
சிபி சத்யராஜ், நிகிலா விமல் நடிக்க அறிமுக இயக்குனர் வினோத் இயக்க விஜய் K செல்லையா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “ரங்கா”.
படத்தின் ட்ரெய்லரில் காட்டப்பட்ட அந்த ஒளிப்பதிவின் பிரம்மிப்பு படம் முழுக்க இருந்ததா இல்லையா என்பதை விமர்சனம் மூலம் காணலாம்.
கதைப்படி,
நாயகன் சிபி சத்யராஜ் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவருக்கு சில நேரங்களில் தன்னை அறியாமலேயே அவரின் வலது கை அவரது பேச்சை கேட்காமல் செயல்படும். இது ஒருவகையான நோய் என படத்தில் கூறப்படுகிறது. கையில் “Smiley” பந்து வைத்திருந்தால் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கும்.
இந்நிலையில், சிபி சதயராஜின் அலுவலகத்தில் நிகிலா புதிதாக பணிக்கு சேர்கிறார். அதற்கு பிறகு தான் சிபிராஜ்ஜிற்கு தெரிகிறது நிகிலா தனது சிறுவயது தோழி என்று. அதன்பிறகு நட்பு காதலாக மாற, இருவீட்டாரின் சம்மதத்தோடு இவர்களுக்கு திருமணமும் நடைபெறுகிறது.
திருமணம் முடிந்த கையோடு இருவரும் ஹனீமூனுக்கு மணாலி செல்கின்றனர். அங்கு ஒரு தனியார் ஹோட்டலில் தங்குகின்றனர். இரண்டு தினங்களுக்குப் பிறகு அவர்கள் தங்கிய அறையில், ரகசிய கேமரா இருப்பதை கண்டறிகிறார் சிபி.
அதன்பிறகு அங்கு என்ன நடந்தது என்பதே படத்தின் இரண்டாம் பாதி..
நாயகன் சிபி, அவருக்கு இது வழக்கமான படமாக இல்லாவிட்டாலும், சற்று வித்தியாசமான கதாபாத்திரமாக தான் இது அமைந்துள்ளது. இருந்தாலும், சத்யா, கபடதாரி படங்களில் பார்த்த ஒரு விறுவிறுப்பை “ரங்கா”வில் கொடுக்க சிபி தவறியிருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.
சிபி சார் அவர்களே ஒரு பார்வையாளனின் குரலாக ..
“உங்களிடம் இருந்து இன்னும் நிறைய உழைப்பை எதிர்பார்க்கிறோம். அதை விரைவில் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில்… காத்திருக்கிறோம்”
நாயகி நிகிலா விமல்,அழகு தேவதையாக காட்சியளித்திருக்கிறார். தனக்குகொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை க்யூட்டாக கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.
வில்லனாக நடித்த மோனீஷ் ரஹேஜா சரியான தேர்வு என்றாலும், பெரிதான ஈர்ப்பை கொடுக்கவில்லை. மேலும், நாயகனும் வில்லனும் இறுதியாக சந்திக்கும் போது சண்டைக் காட்சிகள் பெரிதாக இருக்கும் என்று நம்பியிருந்த பார்வையாளர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்.
படத்தின் கதையில் இன்னும் பெரிதாகவே இயக்குனர் வினோத் மெனக்கெட்டிருக்கலாம். பலவீனமான கதை படத்திற்கு சற்று பெரிதான சறுக்கலை கொடுத்திருக்கிறது. படத்திற்கு பெரிதான ஒரே ஆறுதல் ஒளிப்பதிவு மற்றும் திரைக்கதை தான். கார் சேசிங் காட்சிகள் மற்றும் ஹோட்டல்களில் நடக்கும் சண்டைக் காட்சிகள் என அனைத்திலும் ஒளிப்பதிவை பிரமாதமாக கொடுத்திருக்கிறார்கள். அர்வியின் ஒளிப்பதிவை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.
சதீஷ் மற்றும் ஷாராவின் காமெடி காட்சிகள் எந்த இடத்திலும் ரசிக்க வைக்கவில்லை.
மணாலியில் கடும் குளிரில் படப்பிடிப்பை நடத்தி முடித்ததற்காகவே படக்குழுவினரை பெரிதாக பாராட்டலாம்.
படத்தின் நடுவே கொண்டு வந்த ராஜாவின் கதை ரசிக்கும்படியாக இருந்தது.
ரங்கா – மணாலி த்ரில்லிங் பயணத்தை ஒரு முறை கண்டு ரசிக்கலாம்…