இயக்குனர் முருகன் இயக்கத்தில் வெற்றி, அக்ஷயா கந்தமுதன், சாப்ளின் பாலு, சாய் தீனா, முருகன், வினு பிரியா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “பகலறியான்”.
இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் விவேக் சரோ. ஒளிப்பதிவு செய்திருக்கிறார் அபிலாஷ்.
ரிஷிகேஷ் எண்டர்டெயின்மண்ட் சார்பில் லதா முருகன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
படத்தொகுப்பினை குரு பிரதீப் கவனித்திருக்கிறார். படத்தின் தலைப்பின் மூலமாக திரும்பி பார்க்க வைத்த படக்குழு, படத்திற்குள் என்ன மாதிரியான வித்தைகளை கையாண்டிருக்கிறார்கள் என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்.
நாயகன் வெற்றி, சிறு வயதில் தனது அப்பாவை கொலை செய்துவிட்டு சிறை தண்டனை அனுபவித்து வெளியே வந்தவர். சிறு சிறு அடிதடி வேலைகளை தனது நண்பனோடு சேர்ந்து செய்து வருபவர்.
நாயகி அக்ஷயா கந்தமுதனோடு இருதலை காதல் ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. கொலை செய்த காரணத்தால் நாயகி அக்ஷயாவின் தந்தை மகளை வெற்றிக்கு திருமணம் செய்து வைக்க மறுக்கிறார்.
வீட்டை விட்டு ஓடி வந்து விடுகிறார் அக்ஷயா. இரவு கடந்ததும் மறுநாள் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார் வெற்றி. இது ஒருபுறம் இருக்க, தனது தங்கையை காணவில்லையே என்று கேங்க்ஸ்டராக வரும் முருகன் மற்றொரு பக்கம் தேடி வருகிறார்.
வெற்றியை கொலை செய்ய ஒரு கும்பலும், முருகனை கொலை செய்ய கும்பலும் இருக்கிறது.
இந்த இரு கதைகளும் சங்கமிக்கும் இடமே க்ளைமாக்ஸ்.
நாயகன் வெற்றி, ப்ளூ நீல கண்ணோடு தனது மிரட்டலான லுக்கில் கதாபாத்திரமாக மாறி கதைக்கேற்ற நாயகனாக ஜொலித்திருந்தார். ஒரு சில இடங்களில் இன்னும் கொஞ்சம் எபெக்ட் போட்டிருக்கலாமே என்று தோன்றினாலும், பெரிதான குறை சொல்லும்படியாக எதுவும் செய்யவில்லை நாயகன் வெற்றி.
அதிலும் வில்லனாக தோன்றிய இயக்குனர் முருகன், அக்கதாபாத்திரமாக மாறி மிரட்டியிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கிறார். இவர் வில்லனா அல்லது ஹீரோவா என்று சொல்லும் அளவிற்கான கதாபாத்திரம் இவரோடது. க்ளைமாக்ஸ் காட்சியில் தனது தங்கை மீதான பாசத்தை வெளிக்காட்டும் இடத்தில் அப்ளாஷ் சொல்லும் அளவிற்கான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு வித்தியாசமான தோற்றத்தில் திரையில் தோன்றிய நடிகர் தான் சாப்ளின் பாலு. காமெடி கதாபாத்திரம் செய்து நடித்து வந்த இவர், இப்படத்தில் குணச்சித்திர பாத்திரத்தில் தோன்றி அசத்தியிருக்கிறார். தான் ஒரு சீனியர் என்பதை ஒரு சில இடங்களில் காட்டாமல் இல்லை.
நாயகி அக்ஷயா கந்தமுதன், அழகாகவும் காட்சிகளில் அளவாகவும் நடித்து நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார். தனது காதலனின் உண்மை முகம் கண்டதும் தனது கண்களாலும் கண்ணீராலும் ஆயிரம் உணர்வுகளை சொல்லும் அளவிற்கான நடிப்பை தனது முக பாவனையில் கொடுத்த காட்சி அழகானது.
மற்றொரு நாயகியாக தோன்றி அசத்திய வினு பிரியாவின் நடிப்பும் பாராட்டுக்குறியது. ஒரு சில காட்சி தான் என்றாலும், சாய் தீனாவின் நடனம் படம் பார்ப்பவர்களை நன்றாகவே ரசிக்க வைத்திருக்கிறார். பாஸ்கர் கதாபாத்திரத்தில் வந்தவரும் மிரட்டலான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
ஒரு இரவில் நடக்கும் கதையை மிக வேகமாக செல்லும்படியான திரைக்கதை அமைத்து அதை சரியாக பூர்த்தியும் செய்திருக்கிறார் இயக்குனர் முருகன். கேங்க்ஸ்டரின் வீரம், பாசம் ஒரு ரெளடியின் காதல், ஈரம் என பல கோணங்களின் முகங்களை இரண்டு மணி நேரத்தில் கூறி அதில் வென்றும் காட்டியிருக்கிறார்.
முதல் பாதி எங்கப்பா போகுது கதை என கேட்க வைத்தாலும், இரண்டாம் பாதியின் மீதிக் கதை சபாஷ் சொல்ல வைத்திருக்கிறது.,
படத்திற்கு பக்கபலமாக நின்றது பின்னணி இசை தான். ஒவ்வொரு இடத்திலும் தனக்கான யுனிக்கான இசையை ஆங்காங்கே நன்றாகவே தெளித்திருக்கிறார் இசையமைப்பாளர். இவர் கோலிவுட்டில் நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவார்.
ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக காட்டியிருக்கிறது. இரவில் மட்டுமே நடக்கும் கதை என்பதால் வெளிச்சத்தை அளவாக கொடுத்து திரையில் அழகாக கொண்டு சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
எடிட்டிங் ஷார்ப்..
பகலறியான் – வேகம்