Spotlightவிமர்சனங்கள்

பயணிகள் கவனிக்கவும் – விமர்சனம் 4/5

எஸ் பி சக்திவேல் இயக்கத்தில் விதார்த், கருணாகரன், லக்‌ஷ்மி ப்ரியா சந்திரமெளலி, மாஷும் ஷங்கர், பிரேம் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “பயணிகள் கவனிக்கவும்”. நேரடியாக “ஆஹா” ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது இப்படம்.

கதைப்படி,

நாயகன் விதார்த் வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத ஊனமுற்றவராக வருகிறார். இவரது மனைவியாக வரும் லக்ஷ்மி ப்ரியா வாய் பேச முடியாதவராக வருகிறார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். மிகவும் எளிமையான நடுத்தர குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் இவர்கள்.

அடுத்ததாக, மற்றொரு நாயகனாக வரும் கருணாகரன் வெளிநாட்டில் வேலை பார்த்து விடுமுறைக்கு சென்னை வருகிறார். குடும்பம் மீது மிகுந்த பாசம் கொண்ட கருணாகரன், தான் காதலித்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார்.

எந்த நிகழ்வு நடந்தாலும் அதை சமூக வலைதளங்களில் புகைப்படமாகவும், வீடியோவாகவும் பதிவேற்றம் செய்து வருபவர் கருணாகரன். ஒருநாள், அசதியாக மெட்ரோ இரயிலில் படுத்துறங்கிய விதார்த்தை, போதை ஆசாமி என தவறாக சமூக வலைதளங்களில் கருணாகரன் பதிவேற்றம் செய்ய, அது இணையத்தில் வைரலாகி விடுகிறது.

இந்த பதிவால் விதார்த்தின் வாழ்க்கை எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டது.? அதன் பிறகு கருணாகரன் வாழ்க்கையில் என்ன நடந்தது.? என்பதே படத்தின் மீதிக் கதை.

விதார்த் தேர்ந்தெடுத்த அக்மார்க் நடிகராக தெரிகிறார். மைனா படத்தையும் மிஞ்சிய ஒரு நடிப்பை இப்படத்தில் கொடுத்திருக்கிறார் … விதார்த் வாழ்வில் சிறந்த பட வரிசையில் இந்த படம் தான் என்றுமே முதலிடம் வகிக்கும். படம் ஆரம்பம் முதல் இறுதிவரை அப்படியொரு நடிப்பை கொடுத்து அனைவரையும் ஈர்த்திருக்கிறார் விதார்த். அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியில் அனைவரது கண்களிலும் கண்ணீரை எட்டிப் பார்க்க வைத்திருக்கிறார்.

வாழ்த்துகள் மற்றும் நன்றி விதார்த் சார்… இப்படியொரு படைப்பை மக்களுக்கு நடித்து கொடுத்ததற்காக… இல்லை… இல்லை… வாழ்ந்து கொடுத்ததற்காக… இப்படத்திற்காக விதார்த் தேசிய விருது வாங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இவரின் கதாபாத்திரத்திற்கு இணையாக லக்‌ஷ்மி ப்ரியா சந்திரமெளலியும் தனது சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

கருணாகரன் வழக்கம்போல, போலீஸிடம் சிக்கிய திருடன் போன்று அந்த முழிகொண்டு படம் முழுக்க நம்மை ரசிக்க வைத்திருக்கிறார். அவருக்கான கதாபாத்திரத்தை அவர் செவ்வனே செய்திருக்கிறார்.

சீனியர் நடிகரான கவிதாலயா கிருஷ்ணன், விதார்த் மகனிடம் பேசும் போது சீனியர் நடிகருக்கு உண்டான நடிப்பை அக்காட்சியில் கச்சிதமாக செய்திருக்கிறார். கருணாகரணின் அம்மாவாக நடித்த ஸ்டெல்லா ராஜ், தனது கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். கருணாகரனின் காதலியாக வரும் மாஷும் ஷங்கர் அழகு சிரிப்புக் கொண்டு அழகு தேவதையாக காட்சி தந்திருக்கிறார்.

மற்றபடி, பிரேம் குமார், ஆர் ஜே சரித்திரன், விதார்த்தின் பிள்ளைகளாக நடித்த இருவர் என படத்தில் நடித்த அனைத்து கேரக்டர்களும் கதாபாத்திரத்தோடு ஒன்றியிருந்தது படத்திற்கு மிகப்பெரும் பலம் தான்.

இயக்குனர் எஸ் பி சக்திவேல், அனைத்து நடிகர்களிடமும் இருந்து கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அந்த நடிப்பை கனக்கச்சிதமாக வாங்கியிருக்கிறார். கதைக்கேற்ற கதாபாத்திரங்களின் தேர்வு முதல் அனைத்தையும் கவனமாக செய்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி உண்மையா என்பதை ஒன்றுக்கு பல முறை அலசி ஆராய்ந்து பகிருங்கள். அப்படி அது உண்மையான செய்தியாக இல்லாமல் இருக்கும்பட்சத்தில் அதன் விளைவு எப்படியாக இருக்கும் என்பதை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியிருக்கும் படம் தான் இந்த “பயணிகள் கவனிக்கவும்”.

சமூகத்தில் அன்றாடம் நடக்கும் ஒரு நிகழ்வை கையில் எடுத்த இயக்குனர் ஒவ்வொருவரின் கவனத்தையும் ஈர்க்குபடியாக திரைக்கதை அமைத்து இப்படம் மூலம் கொடுத்திருக்கிறார்.

இயக்குனருக்கு ஆகப்பெரும் பாராட்டுகளும் நன்றிகளும்.,

க்ளைமாக்ஸ் காட்சியில், படம் பார்ப்பவர்களின் ஒவ்வொருவரின் கண்களிலும் எட்டிப்பார்க்கும் ஒரு சிறுதுளி நீரே இப்படத்தின் வெற்றிக்கு அடித்தளம்.

பாண்டிக்குமார் அவர்களின் ஒளிப்பதிவு, ரசிக்க வைத்தது. ஷமந்த் நாக் அவர்களின் பின்னணி இசை, படத்தின் கதையோடு நாமளும் சேர்ந்து நகர்வதற்கு உறுதுணையாக இருந்தது. சதிஷ்குமார் அவர்களின் படத்தொகுப்பு கச்சிதமான அளவு.

பயணிகள் கவனிக்கவும் – கட்டாயம் கவனிக்கவும்

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close
Close