Spotlightவிமர்சனங்கள்

ரேகை – விமர்சனம் 3.5/5

பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் நாவலில் இருந்து எடுக்கப்பட்டு தினகரன் அவர்களால் இயக்கப்பட்ட ஒரு வெப் சீரிஸ் தான் இந்த “ரேகை”. இந்த சிரீஸ் ZEE5 தமிழில் வரும் 28 முதல் ஸ்ட்ரீமாகிறது.

சிங்காரவேலன் இதனை தயாரித்திருக்கிறார். ஆர் எஸ் ராஜ் பிரதாப் இசையமைத்திருக்கிறார். மகேந்திரா ஆர் ஹென்றி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

துரை படத்தொகுப்பு செய்திருக்கிறார். இந்த தொடரில் பாலா ஹாசன், பவித்ரா ஜனனி, வினோதினி வைத்யநாதன் உள்ளிட்ட பலரும் இந்த தொடரில் நடித்திருக்கின்றனர்.

போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக வருகிறார் பாலா ஹாசன். அதே ஸ்டேஷனில் பவித்ரா ஏட்டாக இருக்கிறார். இருவருக்கும் காதல் ஓடுகிறது. காவல் நிலையத்தில், கல்லூரி மாணவர் ஒருவரை ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸாக ஆக்கி தன்னோடு கூடவே வைத்திருக்கிறார் பாலா. அவரை தனது தம்பி போல பார்த்துக் கொள்கிறார் பாலா.

இந்நிலையில், ஹாஸ்டல் பாத்ரூமில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். இது பெரும் மன உலைச்சளைக் கொடுக்கிறது பாலாவிற்கு.

இந்த சமயத்தில், ட்ரை சைக்கிளில் ஒருவர் செல்ல, சந்தேகப்படும் பாலா அவரை விரட்டிச் செல்கிறார். அவர் பாலத்தில் இருந்து கீழே விழுந்து இறந்தும் விடுகிறார். அவர் ஓட்டி வந்த ட்ரை சைக்கிளை கைப்பற்றி பார்க்கும் போது, அதில் வெட்டப்பட்ட கைகள் கிடக்கின்றன.

இதனால், அதிர்ச்சியடையும் பாலா, அதனை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்புகிறார். வெட்டப்பட்ட கையில் இருக்கும் ரேகையை வைத்து யார் அந்த நபர் என விசாரிக்கும் போது, அந்த ரேகை நான்கு நபருடன் ஒத்துப்போவதாகவும் அந்த நால்வரும் இறந்து விட்டதாகவும் அந்த நால்வரில் மூவர் ஒரே நாளில் விபத்து நடந்து போல் இறந்ததையும் கண்டறிகிறார் பாலா.

ஒரு மனிதனுக்கு இருக்கும் ரேகை வேறு யாருக்கும் இருக்காதே என்று அறிந்த பாலா, இறந்த நால்வரை விசாரிக்க புறப்படுகிறார்.

இவர் செல்லும் வழியெல்லாம் இவரை கொலை செய்ய திட்டமிடுகிறது கும்பல். இறுதியில் இறந்து போன நால்வருக்கும் என்ன சம்மந்தம்.? தனது தம்பியாக இருந்தவர் எப்படி இறந்தார்.? இதற்கு பின்னார் யார் இருக்கிறார்.? எதற்காக இந்த கொலைகள் அரங்கேறியது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இன்வஸ்டிகேடிவ் த்ரில்லராக வந்திருக்கும் தொடர் தான் இந்த “ரேகை”.

இந்த தொடருக்கு இவர் தான் சரியாக பொருத்தம் என்று பாலாவை தேர்ந்தெடுத்த இயக்குனருக்கு ஒரு வாழ்த்துகளும் பாராட்டுகளும். வசன உச்சரிப்பு, நடிப்பு, விசாரிக்கும் முறை என சினிமா போலீஸாக தென்படாமல் ஒரிஜினல் போலீஸாகவே தெரிந்தார் பாலா.

மனதளவில் மட்டுமல்லாது உடல் உழைப்பையும் அதிகமாகவே கொடுத்திருக்கிறார் பாலா. ஏட்டுகேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் பவித்ரா. ஆனால், இருவருக்குமிடையேயான காதலை சரியாக காட்சிப்படுத்த தவறியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

பரபரவென கதையை நகர்த்திச் சென்றதில் வென்றிருக்கிறார் இயக்குனர். கதை தனது பாதையை விட்டு மெடிக்கல் க்ரைம் த்ரில்லராக பயணப்படும் இடத்தில் நன்றாகவே அதன் பயணத்தைக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர்.

அடுத்து என்ன நடக்கும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை கொடுத்துக் கொண்டேச் செல்கிறார்கள். கொலைக்கான காரணம் தெரிய வரும் போது தொடர் பார்ப்பவர்களுக்கே மிகப்பெரும் ஷாக்கை கொடுத்துவிடுகிறார்கள். இப்படியெல்லாம் செய்வார்களா என்று வியக்க வைக்கும் அளவிற்கான கதையாக நகர்கிறது ரேகை.

தொடரில் நடித்த மற்ற கதாபாத்திரங்களும் தங்களது நடிப்பை அளவாக கொடுத்து கைதட்டல் வாங்கிச் செல்கிறார்கள். வினோதினி வைத்யநாதன் கதாபாத்திரத்தை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். அவர் தனது கேரக்டரை மிகவும் நேர்த்தியாக செய்து முடித்திருக்கிறார்.

இருந்தாலும் ஒரு சில இடங்களில் இயக்கத்தின் தடுமாற்றத்தை சற்று உணர முடிந்தது.

பின்னணி இசையில் நன்றாகவே கவனம் செலுத்தி இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஆர் எஸ் ராஜ் பிரதாப். ஒளிப்பதிவும் மிகப்பெரும் பலம் தான்.

ராஜேஷ்குமார் நாவலுக்கு ஒரு உயிர் கொடுத்தாற் போல, தனது இயக்கத்தின் மூலம் இத்தொடரை பரபரப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர். ராஜேஷ்குமார் நாவலை விரும்பும் அனைவருக்குமே இத்தொடர் முழு திருப்தியை கொடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை..

ரேகை – பரபரப்பான த்ரில்லர் பயணம்…

Facebook Comments

Related Articles

Back to top button