானம் வைத்து கடன் வாங்கி, அதற்கு வட்டி செலுத்தி வருகிறார் அருண் விஜய்.

சுட்டித்தனத்தோடு குறும்புத்தனம் மிகுந்த சிறுவனாக வளர்கிறார் அர்னவ் விஜய்.

இது ஒரு புறம் இருக்க, இந்திய அளவில் நடத்தப்படும் நாய்களுக்கான விளையாட்டுப் போட்டியில் தொடர்ந்து ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றவர் தான் வினய் ராய். சாம்பியன் பட்டத்தை அடைய எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர் வினய்.

ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றால் உலக அளவில் முதலிடம் பிடித்து விடலாம் என்று அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார் வினய். தன்னிடம் இருந்த விலையுயர்ந்த நாய்குட்டி ஒன்று பார்வை இல்லாமல் பிறக்கிறது.

அதை கொன்றுவிடும்படி தனது உதவியாளர்களிடம் கூறுகிறார் வினய். உதவியாளர்களிடம் இருந்த நாய்குட்டி தவறி சென்று அர்னவிடம் தஞ்சம் அடைந்து விடுகிறது. அர்னவ், அந்த நாய்குட்டிக்கு அடைக்கலம் கொடுத்து தன்னிடம் வைத்துக் கொள்கிறார். அதற்கு சிம்பா என பெயரும் சூட்டுகிறார்.

சிம்பாவும் வளர்கிறது. சிம்பாவின் கண்பார்வையை அர்னவ் தனது நண்பர்கள் முயற்சியால் சரி செய்கிறார். எதிர்பாராதவிதமாக இந்திய அளவில் நடைபெறும் நாய்கள் போட்டியில் வினய் வளர்த்த நாயோடு அர்னவ் வளர்த்த சிம்பாவும் போட்டி போடும் நிலை வருகிறது.

தனது பணத்தால் சிம்பாவை விலைக்கு வாங்க நினைக்கிறார் வினய். அருண் விஜய்யிடம் அது நடக்காமல் போக, தனது வில்லன் ஆட்டத்தை ஆடுகிறார் வினய். அர்னவ்விற்கு கை கொடுக்கிறார் அருண் விஜய். இறுதியாக போட்டியில் ஜெயித்தது யார்.? அருண் விஜய்யின் வீட்டு கடன் பிரச்சனை என்னவானது.? என்பதே படத்தின் மீதிக் கதை.

வழக்கம்போல் அருண்விஜய் தனது மிடுக்கான கட்டுடலோடு தனது நடிப்பிலும் அசத்தியிருக்கிறார். எமோஷ்னல் காட்சிகளில் மட்டும் சற்று மீட்டர் குறைத்திருக்கலாம் என்று தோன்றியது. நாயகி மகிமா நம்பியார் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து பாசம் ஊட்டியிருக்கிறார்.

கதையின் நாயகனாக வரும் அர்னவ் விஜய் தனது முதல் படம் என்பது போல் இல்லாமல் அழகான முகத்தைக் கொண்டு பல பாவனைகளை அவ்வப்போது தெளித்து படத்திற்கு உயிரூட்டியிருக்கிறார். அவர் செய்யும் குறும்புத்தனம் ரசிக்கும்படியாகவே உள்ளது. சிம்பாவோடு இவர் செய்யும் சேட்டைகள் அனைத்தையும் ரசிக்கலாம். க்ளைமாக்ஸ் காட்சியில் வைத்த எமோஷ்னல் காட்சிகள் அனைவரையும் ஈர்த்தது. விஜய்குமார், அருண் விஜய் என நடிப்பு சாம்ராட் வரிசையில் அர்னவ் விஜய் இணைவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை…

தெளிவான குடும்ப பாங்கான, குழந்தைகளுக்கான, சமூகத்துக்கான கதைகளை தேர்ந்தெடுத்து தயாரித்து வரும் சூர்யா & ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்கு மற்றுமொரு மணிமகுடமாக இணைந்திருக்கிறது “ஓ மை டாக்”.

குழந்தைகள் மற்றும் “Pet Lovers” இந்த படத்தை தவறாமல் பார்க்கலாம். பல இடங்களில் உங்களின் மனதளவில் இணைவார்கள் இந்த அர்னவும் சிம்பாவும். அர்னவோடு நடித்த குட்டிஸ் அனைவரும் ரசிக்க வைத்துள்ளனர்.

வில்லன் கதாபாத்திரத்தில் வினய். இதற்கு முன் இவர் நடித்த வில்லன் கதாபாத்திரங்கள் அனைத்தும் வலுவான கதையோடு பின்னப்பட்டிருக்கும். இப்படத்தில் வினய், கதையோடு ஒட்டாமல் சற்று தள்ளி நின்றது போன்ற உணர்வு.

மேலும், படத்திற்கு ஏன் இந்த இருவர் என்று அடிக்கடி கேட்க வைத்தது, வினய்யோடு வந்த இரு கோமாளிகள் கதாபாத்திரம் தான். எந்த இடத்திலும் இவர்களால் சிரிப்பை கொண்டு வர முடியவில்லை.

நிவாஸ் கே பிரசனாவின் பாடல்கள் மற்றும் பின்னனி இசை ரசிக்க வைத்திருக்கிறது. கோபிநாத் அவர்களின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து அளித்திருக்கிறது. ஊட்டியில் உள்ள இயற்கை காட்சிகளை ரசிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல் சிம்பா மற்றும் அர்னவ் விஜய்யின் குறும்புத்தனத்தை ரசிக்கும்படியாக காட்சியமைத்திருக்கிறார் கோபிநாத்.

அழகான ஒரு வாழ்வியலை படமாக்கி படைப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சரோவ் சண்முகம்.

ஓ மை டாக் – சிம்பா அர்னவோடு ஒரு டூர் போகலாம்.. ரசிக்கலாம்.. 

Facebook Comments

Related Articles

Back to top button