
வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா ரவி, ரோஹினி நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ராக்கி”.
கதைப்படி,
சுமார் 17 வருடங்கள் சிறை வாசம் அனுபவித்து வெளியே வருகிறார் ராக்கி (வசந்த் ரவி). தவறி சென்ற தனது தங்கை ரவீனாவை தேடி அலைகிறார்.
ராக்கியை, தொடர்ந்து துன்புறுத்த வேண்டும் என்று அவரை பின் தொடர்கிறது மணிமாறன்(பாரதிராஜா) டீம்.
ஒருவழியாக ரவீனாவை கண்டுபிடிக்கிறார் ராக்கி. கொஞ்ச நேரத்திலேயே ரவீனாவை ராக்கியின் கண்முன்னே கொலை செய்து விடுகிறார்கள் மணிமாறன் டீம்.
ரவீனாவின் மகளை வளர்ப்பது தான் இனி தன்னுடைய கடமை என்று எண்ணிக் கொண்டு போகும் வழியில் குறுக்கே மணிமாறன் வந்து நிற்கிறார்.
மணிமாறனா.? ராக்கியா.? இறுதியில் யார் வென்றார்கள்.. கூடவே இருந்த ராக்கியை ஏன் கொல்லத் துடிக்கிறார் மணிமாறன் என்ற கேள்விகளுக்கெல்லாம் மீதி படத்தில் பதில் வைத்திருக்கிறார் இயக்குனர்.
நாயகன் வசந்த் ரவி, தனது கண்ணைக் கூட இமைக்காமல் தனது முரட்டுத்தனமான நடிப்பில் அசரடித்திருக்கிறார். ஒரே ஷாட்டில் 5 நிமிட காட்சியை எந்த ஒரு பிழையும் இல்லாமல் ரசிக்க வைக்கும்படியான நடிப்பை கொடுத்திருக்கிறார் வசந்த்.
தனது தாயையும் தனது கர்ப்பிணி தங்கையையும் கொன்ற அரக்கனை கொன்றே தீர வேண்டும் என்று ஆவேச வசனம் பேசாமல் அமைதியாக இருந்து, கொலை செய்யும் நேரத்தில் ஆக்ரோஷத்தை காட்டி அனைவரையும் மிரள வைத்திருக்கிறார்.
மணிமாறன் கதாபாத்திரத்தில் பாரதிராஜா வில்லத்தனத்தில் முத்திரை பதித்திருக்கிறார். ஸ்டைல், மாஸ் , வசன உச்சரிப்பு, கோபம் , ஆக்ரோஷம் என அனைத்திலும் தனக்கே உரித்தான பாணியில் அசரடித்திருக்கிறார்… அதிலும் அவருடன் வரும் தன்ராஜ் கேரக்டர் படம் பார்ப்பவர்களின் கோபத்திற்கு ஆளாகிறார்.. இப்படியான உடம்பிற்குள் இப்படி ஒரு நடிப்பா என ஆச்சர்யப்படுத்தி விட்டார்…
ராக்கியின் தங்கையாக வாழ்ந்திருக்கிறார் ரவீனா. ஒரு சில காட்சிகளே என்றாலும் மனதில் நிற்கும்படியாக வந்து செல்கிறார்.
ரவி வெங்கடராமன், தன்ராஜ் கேரக்டரில் நடித்த அஷ்ராஃப், நட்ராஜ் கேரக்டரில் நடித்த ஜெயகுமார், பூ ராமு, அனிஷா ஆகியோரின் நடிப்பும் மிரட்டல் தான்.
முதல் பாதியில் காட்சி நகர்வில் கொஞ்சம் மந்தம் என்றாலும், இரண்டாம் பாதியில் சற்று ஆறுதலாக நிற்கிறது. படத்திற்கு மிகப்பெரும் பலம் ஒளிப்பதிவு & தளம்..
தனித்துவமான ஒரு மேக்கிங்கை கொடுத்து ஹாலிவுட் தரத்திற்கு இணையான ஒரு படத்தை கொடுத்திருக்கின்றனர் படக்குழுவினர்.
ஸ்ரேயாஸ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு வேற லெவல்.. ராமு தங்கராஜின் ஆர்ட் வேலைப்பாடுகள் கூர்ந்து கவனிக்க வைத்துவிட்டன. தர்புகா சிவாவின் பின்னனி இசை கதைக்கேற்ப ஓட்டம் எடுத்துள்ளது.
படம் ஏ சான்றிதழ் என்பதால், இரத்தம், கெட்ட வார்த்தைகள், என ஏகத்துக்கும் அதிகமாகவே கொட்டி கிடக்கிறது.
கழுத்தை அறுப்பது, கத்தியை எடுத்து சதக் சதக் என குத்துவது என பார்ப்பவர்களை “ப்ப்ப்பா” என சொல்லும் அளவிற்கு காட்சிகள் அனைத்தும் பயங்கரம்.
க்ளைமாக்ஸ் காட்சி யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்… கழுகை தேடி அலையும் கூட்டம்.. அந்த கழுகு கடைசியாக செய்யும் வேலை… மாஸ்.
ராக்கி – கவனம் தேவை.. ரத்த வாடை அதிகம் கொண்ட பகுதி.. துணிச்சல் இருப்பவர்கள் ரசிக்கலாம்.





